"அவள்" ஒரு தொடர் கதை ... : அக்கினிக் குஞ்சு

பாகம் நான்கு : அக்கினிக் குஞ்சு 

தாண்டிக்குளம் முன்னரங்குநிலை.

"இன்னும் எவ்வளவு நேரம் இந்தக் கொதிக்கிற வெய்யிலுக்கை நிக்கிறது? எப்ப கூப்பிடுவாங்களப்பா?"
"இவ்வளவு சனம் முன்னால நிக்கிறதைப் பாத்தா இண்டைக்கும் போகேலாது போலத்தான் கிடக்கு" என்றவரை முறைத்துப் பார்த்தாள். இவர் எப்பவுமே இப்படித்தான். அபசகுணமா ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்.

ரெண்டுநாளா ஒரே சண்டை. "எனக்கு இங்கை நிறைய வேலையிருக்கு. உங்களோடை கொழும்புக்கெல்லாம் வர ஏலாது. அங்கை  கொண்டுவந்து அனுப்பி விட்டுட்டு திரும்பி வந்திடுவன் சரியே?" எண்டு சொல்லித்தான் இதுவரையுமே வந்திருந்தார். பின்னர் "வயதுக்கட்டுப்பாடானவை வெளியாலை இருந்து யாரும் கூப்பிடாமல் போறது கஷ்டம்" என்று யாரோ சொல்லவும் "சரி அப்ப திரும்பலாம் தானே?" என்று மூட்டை கட்டியவருடன் சண்டை பிடித்து, அடம்பிடித்து அம்மாவை நேற்றுத்தான் முதல்லை வெளியே அனுப்பிவைத்திருந்தாள். அவா அண்ணாட்டை சொல்லி இண்டைக்கு எப்பிடியும் வெளியாலை எடுத்திடுவா. ஆர்வமாய் ஒலிபெருக்கியில் சொல்லப்படும் பெயர்களை உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.

இதுவரை அவள் நேசித்த, சுவாசித்த அந்தமண்ணைப் பிரிவதில் அவளுக்கு எந்த வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. போய்விடவேண்டும். இந்த யுத்த பூமியிலிருந்து, அவள் கனவுகளை சிதைத்த தேசத்திலிருந்து.. அதன் மரண ஓலம் கேட்காத தூரத்துக்கு ஓடிவிட வேண்டும்.. யாரெப்படிப் போனால் அவளுக்கென்ன? இவர்களைப் போய் போராடச்சொல்லி யார் அழுதது?

"கண்ணனுக்கு கலியாணமாயிட்டுதாமே? தெரியுமே உனக்கு?"
"அப்பிடியே.. நல்ல விசையம் தானே?"
"மனுசி உள்ளை தானாம். அவன்டை கனவேலை எல்லாம் கூடஇருந்து செய்து குடுத்திருக்குதாம்."
"எப்பிடியாள்?"
"ஆள் எப்பிடி எண்டு தெரியாது. அவனுக்குப் பிடிச்சிருந்தால் சரிதானே. ஏதோ இப்பவாச்சும் கலியாணம்  எண்டு ஒண்டு கட்டவேணுமெண்டு நினைச்சானே அதுவே நல்லது. அதுகள் சந்தோசமாய் இருக்கட்டும்."
"ஏதாச்சும் விசேசம் இருக்காமே?"
"நான் நினைக்கேல்லை. அதுவும் போராட்டம், லட்சியம், கனவு எண்டுதான் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்குதாம். இவங்கள் எல்லாம் செத்து, பிறகு யாருக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் போறாங்கள் எண்டுதான் தெரியேல்லை."
மீண்டுமொருமுறை மனதில் பதித்துக்கொண்டாள், மறப்பதற்காகவே.

"இப்பவும் இறங்கி நிக்கிறதோ இல்லாட்டி..? "
"அதெல்லாம் உவங்கள் சொல்ல மாட்டாங்கள் தானே? ஊரிலை எத்தினைபேர் ஆமி கலைச்சிட்டுப் போனதுக்கு, வேலிபாஞ்சு ஓடிஒளிச்சதையே பெருசா பீத்திக்கிட்டிருக்குதுகள். இவன் என்னடாவெண்டால் என்னமோ கனக்கவெல்லாம் செஞ்சிருகிறான் எண்டு சொல்லுதுகள். ஆனால் அதைப்பற்றி கேட்டா  வாயே திறக்கமாட்டன் எண்ணுறான்."
"சரிதானே. வேறை யாரேனுமறிஞ்சால் அவன்டை உயிருக்கும் தானே ஆபத்து. பிறகேன் கேக்கிறீங்கள். இப்படி எப்பவாச்சும் ஒருக்கா வாறதும் உங்களுக்கு பிடிக்கேல்லையே."
வாழ்க்கையில் பல நிகழ்வுகள் மாறி மாறி வரும். ஆனால் சில நிகழ்வுகள் தாண்டிப் போகும்வரை புரிவதில்லை, அவைதான் இறுதியானவை என்று.

அவனது தந்தையின் ஈமைச்சடங்கு. எல்லோரும் சுற்றிவரநிண்டு அழுது கொண்டிருந்தார்கள். அவள் மட்டும் வாசலைப் போய்ப்பார்ப்பதும் உள்ளே வந்து பார்ப்பதுமாயிருந்தாள். கொள்ளிவைக்க எப்படியும் வருவான். ஆனால் கதைக்க முடியுமா? முந்திஎண்டாலும் பரவாயில்லை துணைக்கு ஒருவன்தான் கூடவேயிருப்பான். இப்பவேண்டால் கருப்புபூனைகள் மாதிரி நாலைஞ்சுபேர் சுத்தி நிப்பாங்களாம். அவள் ஏதாவது ஏடாகூடமாக செய்யப்போய் அதுவே அவனுக்குப்பின் தீராத பழியாகி விடக்கூடாது.

"இங்கை நிண்டு இன்னும் என்ன ஏமலாந்திக்கொண்டு நிக்கிறே. நான் கூப்பிடுறது காதிலை விளேல்லையே? பிரேதம் எடுத்தாச்சு வீட்டை போய் தோஞ்சிட்டு பிறகு வருவம் வா." அவளை இழுக்காத குறையாக கூட்டிப் போனார் அம்மா. வழியெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனாள், வாகனம் ஏதும் வருகுதா எண்டு.

"நீயென்ன உடனை போயிட்டாய். கண்ணன் நேர மாயானத்துக்குப் போனவன்.. உன்னை கேட்டவன்"
"ஓ.. அப்பிடியே? ரெண்டு நாளா குளிக்கேல்லை தானே. அதுதான் பிரேதம் எடுத்தாச்சுத்தானே எண்டு வந்திட்டன்." என்ற அம்மாவை அன்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.


"அப்பா. அவங்கள் என்னைக் கூப்பிடிட்டான்கள்.." சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவளின் முகத்தில் புதிய உலகைப் பார்க்கப்போவதற்கான மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

"வடிவாக் கேட்டனியே? உண்டை பேர்தானே?" என்ற அப்பாவின்மேல் இப்போது கோபம் வரவில்லை.

"ஓமப்பா. அவங்கள் உங்கடை பேரைத்தான் இப்படிக் குதறிச் சொன்னவங்கள். இங்கைஎல்லாம் அப்பாட பேரை தானாமே சொல்லிக் கூப்பிடுவாங்கள்? எண்டை ஆண்டு நாலு டீச்சர் கூட என்னை அப்பிடித்தான் கூப்பிடுவா.." என்று கண்களில் புதுக்கனவுகள் மின்னலடிக்க சொன்னவளை நம்பிக்கையில்லாமல் பார்த்தார்.

"உங்களுக்கு நம்பிக்கையில்லைஎண்டால் நீங்களே போய்க் கேளுங்கோ.." என்றவள் தானும் பின்னாலேயே போனாள். அதில் நின்றவனிடம் போய் அவர் ஏதோ சிங்களத்தில் கேட்கவும் அவன் திரும்பி அவளை ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, பின்னர் லிஸ்டையும் பார்த்துவிட்டு ஏதோ சொன்னான். இருவரும் அவளுக்குப் புரியாத பாஷையில் ஏதோ கதைத்தனர்.

"சரி உன்னைத்தானாம். நான் கூட வரேல்லாதாம். உன்னைப்பிறகு கேம்ப்ல வந்து பாக்கட்டாம். விட எத்தினைநாள் ஆகுமெண்டு இப்ப சொல்லமுடியாதாம்." என்றபடி தயங்கினவருக்கு வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'இப்படிக் கேம்ப்ல, எத்தின்னாளிலை விடுவான் எண்டுகூடத் தெரியாமல்   இருந்து கஷ்டப்பட்டு அந்தப் புதியவுலகுக்குப் போகத்தான் வேணுமா?' ஒருகணம் தயங்கியவளுக்கு, "நீ பயப்பிடாமப் போ.. சித்தப்பாட்டைச் சொல்லி கெதியா வெளிய எடுத்திடுவம் சரியே?" என்று தைரியம் சொன்னவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.  'இதுவரைக்கும் வந்தாச்சு. அம்மா வேறை, நான்  வந்துசேர்ந்திடுவன் எண்ட நம்பிக்கையிலை தான்  போயிருகிரா. சரி. போய்த்தான் பாப்பமே' என்று முடிவெடுத்தாள்.

காமினி வித்தியாலையத்தை தற்காலிக தடுப்புமுகாமாக்கியிருந்தனர். அங்கு அவளையும் சேர்த்து  வயதுக்கட்டுப்பாடான ஒரு முந்நூறுபேர் ஆண்பெண் வித்தியாசமின்றி ஆட்டுமந்தைகள் போல ரெண்டு சிறிய கட்டடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். சுற்றிவர முள்ளுக்கம்பிவேலி.  அதியுயர் ராணுவ, போலீஸ்  பாதுகாப்பு. நிராயுதபாநிகளிடமிருந்து தம்மைகாக்க.

அவள் வயசுக்குவந்ததைவிட வேறெந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை, அதிலிருந்த பலரைப் போலவே.
"இதுக்கு பேசாமல் அங்கயே இருந்திருந்தால், மானத்தோடையாச்சும் செத்திருக்கலாம்."
"மக்களை மீட்டெடுக்கிறம் எண்டு பொய்சொல்லி வரவைச்சு, இப்படித்தான் காம்பிலை போட்டு கொடுமைப்படுத்து அரசாங்கம். இதை உள்ளுக்க நிக்கிற எங்கடை சனத்துக்கு சொன்னாலும் விளங்காது. என்ன செய்யிறது?"
"நீங்க முந்தியும் வந்திருக்கிறீங்களே?"
"ஓம். அப்ப மூண்டு மாசம்மெல்லாம் அடைச்சு வைச்சிருந்திருக்கிறான்கள். கிழமைக்கு ஒருக்கா முகமூடியைக் கொண்டுவந்து காட்டுவாங்கள். அவன் தலையாட்டினா அப்பிடியே போய்ச் சேர வேண்டியதுதான். அப்பிடி கனபேர் காணாமலே போயிருக்கினம்."

மறுநாள் விடிந்தது. எல்லோரையும் உணவுக்கு வரிசையில் நிக்கச் சொன்னார்கள். அவள் போகவில்லை. சாப்பாட்டிற்காய் யாரிடமும் சென்று கையேந்தி நிற்பது அவளுக்குப் பிடிக்கவில்லை, அதுவும் பட்டினிபோட்டவர்களிடமே. ஒருநேரம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் செத்துப் போய்விடமாட்டினம் என்று தோன்றியது.
"உந்தப் பாணையும் அவியாத பருப்பையும் தின்னுறத்துக்கு, பேசாமல் உண்ணாவிரதமே இருக்கலாம்" முணுமுணுத்தவனின் பானைத்தட்டிவிட்டு அவனையும் துவைத்தெடுத்தனர். எங்கேயோவிருந்து ஓடிவந்த நாய் கீழேவிழுந்த அவனது பாணைத் தூக்கிக்கொண்டு ஓடி மறைந்தது.

வெயில் ஏறஏற அவளுக்கும் பசி வயிற்றைக்கிள்ளத் தொடங்கியது. நல்லகாலமாய் மதியம் அவளது அம்மா வீட்டிலிருந்து சோறு கட்டிக்கொண்டு வந்திருந்தார். அவவுடன் கதைத்துவிட்டு பின்னர் எல்லாவித பரிசோதனைகளும் முடிந்து அந்தப் பார்சல் அவளின் கைக்குவரவே பொழுது சாய்ந்துவிட்டிருந்தது. அதை அவசர அவசரமாய்ப் பிரித்துத்தின்று அன்றைய உண்ணாவிரத்தை ஒருவாறு வெற்றிகரமாய் முடித்துக்கொண்டாள்.
"இந்த (தள்ளாத) வயதிலும் ஈழ மக்களுக்காய் உண்ணாவிரதமிருக்கும் எங்கள் கலைஞருக்கு எங்கள் தமிழினமே கடமைப்பட்டிருக்கிறது." மைக்கில் ஒருத்தன் தொண்டைகிழியக் கத்திக்கொண்டிருந்தான். ஒரு ரெண்டு மணிநேரம் கழிஞ்சிருக்கும்.  மதிய வெயில் எல்லோரையும் சுட்டெரிக்கத் தொடங்கியிருந்தது. அருகிலிருந்தவர் கலைஞரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். "மத்திய அரசு எங்கள் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்கி ஈழத்தில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்திவைக்க சம்மதித்ததால், எங்கள் மாண்புமிகு தலைவர், தமிழினத்தின் விடிவெள்ளி.. இத்துடன் தனது உண்ணாவிரத்தை முடிக்கிறார்.."  
"இவனையெல்லாம் பட்டிநிகிடக்கச் சொல்லி யார் அழுதது? மயங்கி விழுந்திட்டானாம். தூக்கிக்கொண்டு போறாங்கள். நேற்றுப் பாணாச்சும் கிடைச்சுது. இண்டைக்கு அதுவும் கிடைக்குமோ தெரியேல்லை." அந்தக் குரலில் வெறுப்பு, விரக்தி, ஏக்கம், தவிப்பு எல்லாமே இருந்தது.

ஆனால் யார்சொல்லியோ தெரியாது; திடீரெண்டு ரெண்டு பெரியமனுசங்கள் வந்து முகாமிலை ஆண்கள் வேறாகவும்  பெண்கள் வேறாகவும் தங்குவதுக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள்.

இன்று ஏழாவது நாள். அவன் சொன்னவாறே 'தலையாட்டி' வந்தது. ரெண்டுமுறை அந்த வானுக்குமுனால் வரிசையில் போய்வர விட்டார்கள். பின் ஒவ்வொருவராய் வரச்சொல்லி, அதன் முன்னின்று முழுப் பெயரைச் சொல்லிவிட்டு முகத்தை நல்லா நிமிந்து காட்டச் சொன்னார்கள். சுற்றிவர வெள்ளைத்துணியால்மூடி கண்கள்மட்டுமே தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்தாள்.  அதன் கண்களை நேருக்குநேர் பார்க்க அவளுக்கு எந்தவித அச்சமும் இருக்கவில்லை. எதற்கும் துணிந்துதானே வந்திருக்கிறாள். ஆனால் ஏதோவொரு இனம்புரியாத மிரட்சி அதன் கண்களில் தெரிந்தது.

"நித்தியா.. அனந்த.. கவுத?" யாரிடமிருந்தும் பதிலில்லை. சிங்களத்தில் ஏதோ திட்டினார்கள். அவள் பேசாமல் எழுந்து சென்றாள். வெள்ளைவானில் ஏற்றினார்கள். உள்ளே இன்னமும் மூன்றுபேர் இருந்தனர். அவளைத்தவிர எல்லோருமே ஆண்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. எல்லோர் முகங்களிலும் ஒருவித அச்சம் பரவியிருந்தது. அவள்மட்டும் அமைதியாயிருந்தாள்.

"பகின்ன.. பகின்ன.. ஒக்கம பகின்ன.."

எல்லோர் கையிலும் ஒவ்வோர் பலகை குடுத்து பெயர், வயது மற்றும் தொடர்எண்குறித்து முன்னால் பக்கவாட்டில் என்று படமெடுத்தார்கள். பிறகு குழுஎண் குறித்து சேர்த்துவைத்து படமெடுத்தனர். என்ன நடக்குதெண்டு யாருக்குமே புரியவில்லை. அவளை மட்டும் தனியே கூட்டிச் சென்றார் ஒருவர்.

ஏன் வந்தாய்? எதற்க்குவந்தாய்? யாரிடம் வந்தாய்? எங்கு போகிறாய்? என்பதாய் பல கேள்விகள். எதற்கும் அவளிடம் உருப்படியான பதிலில்லை. ஆனால் மொழிபெயர்த்தவன் அவளுக்காய் ஏதேதோ சேர்த்துச் சொன்னான். அரைமணிநேர கடும் விசாரணையின் பின் உள்ளே காத்திருக்கச்சொல்லியவன், அவசரமாக வந்து அவள் கையில் ஏதோ ஒருதுண்டைச் செருகி "இந்தா இதைக்கொண்டே வெளியால குடுத்திஎண்டால் பாஸ் தருவாங்கள்.." என்றவனை இடைமறித்து, "மற்றவை எல்லாம் எங்கை? இன்னும் விசாரணை முடியேல்லையே?" ஆதங்கத்துடன் கேட்டாள். "உனக்கு உருப்படியாப் போச்சேர ஆசையில்லையே? கெதியா வெளிக்கிடு. இங்கை நிக்கிற ஒவ்வொரு நிமிசமும் என்ன நடக்குமெண்டு யாருக்கும் தெரியாது." அவன் குரலில் பதட்டமிருந்தது.

"என்னை விடுங்கோ. எனக்கு ஒண்டும் தெரியாது. நான் அம்மாவைப் பாக்கவேணும். அவாட்டை யாரேன் போய்ச் சொல்லுங்கோ. நான் இங்கைதான் இருக்கிறன் எண்டு. ஐயோ.. அம்மா.. அடிக்கிறாங்கள்.. காப்பாத்துங்கோ.." அழுகையும் அரற்றலுமாய் உள்ளே  ஒருகுரல் கதறித்துடித்து தேய்ந்து அமுங்கிப் போனது.
டிவியில் "ஐயோ அம்மா..  என்னைக் கொல்லுறாங்கள்.. காப்பாத்துங்கோ.." கலைஞரின் கதறல் காதைக்கிழித்தது. எரிச்சலுடன் ரிமோட்டை எடுத்து 'ஆப்' பண்ணினாள்.
இயலாமை முதுகில் சாட்டையடிக்க, கனத்த இதயத்துடன் வெளியேவந்து பார்த்தாள். சுற்றிவர கண்ணுக்கெட்டின தூரம்வரை எந்தக் கட்டிடங்களையுமே காணவில்லை. தூரத்தில் ரெண்டு ஆட்டோ மட்டும் நின்றுகொண்டிருந்தது. தோளில் ஒருசின்னப்பை, கைகளில் வெறும் ஐந்து ருபாய். கொதிக்கும் அக்கினி வெயிலில் யாருமில்லா வீதியில் வெறுங்காலுடன் நடக்கத் தொடங்கியவளுக்கு, ஒரு புதிய உலகத்தை படைப்பதற்கான அறைகூவல் உரத்துக் கேட்டது. மிகத்தெளிவாகவே..
'வெந்து தணிந்தது காடு; -- தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?'





***** 
தொடரும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)