ஈழமும் கவிராயர்களும்

"கவிராயர் எனப்படுப்படுபவர் யாரெனில், தமிழ் மொழியில் கவி இயற்றவல்ல தமிழ் அறிஞர் ஆவார்." என்று விக்கி சொல்லுது. அப்பிடி என்னத்தைத் தான் எழுதுவாங்களோ எண்டு பாத்தா முதலில் வந்தது கலிங்கத்துப்பரணி.. வித்துவான் பெ.பழனிவேல் பிள்ளை அவர்களின் விளக்கக் குறிப்புரையுடன் படித்தபோது, 
கேழல் மேழிகலை யாளி வீணைசிலை
  கெண்டை என்றினைய பல்கொடி
தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த
  னிப்பு லிக்கொடித ழைக்கவே.
யம்மா.. ஒவ்வொரு வார்த்தையும் வாசிக்கும் போது சும்மா உடம்பெல்லாம் சிலிர்க்குது.. எப்பிடித்தான் இப்படியெல்லாம் எழுதுறாங்களோ? சரஸ்வதி வந்து நாவிலை குந்தியிருப்பாவோ? ஆனாலும் முழுசா அனுபவித்து வாசிக்க இப்ப எனக்கு பொறுமையில்லை பாருங்கோ.. நாமெல்லாம் கண்ணை மூடித் திறக்கிதுக்குள்ளை கவிஞராகிடனும். அதுக்கேதாவது வழியிருக்குதா? வந்தார் எங்கள் வைரமுத்து. 'சுதந்திரம்' என்னவென்று சொல்றார் பாருங்கோ..
எழுத மை வேண்டும்
வானத்தின் நீலத்தில்
சில குடங்கள் கேட்டேன்
மசியவில்லை 
ஒ.. இவையெல்லாம் இன்னும் மை விட்டுத்தான் எழுதிட்டிருக்கினம் போல கிடக்குது. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது பாருங்கோ.. 'நாமெல்லாம் கணனியிலை hi-techஆ யோசிச்சு எழுதுறவங்கள் எல்லோ', எண்டு நினைச்சுக்கொண்டிருக்கேக்கைதான் படலையோரமாய் காத்துவாக்கிலை இந்த வரிகள் காதிலை வந்து விழுந்துது. 
"முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே.
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே"
வேறை யாரு? நம்ம யுகபாரதி சார் தான். என்னமா பீல் பண்ணியிருப்பார்? அதை ரசிக்கிறதை விட்டிட்டு சும்மா 'நொய் நொய்' எண்டு எல்லாத்தையுமே குறை சொல்லிக்கொண்டு.. இதைத்தானே நானும் அப்பலை இருந்தே சொன்னனான்.. எங்கை இவங்கள் கேட்டாங்கள்? சும்மா நாடு நாடெண்டு.. (ரொம்ப அதிகமோ.. சரி வேணாம், விட்டிடுங்கோ..).

ஆனாலும் பாருங்கோ அவர்கள் மட்டும் இப்பிடி உயிரைக்கொடுத்து, ரத்தம் சிந்தியில்லாட்டி உங்க/நம்ம 'பிழைப்பு' அதோ கதிதான். எங்களைப் புதைத்த இடத்தில, இந்தநேரம் புல்லில்லை.. மரமே முளைச்சிருக்கும். அதையெல்லாம் விடுங்கோ.. இப்பிடி எத்தினை கவிஞர்களை, கவிராயர்களை, 'புரட்சி/மாற்றுக்கருத்து/அலவாங்கு/அரட்டை(இது நானுங்கோ)' எழுத்தாளர்களை எல்லாம் இழந்திருப்போம்?

சரி, நமக்குத்தான் கவிதையின் பின்புலம் அவர்களை விட கொஞ்சம் ஸ்ட்ரோங்க இருக்கே, கொஞ்சம் ட்ரை பண்ணிப்பாப்பமே எண்டு நினைச்சுப்போய் கொப்பியை எடுத்துக் கிறுக்கத் தொடங்கினா.. (நிற்க, லேப்டாப் சார்ஜ் போட்டுது. வீட்டிலுள்ள மற்றைய வலையுலவு உபகரணங்கள் எனது கட்டுப்பாட்டிலில்லை.. ஆங்.. ஒருவேளை வைரமுத்துவும் அதைத்தான் சொல்லியிருப்பாரோ? சரி, நமக்கெதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்?),

வந்தது நம்ம காளமேகம் சார்.. விட்டாரே பாருங்கோ ஒரு அறை.. காதிலை இன்னும் நோய்ங்' எண்டிட்டிருக்குது.. ஹோச்பிடல் போகவேணுமோ தெரியேல்லை..
வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு
கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்று இருந்தக்கால்
இதுக்கே இப்பிடின்னா நம்ம கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி என்போர் நிலை யாதோ???




பிற்குறிப்பு : இதில் குறிக்கப்பட்டவை எவையுமே யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. சிலரது பக்தி/வலி சிலருக்கு மூடத்தனம் போல் தெரியும். சிலரது மூடத்தனம் சிலருக்கு பக்தி/வலி போல் தெரியும். என்ன ஏதாவது புரிகிறதா?

அனந்தன் சொல்லியது : "நீ பெரிய கவிராயர் தாண்டி.. முந்தி வீட்ல மரமெல்லாம் ஏறுரநீ தானே?"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)