இளையராஜாவின் சிவபுராணம்


என்ன திடீரென்று ஒரே பக்தி மயமா இருக்கே என்று நினைக்காதேங்கோ.. நாமெல்லாம் சுத்த(?) சைவாள் பரம்பரையாக்கும். இதற்காகவே அப்பா தன்ரை சின்ன வயசிலையே அசைவம் துறந்துவிட, அம்மாவுக்கு  எண்டை சின்னவயசிலைதான் திடீர் ஞானம்வந்து அதைத்தொடர.. நம்ம பாடு திண்டாடம்.. எண்டெல்லாம் சொல்லமுடியாது. ஏனென்டா நமக்கு எதோ பசிச்சா கிடைக்கிறதை தள்ளும் குணம்தான்.. அது சைவமெண்டா என்ன அசைவமெண்டா என்ன. ஆனா இனிக்கு சைவம் தான் எண்டு முடிவு பன்னிட்டனேண்டா முன்னால மூக்குப் பிடிக்க அசைவம் மணத்தாலும் தொடமாட்டன். மற்றபடி மூண்டு நேரமும் சாப்பாடுத்தட்டை நீட்டிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் இருந்து தப்புவது எப்படி என்ற கவலைதான் அதிகம். அப்பா வேற, "ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமல் எத்தினைசனம் கிடந்து சாகுது. உனக்கு நாங்கள் இப்பிடி கெஞ்சிக் கெஞ்சி சாப்பிட வைக்க வேண்டிக் கிடக்குது" எண்டு அன்னிலையிருந்து இன்னிவரை ஒரே புராணம். என்ன முந்தி கடிதத்திலை, இப்ப ஈமெயில்ல...  டெக்னாலஜி என்னமா முன்னேறிட்டுது பாருங்க..

சே.. திருவாசகத்தைப் பற்றித் தொடங்கிட்டு சாப்பாட்டைப் பத்திக் கதைச்சிட்டிருக்கிரன் பாருங்கோ.. இப்பிடித்தான் அடிக்கடி பாதை மாறிடுது.. 

பக்திமான் எண்டு ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு பேர் சொல்லுவாங்கள். ஆனா எனக்குத்தெரிஞ்ச ஒரே பக்திமான் எங்கடை அம்மம்மா தான். என்னா ஒரு பக்தி? ஆடம்பரமில்லாத அலட்டலில்லாத ஒரு பக்தி. எத்தினை பேருக்கு அவவின் பக்தியின் ஆழம் தெரிந்ததோ தெரியாது. ஆனால் என்னால் பல சமயங்களில் உணர முடிந்தது. முந்தியெல்லாம் திருவெம்பாவை எண்டு வந்திடாப் போதும் விடியக் காத்தால எழுப்பி அந்த மார்கழிப் பனியிலையும் தலையிலை தண்ணியைக்கொட்டி கோவிலுக்கு இழுத்துப்போவார் அம்மா. நானோ  நித்திரைபோன கொதியிலை அழுதுகொண்டே போவன். ஆனா அம்மா வரேலாமை போய்ட்டா அம்மம்மாவோட போகவேணும். 

அப்படி சில தடவை போனபொது கிடைத்த அனுபவங்கள் நிச்சயமாய் மறக்க முடியாது. "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்று கேவிப்பட்டிருப்பீங்கள். அது ஏன் என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஓதுவார் உருகியுருகி படிக்கும்போது எனக்குள் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.. ஆனால் உருக முடிந்ததில்லை. பக்கத்திலிருந்த அம்மம்மாவைத் திரும்பிப் பார்ப்பேன், கண்களால் கண்ணீர் கொட்டும். வரும்போது கேட்ப்பேன் ஏன் என்னால் உருக முடியவில்லை என்று. "உனக்குப் புரியிற வயசிலை எடுத்துப்படி தானா கண்ணீர் வரும்." என்று சொன்னா.. 'சே.. இங்கயும் வயசா?' என்று அலுத்துக்கொண்டது ஞாபகம் வருகிறது. சம்பந்தருக்கு மட்டும் எப்படி இந்தச் சின்ன வயசிலையே ஞானம் வந்ததோ என்றுவேறை கடுப்பயிருக்கும்.

ரெண்டு நாளைக்கு முன்னம் தான் திருமந்திரத்தைத் தேடிட்டிருந்தப்போ திருவாசகம் வந்துது. அட நம்ம சிவபுராணம். இப்பிடித்தான் எப்பவுமே.. நான் ஒன்று தேட இன்னொண்டு வந்து பாதையையே மாத்திடும்.. அதால திருமந்திரத்துக்கு முழுக்குப் போட்டிடு இதைப் படிக்க ஆரம்பித்தேன். நல்லத்தான் போய்ட்டிருந்துது.. திடீரென்று ஒரு இடம்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 
சத்தியமாய் விளங்கவேனுமேண்டு நினைத்துப் படிக்கவில்லை. சும்மா மனசை ஒண்டிலையும் விடாம வாசிச்சிட்டிருந்தன். ஆனா தன்னால கண்ணீர் கொட்டிச்சுது. ஏனென்டே விளங்கேல்லை. பொருளை பிறகு வாசிச்சபோது இசையுடன் கேட்க்கவேண்டுமேன்றொரு ஆர்வம் வந்தது.

சரியென்று தேடியபோது ஒன்லைனில் கிடைத்தது இளையராஜாவின் திருவாசகம் தான். முன்னமே ஒருமுறை காசுகொடுத்து வாங்கிக் கேட்டுவிட்டு பிடிக்காமல் திருப்பித் தரவே வேண்டாம் என்று சொல்லி யாருக்கோ தூக்கிக்கொடுத்த ஞாபகம். இருந்தாலும் நமக்குத்தான் இப்ப நல்ல பக்குவம் வந்திட்டுதே எண்டுநினைச்சுப் போட்டுப் பாத்தன். எஸ். ராமகிருஷ்ணன் வேறை "ஒண்டுக்கும் பயப்பிடாதேயுங்கோ.. போகப்போகச் சரியாயிடும்" எண்டு சொல்லியிருந்தார்.

அவர் சொன்னது மாதிரியே இசை நல்லா தானிருக்குது. ஆனா பல இடங்களில் சினிமாப்பாட்டு போலக்கிடந்துது. சாதாரணமாய் வரிகளைப் படிக்கும்போது வந்த நெகிழ்ச்சிகூட அதில் வரவில்லை என்பது வருத்தமே. (நிற்க, மேலேயுள்ள வரிகள் இளையராஜாவின் சிவபுராணத்தில் எங்கே ருகிறதெண்டே இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பொறுங்கோ!) தேவையில்லாமல் சந்தங்களையும் வார்த்தைகளையும் பிரித்து, தனது கட்டுக்குள் போடுவதாய் நினைத்துக்கொண்டு, அதன் உயிர்த்தன்மையக் கெடுத்துவிட்டாரோ என்று தோன்றியது. நாக. இளங்கோவன் சொல்வதுபோல் "இளையராசாவின் இசையில் திருவாசகம் பழுது", எனும் நிலையை ஏன் உருவாக்கினார் என்றுதான் தெரியவில்லை.

ஓதுவார் உருகவைத்தார். இசையை ரசிக்க வைத்தவர், திருவாசகத்தைக் கருகவைத்துவிட்டாரோ??? நல்லகாலம் அம்மம்மா உயிரோடை இல்லை.



பிற்குறிப்பு: என்னதான் சைவமேன்டாலும் வீட்லை முட்டை  மட்டும் தவறாம கிடைக்கும். எதோ புரதம் வேணுமாமே அதுக்காம். அதெல்லாம் மச்சமில்லையோ எண்டு நான் கேட்டதில்லை. பிறகு இப்பெல்லாம் ஜனனிக்காண்டி மீன் சமைக்கிறது. வேறை KFC போனா சிக்கன்..? சாச்சா.. நாமெல்லாம் சைவாள் பரம்பரையாக்கும்..


கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கும் கேட்கும் போது அத்தனை இம்ப்ரெஸ் பண்ணவில்லை. ஆனால் எல்லா இசையும் எமக்கு பிடிக்கவேண்டும் என்பதில்லை. எமக்கு பிடிப்பது மட்டமே நல்ல இசை என்பதுமில்லை. ராஜா சிலவேளைகளில் செய்யும் முயற்சிகள் எனக்கு புரிவதில்லை. புரிய முயற்சி செய்யோணும். கருமம் பிடிச்ச இசை தான்.. தண்ணி காட்டிக்கொண்டே இருக்கிறது.

திருவாசகத்தை கருக வைத்தாரா? அதை Mr சிவா தான் சொல்லவேண்டும்.
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//அதை Mr சிவா தான் சொல்லவேண்டும்.//
அதுக்கென்ன ஒரு போன்கால் போட்டுப் பாத்திடவேண்டியதுதான். நம்பர் இருக்கா? :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)