பாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே

யார் எப்படிப்போனால் அவளுக்கென்ன வந்தது. பேசாமல் வந்தமா பார்த்தமா போனமா எண்டு இருக்கிறது தானே. அப்போ படிப்பு? இன்று இப்படி வந்ததுக்கே டிஸ்மிஸ் பண்ணுற சாத்தியகூறு அதிகம். அதுவும் முதல் நாளே இப்படி ஓடுகாலி போல சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவளை எப்படி சேர்ப்பினம்? ஆனால் வீட்டை எந்த மூஞ்சிய வைச்சுக்கொண்டு போய்நிற்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. அப்பவும் படிச்சுப் படிச்சு சொல்லி அனுப்பினவை. கேட்டாளே? எத்தனை நம்பிக்கையுடன் வந்திருந்தாள். ஆனால் அவன்..?

கானல் நீராய் போன
அந்த ஒவ்வொரு பொழுதுகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன்
என் நெஞ்சுக்கூட்டுக்குள்..!

வந்த முதல் நாளே இப்படிப் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிவிட்டு வருகிறவளுக்கு நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவருக்கு, அவள் வந்து நின்ற கோலம் பதை பதைப்பை ஏற்படுத்தியது.

உன் பார்வை உன் புன்னகை உன் கோபம்
எதுவும் மறையவில்லை இன்னமும்..
மணல் மீது வரைந்த கோடுகள்
அலை மீது எழுதிய கோலங்கள்
எது உண்மை ?

"what happened to you? are you ok?" அவள் தலையை மட்டும் ஆட்டினாள். அவள் நின்ற தோரணை  அவருக்கு மேலே கேக்க பயமாகவிருந்தது.
"ok. don't go anywhere without informing us… let me show you the room" பலியாடுபோல் பின்னே சென்றாள்.
"how you find singapore? do you like it?.. I'm sure you will. am I right?" வெறுமனே உம்கொட்டினாள்.

திரும்ப ஒருதடவை அன்று நடந்தவற்றை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்தாள்.

உனது நெருக்கம் உனது விலகல்
எதுவோ சுடுகின்றதே இன்னுமும்..
காற்றிலே கரைந்து போன இசை;
காதிலே இன்னும் கேட்கும்
உனது  வார்த்தைகள்.. எது நிஜம் ?

"This is your room. your luggage is here already. you need to be at campus before 10am" என்றவர் திரும்பி சக்தியேயில்லாமல் நின்றுகொண்டிருந்த அவளைப் பார்த்துவிட்டு, "I think you are not feeling well. do you want to take sick leave today? It's just an Intro session. Course starts next week only." தலையை ஆட்டினாள். அழுகையழுகையாய் வந்தது.

நீ கொடுத்த ரணங்களின் மீது
தென்றல் படுகையில் கூட வெந்து போகிறேன்
எரிமலையின் சீற்றத்தை கண்ணீர்த் துளிகளால்
தணிக்க முயலும் முட்டாள்தனங்கள்..

ஆனால் அவன் வெளிச்சொன்ன வார்த்தைகளுக்குள் இன்னும் பல அர்த்தங்கள் பொதிந்திருப்பதுபோலிருந்தது. அவன் கண்கள் அதைத் தெளிவாய்ச் சொல்லியதே..?
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
"Ok take good rest. see you later" என்றுவிட்டு  திரும்பி ரெண்டடி வைத்திருக்கமாட்டார், "I need to go  hospital" அவர் ஆச்சரியமாய் அவளைப் பார்க்கவும் "NUH" தீர்மானமாய் சொல்லி நிறுத்தினாள்.

"you don't need to go to hospital for this. you can get MC from a doctor in clinic."
"No. I want to go there. I know a doctor there" சொல்லிவிட்டு அவரின் பதிலுக்குக் காத்திராமல்  படபடவென்று படிகளில் இறங்கியபோது கால்தடுக்கி விழப்போனவள் அருகிலிருந்த கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு அப்படியே இருந்துவிட்டாள். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. அவளுக்காய் அழுகிறதுபோலும்..
கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
"ஆர் யு ஓகே?" கேட்டபடி உதவிக்குவந்த செக்யூரிட்டியிடம் எதுவும் பேசாமலே எழுந்து, பிறழ்ந்த காலை தூக்கி முன்னால் வைத்தபடி யார் கைகளையோ பற்றிச் செல்வது போன்ற பாவனையுடன், அந்த மெல்லிய தூறலின் நடுவே நொண்டிக்கொண்டு போனவளை மேலிருந்தவறே யன்னல்வழியே ஏதும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் வார்டன்.





"வா. நல்ல நேரத்துக்குத்தான் வந்திருக்கிறாய். பாரதிக்கு திடீரெண்டு சீரியஸ் ஆகி ICU க்கு கொண்டுபோயிருக்கினம். இன்னும் ஒண்டும் தெரியேல்லை." அவனின் அண்ணா சொன்னபோது ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது அவளுக்கு. கடவுளே இத்தனை நாள் இருந்திருந்து கடைசியில் அவனுக்கே எமனாய் வந்து செர்ந்திருக்கிறாளே.
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
"ஏதும் சொன்னாரா..?" தயங்கியபடி கேட்டவளை உற்றுப் பார்த்தவர் "ஏதோ கண்ணம்மா.. கண்ணம்மா.. என்றான். யாரெண்டு தெரியேல்லை. மனுசி வேற பக்கத்திலை இல்லை. என்ன செய்யிறதெண்டு எனக்குத் தெரியேல்லை." கண்களில் வழிந்த கண்ணீரை அவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டாள்.
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!
"மாமா.." சற்றுத் தயங்கியவள், "நான் ஒண்டு சொல்லுவன். நீங்கதான் எப்படியாச்சும் செய்து தரவேணும்." என்றவளை என்ன என்பதுபோல் பார்த்தார். "எனக்கு காம்பஸ் இண்டைக்கு தொடங்குது. ஆனால் பாரதியை இப்படி தனிய விட்டிடுப் போக என்னால முடியாது.. அதாலை.."
"அதாலை..?"
"நீங்க தான் ஏதாவது வழிபண்ணி நான் அவர் கூடவே இருக்கிற மாதிரிப் பண்ணவேணும்" என்றவளை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.
"உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? பேசாம போய் வந்தமா படிச்சமா என்றதை விட்டிடு.."
"இல்லை.. நான் வந்து.."

"Madam.. are you miss Kannamma, who came in the morning to see him? அவள் மௌனமாய் தலையாட்டவும், "patient want to see you." சத்தியா ஆச்சரியமாய் அவளைப் பார்க்க, அவள்  ஏதும் பேசாமல் nurseஐப் பின்தொடர்ந்தாள்.

பெரிய வீராப்பில் போனவள் திரும்பி எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு அவன் முன்னே நிற்பது? தயங்கியபடி வாசலில் நின்றவளிடம்,
"you go first, I need to get some medicine for him. but remember, don't do anything silly.. he is counting his days." அவளுக்கு இதையமே வெடித்துவிடும் போலிருந்தது. அவன் சொல்லியது எவ்வளவு உண்மை. இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறோமே என்று நினைக்க கோபமாய் வந்தது. அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். உள்ளே சென்றாள்.

காலமை பார்த்ததைவிட திடீரென்று பத்து வயது கூடியதுபோல் காட்டியது அவன் முகம்.
மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
பாதங்களை  மெதுவாய்ப் பற்றினாள். அவன் சிரமப்பட்டு கண்களைத்திறந்தான். அவை அழகாய் மலர்ந்து 'வந்திட்டியா?' என்று தம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தின. அவள் மெலிதாய் முறுவலித்தாள். இனிமேல் என்ன ஆனாலும் அழக்கூடாது என்று முடிவுசெய்திருந்தாள். நடுங்கி நீண்ட கரங்களைத் தாவிச்சென்று பற்றி முத்தமிட்டாள். "இனி என்ன ஆனாலுமே உங்களை விட்டுப் போகமாட்டேன்.." மெலிதாய் சிரித்தான். அவனால் பேசமுடியவில்லை.
புருவங்களை சற்றே உயர்த்தி "என்ன.. ஆனாலுமே..?" கேட்ப்பதர்க்கே மிகவும் சிரமப்பட்டான். திரும்பவும் குளம் கட்ட வெளிக்கிட்ட கண்ணீரை இப்போது அவள் வென்றுவிட்டாள்.
"ஹ்ம்ம்.. என்ன ஆனாலுமே.. அப்பிடி என்னட்டையிருந்து அவ்வளவு கெதியா ஒடேலுமே? ஊர்லயிருந்து சிங்கப்பூர் வரைக்குமே கலைச்சிட்டு வந்திருக்கிறன். அங்கை வர எத்தினை நாளாகும்?" அவள் சிரித்தபடியே  கேட்க, அவன் சோகமாய் முறுவலித்தான்.

"இவன் சரியான அழுத்தக்காரன். இதை முன்னமே சொல்லித் தொலைத்திருக்கலாமே? யார் வேண்டாமேன்னப் போயினம்? அத்தான் தான் கொஞ்சம் அழும்பு பண்ணுவார். ஆனால் அவள்.. இத்தனை வருடங்களாய் இவளைப் புரிந்துகொள்ளாமலே.. சே என்ன விதியிது.." வெளியிலிருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த சத்தியா தனக்குத்தானே நொந்துகொண்டார்.
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!
***** 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)