"அவள்" ஒரு தொடர் கதை ... : தடுமாற்றம்
பாகம் இரண்டு : தடுமாற்றம்
"உங்களுக்கு என்ர தங்கச்சியைத் தெரியுமா? உங்க ஸ்கூல் தான்." அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு சங்கீதமாய் ஒலித்தது அவனது குரல்.
என்னதான் சங்கீதம் வருசக்கணக்கா பழகி இருந்தாலுமே ஒரு ஆணின் குரல் இவ்வளவு இனிமையாய் இருக்க முடியுமா என்ன. சில சங்கீத வித்துவான்கள் நாலாம்கட்டை எண்டு சொல்லி அடித்தொண்டையில் கரகரப்பிரியா பாடுகையில் கேட்கப் பிடிக்காமல் எழுந்து வந்திருக்கிறாள். இவன் நாள் முழுக்கப் பாடினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருக்கே. சின்ன வயசிலையே அம்மா தேனும் பாலும் குடுத்து வளத்திருப்பா போல. "அவ பெயர் ருக்தா.. அனு.." அவன் சொல்லலாமா விடலாமா எண்டு யோசிப்பது போல் தெரிந்தது.
"தெரியாது!" என்றபடி அருகிலிருந்த வயலினை எடுத்து ஷட்ஜ நரம்பை மெலிதாய்த் தட்டினாள். எத்தனை நாள் இருக்கும் இதை மீட்டி. ஊரில ஒண்டுக்கு ரெண்டு வயலின் இருந்தது. ஒண்டு ஜேர்மன், சின்ன வயசில பழக பக்கத்து வீட்டு அக்காவிடம் செக்கன்ட் ஹாண்டா வாங்கினது. அதிலைதான் தத்தித் தத்தி மூன்றாம் grade வரை முடிச்சது. அதன் பின் புதுசா எடுத்தது சீனா வயலின். எங்க செஞ்சதென்டாலும் புதுசெல்லே, "பள பள" எண்டு பார்க்க நல்லா இருக்கும். நாலாவது தரம் எடுக்க எப்படியும் இரண்டு வருஷம் பழக வேண்டும் எண்டு டீச்சர் சொல்லியிருந்தா. அதனால இப்ப என்ன அவசரம் எண்டு அடிக்கடி வாசிக்கிறதோ இல்லையோ சும்மா எடுத்து தொட்டுப் பாத்திட்டு வைச்சிடுறது.
பிறகு தொண்ணூத்தஞ்சில இடம்பெயரேக்க ஆயுதம் மறைச்சுக்கொண்டுவாறம் எண்டு நினைச்சு சுட்டுடுவான்கள் எண்ட பயத்திலோ என்னமோ அப்பா எல்லாத்தையும் கட்டி கல்லுவத்தில அப்பப்பா வீட்ட வைக்கச் சொல்லிட்டார். அவள் கேட்டிருந்தால் மறுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவள் பிடிவாதம் தான் ஊரறிந்ததே. ஒன்று வேண்டும் எண்டு முடிவெடுத்தாள் எண்டா சோறுதண்ணி வாயில படாது. இப்ப கூட ஊரில இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில இருந்த அவர்களைப் பார்க்க மூன்றுநாள் அவசர லீவில வந்திருந்த அப்பாவை அழுது அடம்பண்ணி தன்னுடன் கூட்டிப் போக வைத்திருந்தாள். அதனாலேயோ என்னமோ தான் போகேலாத மூஞ்சூறு இதைவேற காவணுமா எண்டு விட்டிட்டாள்.
எப்போதெல்லாம் அந்த நாட்களை நினைத்தாலும் வயிற்றில் புளியக்கரத்துவிட்ட மாதிரி ஒரு உணர்வு வருவதைத் தடுக்க முடிவதில்லை. ஒருவேளை அன்று மட்டும் அவளது பிடிவாதம் தோற்றுப் போயிருந்தால், கண்தெரியாத மாமாவையும், வயசுபோன அம்மமாவையும் கூட்டிக்கொண்டு அவளும் அம்மாவும் சில தினங்களுக்குப் பிறகு நடந்த அந்த பாரிய இடப் பெயர்வை எப்படி சமாளித்திருப்பர்? நினைச்சுப் பாக்கவே பயங்கரமாய் இருந்தது. ஒருவேளை எல்லோரையும் தவற விட்டு, இல்லை இன்னொரு கிருஷாந்தியாய்.. இதயம் படபட என்று அடித்துக் கொண்டது. நன்றாக மூச்சை உள்ளே இழுத்து சிறிது நேரத்தின் பின் சீராகவிட்டு சமாதானப் படுத்திக்கொள்ள முயன்றாள். கைகள் லேசாக நடுங்கத்தொடங்கியிருந்தன. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
இங்க, கொழும்பு வந்து இப்ப ரெண்டு மூண்டு வருசமாச்சு, அவளின் வயலின் எந்த நிலையில் இருக்குதோ தெரியேல்ல. இண்டைக்கு எப்படியாச்சும் ஒரு தரமாவது இதில வாசிச்சுப் பாத்துடணும்.
"ஸா.. பா.. ஸா.."
"யாரது வயலினை எடுத்தது..? சுதா, கொஞ்சம் உதுகளைக் கவனியும். வயலினைப் பழுதாக்கிப் போடுங்கள்". குசினியிலிருந்து வந்த டீச்சரின் வார்த்தைகள் சரக் சரக் என்று குத்திக் கண்களில் நீர் முட்டியது.
"யாருமில்லை டீச்சர். நான்தான் வைச்சிருக்கிறன்" புல்லாங்குழலை கீழே வைத்துவிட்டு வயலினை வாங்குவதற்காய் நீண்ட கரங்களைப் பற்றிக்கொண்டு அழுதுவிடவேண்டும் போலிருந்தது. கவனித்திருப்பானோ? இதிலை வேற இண்டைக்கு வந்து விட்டுட்டுப் போகும்போது அவளின் ஒன்றுவிட்டதம்பி கேலியாய்ச் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. பேசமுயன்றபோது வெறும் கற்றுத்தான் வந்தது.
"குரல்வளையில் சிக்கிய காற்று
சங்கீதமாவாதா காதல்..?"
சே.. முட்டாள்தனமா எதையும் யோசிக்காதே என்று தன்னைத்தனே கடிந்துகொண்டு கண்களை இறுக மூடி மீண்டும் நன்றாக மூச்சை இழுத்துவிட முயல்கையில் கன்னத்தினோரம் கண்ணீர் வழிந்தோடியது. அவசர அவசரமாய் நடுங்கும் கரங்களால் பக்கத்திலிருந்த சிறுமியிடம் வயலினைக் கொடுத்துவிட்டு, மெதுவாய்த் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டாள். நிசப்தம் மீண்டும் அந்த அறையை நிரப்பிக் கொண்டது.
*****
தொடரும்..
கருத்துகள்