பாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி

நேற்று முழுக்க ஒரே இருமலாக இருந்தது அவனுக்கு. இடைக்கிடை ரத்தமாய் வாந்தி வேறு. அவளது அம்மமாவுக்கும் கூட இப்படித்தான் புற்றுநோய் வந்து அவதிப்பட்டுப் பார்த்திருக்கிறாள். அவர் படும் கஷ்டத்தைப் பார்க்க இயலாமலே அவவை சீக்கிரம் கொண்டு போகச்சொல்லி கடவுளிடம் பிரார்த்திதிருக்கிறாள்.  ஆனால் இவன் சாகப் போகிறான் என்பதை மட்டும் அவள் மனம் ஏனோ ஏற்க மறுத்தது. 'முப்பது வருஷ வாழ்க்கையை மூன்றே நாளில் வாழ்வதென்றால்? கடவுளே நீதான் எனக்கு முழு சக்தியையும் குடுக்க வேணும்.' மனதுக்குள் வேண்டிக்கொண்டாள்.

"கண்ணம்மா.." அவன் வலியில் முனகினான். ஓடிச்சென்று அவனது தலையை நிமிர்த்தி கன்னத்தை மெதுவாய் தடவிவிட்டாள். "வலிக்குதாடா..? கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் போய் மருந்தேடுத்துக்கொண்டு வாறன்." சொல்லிவிட்டு ரெண்டே எட்டில் மேசையை அடைந்து லேபல் படித்து மருந்தையும் தண்ணியையும் கொண்டு வந்து கட்டிலின் அருகிலிருந்த ஸ்டூலில் வைத்தாள். தலைக்குப் பின்னால் ரெண்டு தலையணையை அடுக்கி அவனை சற்றே வசதியாய் சாய்ந்து இருக்க வைத்தாள். அவன் பேசாமலிருந்தாலும்  வலியின் கொடூரம் முகத்தில் தெரிந்தது. மருந்துகளை மீண்டும் சரிபார்த்து ஒவ்வொன்றாய் கொடுத்தவள், குவளையை சரித்து தண்ணீர் குடிக்கவைத்தாள்.

"கண்ணம்மா.. உன்னை நான் நல்லா கஷ்டப்படுத்துரன் எல்லே. நான் போய்ட்டா அழுவியா?" அவன் முடிக்கு முன்பே கண்களில் தேங்கிவிட்ட கண்ணீரை அடக்கிக்கொண்டு, "நான் ஏன் அழவேணும்..? வெறும் மனிதர்கள் சாயும் போது தான் கண்ணீர் வரும். ஆனால் நீங்க மாவீரன். எல்லோருக்கும் கடவுள் மாதிரி. கடவுளுக்கு சாவில்லை தெரியுமே..?" படபடவென்று பொரிந்து நிறுத்திய அவளைப் பார்க்க பெருமையாக இருந்தது அவனுக்கு. வெளித்தெரியும் வெகுளித்தனத்துக்குப் பின்னால் ஒரு பெரிய கடலே இருப்பதுபோல் உணர்ந்தான். 'பாரதி கனவுகண்ட கண்ணம்மா எண்டால் சும்மாவே..' தன்னைத் தானே மெச்சிக்கொண்டான்.

"இங்கை வா.." அவளின் கைகளைப் பற்றி அருகில் இருத்தியவன், "எங்கே உண்டை கடவுளைப் பற்றி சொல்லு பாப்பம்." மெல்லிய முறுவலுடன் லேசாய் தலையைச் சரித்துக் கேட்டதை ரசித்தாள். "அது.. உங்களுக்கு.. வார்த்தேல சொல்லட்டா? கவிதையாய் சொல்லட்டா..?" ஆர்வமாய் புருவங்களை உயர்த்தி அவனைப்போலவே தானும் தலையை சற்றே சரித்து கேட்டவளை, ஆச்சர்யமாய்ப் பார்த்தான். "ஓ.. நீ கவிதை கூட எழுதுவியா..?"

"அதையெல்லாம் கவிதை எண்டு நான் தான் சொல்லிக்கிறேன். ஆனா யாரிட்டையும் காட்டுறேல்லை." வெட்கத்துடன் தலையைக் குனிந்தவளின் நெற்றியில் விழுந்த முடிகளை விலக்கி, கன்னம் வழி சென்ற விரல்கள், தாடைதனை நிமிர்த்தி.. "சொல்லுடா. நான் கேக்கிறன். உண்டை கடவுள் கேக்கிறன்." சிரித்தான்.

"உங்கடை கனவு எவ்வளவு பெருசெண்டு எனக்குத் தெரியும், அதிலை எப்பிடி என்னால உதவியிருக்கேலுமேண்டு எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குள்ளேயே உங்களோடை எப்பிடியெல்லாம் வாழவேண்டும் எண்டு எனக்குள்ளையும் ஒரு சின்னக் கனவு இருந்துது. அதை எப்பிடியாவது உங்களிட்டை சொல்லிவிடவேனுமேண்டு இத்தனை வருசமா துடிச்சிட்டிருந்தன். இது அதுக்கான நேரமில்லை எண்டு எனக்குத் தெரியும். ஆனா இதைவிட்டா எங்கை  உங்களிட்டை சொல்லாமலே போயிடுவானோ எண்டு பயமா இருக்கு.." தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு, அவன் கண்களையே சிறிது நேரம் உற்றுப்பார்த்தாள். அவன் மௌனமாய் முறுவலிக்கவும், அவன் கரங்களைப் பற்றி மார்புடன் அணைத்துக்கொண்டு சொல்லத் தொடங்கினாள்.

அடர் பெரும் காடு
அதன் நடுவிலொரு மண்வீடு
இருபுறம் திண்ணை மேடு
கூரையில் சில ஓடு

உலைவைத்து அரிசிபோட்டு
வானொலி திருகி பாடல் கேட்டு
முகம் கழுவி பொட்டிட்டு
தலைவாரி பின்னலிட்டு

வெளிவந்து வானம் பார்க்க
சூரியனை முகில் மறைக்க
தூரத்தில் வெடி கேட்க
கிளையிலிருந்த காகம் பறக்க

ராஜ நடையுடன்
வீர படையுடன்
குறையா அன்புடன்
நிறையா உரையுடன்

ஒருமாவீரன் வருகிறான்
குறிப்பு தருகிறான்

அவன் கண்கள் வியப்பினால் விரிந்தன. "பரவாயில்லையே, நல்லாத்தான் எழுதுறே.. உண்டை மாயாவி கதையை விட இது கொஞ்சம் ரசிக்கும்படியாய் இருக்குது.." சிரித்தான். அவள் வெட்கத்துடன் மேலே தொடர்ந்தாள்.

கொல்லை சென்று இலைவெட்டி
கஞ்சி வடித்து சோறுபோட்டு
கைகழுவ நீர் கொடுத்து
காலாற இடம் கொடுத்து

உள்ளே வருகிறான்
வாசல் பார்க்கிறான்

திண்ணையில் மறவர் படை
உள்ளேயோர் போர்ப்படை
அள்ளி அணைத்திட
நாணி முகம் புதைத்திட

நெற்றிவீழ் முடிதனை விலக்கி
சிவந்த கன்னம் வருடி
தாடைதனை நிமிர்த்தி
அதரம் சற்றே பிரித்து

குனிந்து காதோரம்
சொன்னவார்த்தை மனதோரம்
மயக்க விழியோரம்
வழிநீர் துடைத்த இதழோரம்

சற்று நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் நினைத்ததுபோலவே இருண்டிருந்தது. 'சே.. ஏன் இந்தநேரத்தில் போய் இதையெல்லாம் சொல்லி அவனை நோகடிக்கிறேன்'. இதற்குமேல் தாங்க மாட்டான் என்று தோன்றியது. "மேலே சொல்லு.." உணர்ச்சியற்ற குரலில் கட்டளையிட்டான். 

கண்ட முறுவல் வெறிசேர்க்க
இறுகிய கரம் பித்தாக்க
மருகிய மனம் தவிக்க
இதழ்கள் வாவென துடிக்க

கைகளால் ஏந்தி
கட்டிலில் சாய்த்து
உடைகளைந்து
நாணம் களைந்து

அதற்குமேல் செல்ல, அவளால் முடியவில்லை. ஆனால் இறுகிய அவனது கரம் மேலே சொல்லேன கட்டளையிட்டது. இடையில் இரண்டுபத்தி  விட்டு தொடர்ந்தாள்.  

சரணாகதியடைந்த
நிராயுதபாநியிடம்
காமபாணம் கொண்டு
ஒரு மறப்போர்

வாவென அழைத்தது நீயென்பான்
அழைத்ததும் வந்தது ஏனென்பாள்
கூடலின்முன் ஊடலிலையெனின்
கூடியபின் ஊடல் கொள்வான்

சற்றே நிறுத்தி கண்களை இறுகமூடி, நன்றாக மூச்சை எடுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலே தொடர்ந்தாள்.

மறு காண்டம் தொடங்குமுன்
வாசலில் அரவம் கேட்க
விரைவுற தயாராகி
வருவேனென வுரைத்து

வாசல்வரை சென்றகால்கள்
தயங்கிடத் திரும்பி
இறுக்கி  அணைத்து
இதழ்களில் முத்தமிட்டு

அழுகை உடைத்தெடுத்தது. அவன் சட்டையைப்பிடித்து ஏன் விட்டுப்போனாய் என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் அவன் முகத்தில் எந்த சலனமுமில்லை. அவள் கைகளுக்குள் சிக்கியிருந்த தனது கரத்தை மெதுவாய் விலக்கியவன். வெறுமனே 'உம்' கொட்டினான். தழுதழுத்த குரலில்,

கையசைத்து விடைபெற்றுச்
சென்றவனக் காணவில்லை
கண்டவர் சொல்லிடாதீர்
தாங்க மாட்டாள்

சற்று நேரம் மௌனமாய் வெளியே வானத்தை வெறித்துப் பார்த்தவன், அவளிடம் திரும்பி "உனக்கு இப்ப இருபத்தொரு வயசு. நான் சொல்றது சரிதானே?" நிறுத்தி அவள் கண்களைப் பார்த்தான். அதே தீவிரம், தீர்க்கம். தலை தாழ்ந்து சரியென்று தலையாட்டினாள். "எனக்கு எத்தினை வயசெண்டு உனக்குத் தெரியுமே?" திடுக்கிட்டாள். இருந்திருந்து இத்தனை நாள் உருகி உருகி காதலிக்கத் தெரியுது, ஆனால் அவனுக்கு எத்தனை வயசு எண்டு அறிந்து கொள்ளாமலே இருந்துவிட்டாளே. அதனாலென்ன..

"தெரியாது. ஆனா தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமென்ன?" அவள் குரலில் சற்றே சீற்றம் எட்டிப் பார்த்தது.

"நீ வாழ்க்கையை இனிமேத்தான் ஆரம்பிக்கவே போறாய். ஆனா நான் முடியுற கட்டத்திலை இருக்கிறன். அதால இந்தக் தேவையில்லாத கனவைஎல்லாத்தையுமே முழுசாக் கலைச்சுப்போட்டு போய் படிக்கிற வழியைப்பார்." கடுகடுத்தான். "வாழ்க்கை முடிஞ்சிட்டுதேண்டு உங்கடை சுதந்திரக் கனவை மட்டும் கலைச்சுப் போட்டநீன்களே?" நாக்குனுனிவரை வந்துவிட்ட கேள்வியை ஒருவாறு விழுங்கிவிட்டாள். ஆனால் அவன் கண்டுபிடித்துவிட்டான்.

"எண்டை கனவு எனக்குமட்டும் சொந்தமானதில்லை. எத்தினையோ ஆயிரமாயிரம் வேங்கைகள் இந்தக் கனவை சுமந்துகொண்டு செத்துப் போயிருக்கினம். இன்னும் எத்தினையோபேர் இந்தக் கனவுடன்  வாழ்ந்துகொண்டிருக்கினம். அதால நான் செத்துப்போனாலும், எங்கடை கனவிருக்கும். அதுக்கு உயிரிருக்கும்." அவளுக்குப் புரிந்தது. மௌனமானாள்.

"என்ன கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவே வந்தனீ? காம்பஸ் எப்ப தொடங்குது?" அவளுக்காய் பேச்சை மாற்றுவது புரிந்தது. ஏற்கனவே தொடங்கிட்டுது எண்டு சொன்னால் 'இப்பவே நடையைக்கட்டு.' எண்டு துரத்தி விடுவான். அதால "தொடங்க இன்னும் ரெண்டு கிழமை இருக்குது" பொய் சொன்னாள்.

"பொய் சொல்லாதை. அக்கா இப்படி தனிய விட்டதே பெரிய விஷயம். அதிலை ரெண்டு கிழமைக்கு முதலே கட்டாயம் அனுப்பியிருக்காது.." எவ்வளவு தீர்க்கமாய் ஆராய்கிறான். எல்லோரையும் எவ்வளவு தெளிவாய்  புரிந்து வைச்சிருக்கிறான்.
"இல்லை. திங்கள் தான் தொடங்குது. ரெண்டு கிழமைக்கு இங்கிலீஷ் கோர்ஸ் போகுது. அது போகாட்டிலும் பரவாயில்லை. பிறகு எக்ஸாம்ல நல்லா செய்தா சரி."
"ஓ.. அப்ப இங்கிலீஷ் நல்லா செய்வாய் எண்டு சொல்லு." எப்படியெல்லாம் மடக்கிறான்.

"அப்பிடியெல்லாம் இல்லை. எதோ பாஸ் பண்ணுற அளவுக்கு இருக்குது." தயங்கியபடி சொன்னாள்.
"ஒண்டிலை இறங்கினா முழுமூச்சா செய்யவேணும். சும்மா தொட்டமா, விட்டமா என்டிருக்கக்கூடாது சரியே?" அறிவுரை சொன்னவனை புரியாமல் பார்த்தாள்.
"நீ என்ன நினைக்கிரே எண்டு எனக்கு தெரியும். சும்மா சும்மா எல்லாத்துக்கும் முடிச்சுப் போடாதை. சில விசயங்களை நாங்கள் நினைச்சாலும் மாற்றேலாது. திருப்பிக் கொண்டு வரவும் முடியாது. விளங்குதே?" கன நேரமாய் பேசியதோ என்னமோ அவனுக்கு மூச்சிரைத்தது. உடம்பில் பொருத்தியிருந்த அத்தனை கருவிகளுமே ஒன்று சேர அலாரமடித்தன. பயந்து போனாள்.

nurse வந்து பார்த்துவிட்டு தலையணையை இறக்கி அவனைப் படுக்க வைத்து மயக்க ஊசி போட்டுவிட்டு,
"he need some rest now. don't disturb him. you wait outside until he wakeup." அவளும் சரியென்று தலையை ஆட்டிவிட்டு, அமைதியாய்த் தூக்கத்தைத் தழுவியவனை கவலையைப் பார்த்தபடி வெளியேறினாள்.

இந்தத் திருமுகத்தைத் தேடி எந்தக் காடுமலையெல்லாம் அலைந்திருகிறாள். எத்தனை வலிகள், எத்தனை ஏமாற்றங்கள், அவமானங்கள், தவிப்புகள்.. மாயவிம்பங்கள். ஒருநிமிடம் கைகளுக்குள் சிக்கியதுபோல்.. அவள் கைகளைப் பற்றி வானவெளியில் கொண்டுசெல்லும். மறுநிமிடமே கண்களில் கனல்தெறிக்க சட்டென்று விலகிய கரம் அதலபாதாளத்தில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தும். மறக்கவில்லை என்பதுபோலிருக்கும். ஆனால் மறந்துவிடு என்று அறிவுரைசொல்லும்.





சற்றுத் தூரத்தில் சத்தியா நின்றிருந்தார். ஏதும் பேசாது  தாண்டிப் போக முயர்ச்சிக்கையில் "முன்னமே இதைச் சொல்லியிருந்தால் அவனை அப்பவே வெளிய எடுத்திருக்கலாமே?" கேட்டவரை அதிசயமாகப் பார்த்தாள். அவருக்கு அவனைப் பற்றித் தெரியாததா? சொந்தங்களின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தான். அதையெல்லாம் உதறிவிட்டு போனான் எண்டால் அவன் நாட்டின்மேல் எவ்வளவு பற்று வைத்திருந்திருப்பான். அதற்குமுன்னால் இடையில் வந்த அவள் வெறும் கால் தூசிக்கு சமன்.

அவளின் மனவோட்டத்தைக் கவனியாதவர்போல் தொடர்ந்தார். "சரியானநேரத்துக்கு சாப்பிடாமல் கொள்ளாம, சும்மா வலிக்குதேண்டு பனடோலை மட்டும் போட்டுக்கொண்டிருந்திருக்கிறான். தொடக்கத்திலையே ஒழுங்கான treatment குடுத்திருந்தா இப்படி இந்த வயசில உயிரோட காவுகொடுக்க வேண்டி இருந்திருக்காது." என்றவர் சற்று நிறுத்தி, "என்ன சொல்லி என்ன? யார் சொல்லியென்ன? அவன் விட்டிட்டு வந்திருக்க மாட்டான்." பெருமூச்சுடன் முடித்தவரை பார்க்க கவலையாகவிருந்தது.

வெறும் ஒன்பதே வருடங்கள் அவன் நினைவை சுமந்து கொண்டு அவளால் அதன் கனத்தைத் தாங்க முடியாதபோது அவர்கள் அவன் பிறந்ததிலிருந்து பார்த்த எடுத்து வளர்த்த ஒரு உறவு இப்படி கண்முன்னே வாடி, வதங்கி அழிந்து போவதை எப்படித் தாங்கி நிக்கிறார்களோ? இப்படி இத்தனை வருடங்களில் எத்தனை எத்தனை உயிர்களை வகைதொகையின்றி காவுகுடுத்திருக்கிறம். நினைக்கவே வலிக்கிறது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ 
பேசாமல் கான்டீன் போய் டீ சொன்னாள். சாப்பிடப் பிடிக்கவில்லை. கைகளிலிருந்த பேர்சை எடுத்து அவன் முகம் பார்த்தாள்.

நிம்மதியை தேடி எங்கோ அலைந்தேன்
அது கூடவே அலைந்தது என் பின்னால்
நின்று திரும்பி பார்க்க நேரமில்லாது
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் 
என் முன்னாலேயே..

கற்கள் கிழித்தும் முட்கள் குத்தியும்
புத்தி வரவில்லை
வழி எங்கும் குருதிச் சுவடுகள்
யாரும் இப்பாதையில் 
வராதிருக்கட்டும்.

கானல் நீராய் சில உருவங்கள்
வந்து வந்து போகும்
ஆனால் என் பயணம் அவற்றை தேடியல்லவே
இன்னும் தேடிச்செல்கிறேன்
என் முன்னாலேயே!

"இந்தப் படம் எங்கை எடுத்தனீ?" கேட்டவாறே முன்னாலிருந்த கதிரையையை இழுத்துப் போட்டிருந்தவரைப் பார்த்தவள் அவசர அவசரமாக திரும்ப உள்ளே வைத்து மூடினாள்.

"உங்கடை வீட்டிலை தான் ஒரு ஆல்பத்தில் இருந்தது." சொல்லியவாறே டீயை எடுத்துக் குடித்தாள்.
"உண்டை campusல கதைச்சிட்டன். கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் course திங்கள்கிழமை தான்  தொடங்குறதால சரி எண்டு சொல்லியிருக்கினம். மூண்டு நாளுக்கு back-pain எண்டு சொல்லி hospitalization லீவ் எடுத்து தாறதா சொல்லியிருக்கிறன். நாளைக்கு வந்து பாக்கினமாம். நீ தந்துவிட்ட IC காட்டினனான். கோர்டியன் எண்டு சொல்லி sign வைச்சிருக்கிறன். ஆனால்  பிறகு அவை அத்தானிட்டை ஏதும் போன் பண்ணி சொன்னால் எனக்குத் தெரியாது." என்றவரை நன்றியுடன் பார்த்தாள்.

"பாரதி இன்னும் ரெண்டு நாள் தங்குவதே கஷ்டம் எண்டு தான் நேற்றுச் சொன்னவை. ஆனால் இண்டைக்கு கொஞ்சம் improvement தெரியுதாம். அதால இன்னும் கொஞ்சநாள் உயிரோட இருக்க சாத்தியமிருக்கு எண்டு சொல்லியினம்."
"நீங்க தனியவே பார்த்துக்கொண்டிருக்கிரீன்கள்? அவரின்டை மனுசி வரையில்லையே?"
"ரஞ்சி தான் இவ்வளவுநாளும் நிண்டு பாத்தது. அவன்டை மனுசி வரேலாம போய்ட்டுது. கடைசி நாளில்லை நான் நிக்க வேணும் எண்டு அவையை அனுப்பிட்டு லீவ் போட்டுட்டு வந்தனான். அக்காவும் வரவேனுமேன்ட்டு சொல்லிக் கொண்டிருக்குது. முடியுமோ தெரியேல்லை." மௌனமானாள். அவளின் அம்மாவும் தான் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் அவன் மேல். எல்லாவற்றையுமே இந்தப் பாழாய்ப் போன காதல் வந்து.. உறவுகளைப் பிரித்து.. சே.. தன் மீதே வெறுப்பாய் வந்தது அவளுக்கு.

"நீங்கள் என்னை தப்பா நினைக்கேல்லை தானே..?" தயங்கியபடி கேட்டாள்.
"எதுக்கு?"
"இல்லை. நான் பாரதியை.. அவருக்கு வேறை கலியானமாயிட்டுது.. ஆனா.." தடுமாறினாள்.
"அதைப்பற்றியெல்லாம் ஆராய இப்ப நேரமில்லை. அவனுக்கு இப்ப தேவையெல்லாம் அன்பும் ஆதரவும் தான். அதை உன்னாலை மட்டும் தான் குடுக்க முடியும். அதால அவனை வடிவாப் பார்த்துக்கொள். வாழும் போதுதான் தன்னைப் பற்றியே சிந்தனையில்லாமல் நாடுநாடு எண்டு ஓடிக்கொண்டிருந்தான். சாகும் போதாவது நிம்மதியாச் சாகட்டும்." சொல்லிவிட்டு "இதுதான் எண்டை போன் நம்பர். உண்டை நம்பர்  எடுத்திட்டன். உடுப்பு அவன்ட ரூம்ல வைச்சிருக்கு. நான் கொஞ்சம் வெளிய போகவேண்டி இருக்குது. உனக்கு ஏதேன் தேவை எண்டால் சொல்லு வாங்கிட்டு வாறன்." என்றவர் தயங்கி "உன்னட்டை காசு இருக்கே. இல்லாட்டி இந்தா இதிலை நூறு டாலர் இருக்கு."
"இல்லை வேண்டாம் என்னட்டை இருக்கு. வேணுமெண்டால் கேக்கிறன்."  அவர் போவதையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், பின் எழுந்து சென்று mapஐ ஆராய்ந்தாள். கார்டன் என்று ஒரு மூலையில் குறித்திருந்தது. போனாள். சுற்றிவர அழகிய மலர்களுடன் மனத்தைக் கொள்ளை கொண்டது அதன் அழகு.

அங்கே ஓர் கனவுலகம் வாவென்றழைக்கும்
எத்தனை மலர்கள் எத்தனை நதிகள்
எல்லாம் ஓர்நாள் தான்

நாளை விடியும் மறுபடியும் பயணம் தொடங்கும்
யுத்த பூமியுன் மரணச்சத்தங்கள் காதை பிளக்கும்
இயந்திரப்பறவைகள் தலை மேல் வட்டமிடும்
ஆனால் என் தப்புதல் அவைகளிடமிருந்தல்லவே..

அதன் மேல் செல்ல முடியாமல் கால்கள் தடுமாற அருகிலிருந்த பெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருந்துவிட்டாள். 

என்றாவது ஒருநாள் 
மேலே செல்ல முடியாது போனால்
சற்றே நின்று இளைப்பாறுவேன்
மீண்டும் பயணம் தொடங்கும்
திரும்பி பாராமலே..

நெஞ்சுக்குள் எதோ வலித்தது. எழுந்தாள். பொழுது சாய்ந்துவிட்டிருன்தது. நேரம் போனதே தெரியவில்லை. அவன் எழும்பும் நேரம் தான். புறப்பட எத்தனிக்கையில்,

"Hello Madam, your purse" திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் தவறுதலாய் மடியிலிருந்து கீழே விழுந்துவிட்ட பர்சிலிருந்து அவன் சிரித்துக்கொண்டிருந்தான், அவளுக்குள் ஆயிரம் கனவுகளை விதைத்துவிட்டு..





யோசனையுடன் அதை குனிந்து எடுத்தவள், எதோ முடிவு செய்தவளாய் அவன் அறையை நோக்கி அடிஎடுத்து வைத்தபோது மனதில் புதுத் தெளிவு வந்திருந்தது.

***** 

கருத்துகள்

எஸ் சக்திவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
காலையில் பார்த்ததைவிட மாலையில் 10 வயது கூடினமாதிரி என்று எழுதியிருந்தீர்கள். நானும் மிக இளைஞனாக இருந்தபோது ஒரு புற்று நோயாளியின் கடைசி காலங்களில் அவருக்கு மிகக் கிட்ட இருந்தேன். மிகச் சரியான உவமானம். அந்த நேரங்களில் நான் மருத்துவன் ஆகியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். Too late.
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இந்த கமெண்ட் தீர்த்தக் கரையினிலே என்ற பதிவில் வந்திருக்கவேணும் என்று நினைக்கிறான் :)
http://naanumorurasikai.blogspot.com/2011/12/blog-post_09.html
எஸ் சக்திவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம். எல்லாவற்றையும் வெவ்வேறு tab களில் திறந்துவிட்டு comments இடும்பொது வரும் தவறு இது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)