"அவள்" ஒரு தொடர் கதை ... : ஏமாற்றம்
பாகம் நான்கு : ஏமாற்றம்
படிப்புமுடிந்ததும்தான் எதையும் யோசித்துச் சொல்லமுடியும் என்று சுதா சொல்லிவிட்டபோது அவளுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.
வழமையாய் படங்கள்ல கலியாணத்துக்கு பெண்பார்க்கவந்து பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு கடைசியாய் வீட்டைபோய் யோசிச்சு பதில் சொல்லுறம் என்டுசொல்லும்போது அந்தப் பெண்ணின் முகத்தை close-upல் காட்டுவாங்கள். அதுவரை நாணத்துடன் நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவளின் முகம் இப்போது முழுவதும் வெளிறிப் போய் இருக்கும். சுத்தி இருந்தவர்கள் எல்லாம் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பார்கள். அவமானம் தாளாமல் ஓடிச்சென்று அறைக்குள் கதவைப் பூட்டிக்கொண்டு குமுறிக் குமுறி அழுவாள். இத்தனைக்கும் அவளுக்கு மாப்பிளையை முன்ன பின்ன தெரிஞ்சிருக்காது. அப்பிடி இருக்கும்போதே அத்தனை நம்பிக்கையுடன் புடவைகட்டி அலங்காரம் பண்ணி நாணத்துடன் வந்திருப்பாள்.
அன்றுதான் அவர்கள் நிகழ்ச்சி BMICHஇல் அரங்கேறப்போகிறது. பெண்கள் எல்லோரும் புடவைகட்டி அலங்காரம் பண்ணி நாணத்துடன், சேச்சே.. என்ன பொம்பிளையா பாக்கவறாங்க இங்க? ஆனால் என்னமோ அவளுக்கு மட்டும் வெட்கம் பிடுங்கித்தின்றது. பூப்புனித நீராட்டுவிழாவுக்குப் பிறகு இதுதான் முதல்தடவை அவள் வெளியில் புடவை கட்டிக்கொண்டுவருவது. அதனாலேயோ என்னமோ அன்றுபோல் இன்றும் எல்லோரும் தன்னையே வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டிருப்பதாய் ஒரு பிரம்மை. ஆண்கள் எல்லாம் பட்டுவேட்டிகட்டி சுயம்வரத்துக்கு வந்த அரசகுமாரர்கள் போல் ஒருவித கம்பீரத்துடன் வலம்வந்து கொண்டிருந்தனர்.
கலாச்சார உடை என்பது வெறும் அடையாளம் மட்டுமில்லை. அதை அணியும்போது நமது கலாச்சார உணர்வையும் சேர்த்தே அணிந்துகொள்கிறோம். இல்லாவிட்டால் நேற்றுவரை சகஜமாகப் பழகிக்கொண்டிருந்த இருவரால் இன்றுவந்து அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்று புதிதாய்ச் சொல்லிக்கொண்டிருக்கமாட்டர்கள். ஒவொருமுறை பார்வைகள் சந்திக்கையிலும் எத்தனை வோல்ட் மின்சாரம் பாய்ந்தது என்று அளவெடுக்க அவள் என்ன விஞ்ஞானப் பரிசோதனையா செய்துகொண்டிருந்தாள்.
வானத்தில் பறப்பதுபோல் இந்த உணர்வு அவளுக்குப் புதிதாய் இருந்தது. வழமையாய் ஒன்றுக்கொன்று எப்போதுமே அடிபட்டுக்கொண்டிருக்கும் மனதும் புத்தியும் இப்போது அதிசயமாய் ஒன்றுசேர்ந்து அவள் கட்டுப்பாட்டை மீறியிருந்தன என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும் முடிந்தவரை மற்றவர்கள் முன்பு காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அவன் முன்பு அவளால் ஒழுங்காய் உட்காரக்கூட முடியவில்லை. சங்கடத்துடன் நெளிந்துகொண்டு எழுந்தவளை பக்கத்திலிருந்த அக்கா அவளுக்கு இடம்கானாதுபோல எண்டு நினைத்து, தள்ளியிருந்துவிட்டு அவளையும் இருக்கச்சொன்னா. தர்மசங்கடமான சூழ்நிலை.
"இல்லை அக்கா.. இருந்திருந்து கால் நோகுது கொஞ்சநேரம் எழும்பி நிக்கிறன்." சுத்த பேத்தல். என்ன ஆச்சு இவளுக்கு? மல்லிகை மணம் அவனை மயக்கியதோ இல்லையோ அவளை நன்றாகவே கட்டிளக்கச் செய்திருந்தது.
கண்டதும் காதல் என்பதெல்லாம் பருவக்கோளாறுதான் என்றுகொண்டிருந்தவளை, கலியாணத்துக்கும் கருமாதிக்கும் எந்தவித்தியாசமுமில்லை என்றவளை, ஆண்கள் என்றாலே பத்தடி தள்ளியே நிற்பவளை அவன் அருகாமை நிறையவே மாற்றியிருந்தது. இத்தனைக்கும் அவனின் சுண்டுவிரல் கூட அவள்மேல் பட்டதில்லை. அவனைக்கேட்டால் எந்த உணர்வு எந்த ஹோர்மொன்சின் செயல்பாடு எண்டு புட்டுப்புட்டு வைப்பான். மருத்துவம்தான் அவனின் கனவு, லட்சியம் எல்லாமே. அதில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லைத்தான். ஆனால் யோசிக்கவேண்டும் என்று சொன்னதுதான் அவளைக் காயப்படுத்தியிருந்தது. இதுவரை அவனின் இதயத்தில் எதோ ஒருமூலையில் அவளும் இருக்கிறாள் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தாள். இனித்தான் யோசிக்கவேண்டும் என்றால்.. இன்னும் நுழையவில்லை என்றுதானே அர்த்தம் வருகிறது.
இப்படித்தான் campusல் ஒருநண்பன், இவளுக்கு நெருக்கமான ஒரு நண்பியைக் காதலித்துக்கொண்டிருந்தான். பொதுவான நண்பிஎன்ற முறையில் தூதுபோக இவளைக் கேட்டிருந்தான். முதலில் கேட்டபோது தாம்தூம் எண்டு குதித்துவிட்டாள். ஆனால் அவன் உணர்வுகள் மேல் இவளுக்கு நம்பிக்கையிருந்தது. அதேபோல் சில மாதங்களிலேயே அவர்கள் சேர்ந்துவிட்டனர். அதற்கு ஒரே காரணம் அவன் தனது உணர்வுகள் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல, அவள் வேறுயாரையும் காதலிக்கவில்லை என்ற புரிதலும்தான் அவனைத் தொடர்ந்து முயற்சிக்க வைத்தது. அதுமட்டுமல்ல அவளுக்காய் எதைவேண்டுமானாலும் துறக்கத் தயாராய் இருந்தான். காலம் காலமாய், பரம்பரை பரம்பரையாய் கட்டிக்காத்துவந்த சடங்கு சம்பிரதாயத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு வெள்ளியும் தவறாது சென்று தரிசிக்கும் அந்தக் கோவிலையும், அவனுக்கேயுரிய அடையாளமாய், நெற்றியில் போட்ட அழகுக் கோலமாயிருந்த அந்த விபூதியையும் தான்..
இவளுக்கு இழக்கவென்று சொன்னால் அப்படி பெரிதாய் எதுவுமில்லைத்தான் அவளது ஈகோவைத்தவிர. ஒருவேளை இவளும் கூட சுதாவுக்காகக் காலமெல்லாம் காத்திருந்திருப்பாள் அந்த நிகழ்வுமட்டும் நடக்காமலிருந்திருந்தால்..
*****
தொடரும்..
கருத்துகள்