பெண்களும் வீணையும்
பதிவு எழுவதை நிறுத்திவிடலாம் என்று பலநேரங்களில் நினைத்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாரோ ஒருவர் வந்து இல்லையில்லை தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்வார்கள். நேற்று கூட ஒரு நண்பர் கதைக்கும்போது "ஏன் பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்" என்று கேட்கையில் "ஜனனிக்கு உடம்பு சரியில்லை அதுதான்" என்று ஒரு சாக்கு சொன்னேன். எழுத வேண்டுமென்று ஒரு நினைப்பு இருந்தால் என்ன தடங்கல் வந்தாலும் ஒரு ரெண்டு வரியாவது எழுதிவிட முடியாதா என்ன? ஆனால் இசைக்க முடியுமா?
"மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்துகொள்ளும் அறிவை வைத்தானே
அறிவைவைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகை கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே "
என்ன நீயும் பெண்ணியம் பேச வெளிக்கிட்டியா எண்டு கேக்காதேங்கோ. எது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் அதப்பற்றிஎல்லாம் இப்ப கதைக்கிறதா இல்லை. அதால இண்டைக்கு நான் எடுத்துக்கொண்ட விடையம் என்னவென்றால் "பெண்களும் வீணையும்" என்பது மட்டும்தான். பெண்களை வீணைக்கு ஒப்பிட்டாலும் ஒப்பிட்டார்கள் போறவன் வாறவன் எல்லாம் என்னமா படுத்திஎடுக்கிரான்கள். அதிலும் திரையில் வீணை எவ்வாறெல்லாம் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் பார்ப்பமா?
முதலில், அதோ மேக ஊர்வலத்தில் வீணையை தூக்கி மேலை, கீழை என்று என்னமா எறிகிறார்கள் என்று பாருங்க. நான் வெகுவாக ரசித்துப் பார்த்த பாடல்களில் இதுவும் ஒன்று. அதற்குக் காரணம் மோகினியின் நளினமா, மனோவின் குரலின் காந்தாரமா என்று தெரியாது. ஆனால் காட்சியமைப்பில் ஒவ்வொரு தடவையும் வீணையை தூக்கிப் போடும்போது நெஞ்சுக்குள் 'பக் பக்' என்றிருக்கும். முந்தி ஒருதடவை வீணையை வைக்கும் போது சற்று கவனக்குறைவா வைத்துவிட்டேன். மெல்லிய சத்தம் தான் கேட்டது, அதற்கே எத்தனை திட்டு வாங்கியிருப்பேன்? இசைக்கருவிகள் எல்லாம் தெய்வத்துக்கு சமானம், அதனை வெகு அவதானமாக கையாளவேண்டும் என்று சொல்வார்கள்.
நிற்க, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று கிறங்கிய கண்களாலும், மிதமான குரலிலும் KR.விஜயா பாடும்போது விரல்கள் மட்டும் உச்சஸ்தாயியில் இருக்கும். ஸ்வரத்துக்கும் அவர் கையசைவுக்கும் சம்பந்தமேயிருக்காது. ஆனாலும் மீண்டும் கோகிலாவில் சின்னஞ்சிறு வயதினில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி என்று தவிக்கும் மனதுடன் தயங்கித் தயங்கி கமலைப் பார்க்கும் ஸ்ரீதேவியிடம் மட்டும் ஏனோ கோபம் வரவில்லை.
இடையில் ஸ்ரீதேவி 'உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்' என்றுவிட்டு வரிகளை மறந்துபோய் முழிக்க, உடனே கமல் சுதாகரித்து 'கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு' என்று அவரைக் காப்பது மட்டுமில்லாது தனது சம்மதத்தையும் மறைமுகமாகவே சொல்லிவிடுகிறார்.
இருவருக்குமிடையில் பட்டும் படாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் என்னவொரு chemistry பாருங்க..
சே.. வீணையைப் பத்தி தொடங்கீட்டு கடைசில கமலும் ஸ்ரீதேவியும் எப்படியெல்லாம் திரையில் romance பண்ணினார்கள் என்ற ஆராய்ச்சிப் பதிவாயிடும் போல கிடக்குது. அதால அதைப்பத்தி பிறகொருநாள் விரிவா சொல்றன். இப்ப நம்ம வீணையைக் கொஞ்சம் பாப்பமா?
அகத்தியர் படத்தில் வென்றிடுவேன் என்ற பாடலில் பாருங்கள். அரசனும், முனிவரும் கையிலை வீணையை வைத்துக்கொண்டு என்னமா போட்டி போடுவார்கள். அது பாவம் சும்மா சிவனே என்று மடியிலை கிடக்கும். கடைசிலைதான் இருவருக்கும் தன்முனைப்பு/போட்டி அதிகமானவுடன் ஆவேசமாய் எடுத்து 'டங்கு டங்கு' என்று அடிப்பார்கள். அது என்ன செய்யும் பாவம்? ஒவ்வொரு நரம்பாய் அறுந்துகொண்டு போகும். ஆனாலும் விடமாட்டார்கள். இறைவனை மகிழ்விக்கும் போட்டியில் வீணை பாவம் நடுவில் கிடந்தது தவிக்கும். வெல்லவேண்டும்.. போட்டியில் வெல்லவேண்டும்.. இசைப்போட்டியில்.. வாழ்க்கைப் போட்டியில்.. அதற்கிடையில் வீணையைப் பத்தி, பெண்ணைப் பத்தி, வீணையின் நரம்புகள் போன்ற அவளின் மெல்லிய உணர்வுகளைப் பத்தியெல்லாம் கவலைப்பட யாருக்கு நேரமிருக்கு?
சரி சரி புலம்பலை நிறுத்திறுயா?? போதும்..
திருவிளையாடல்ல பாட்டும் நானேவில் சிவாஜியை விட(பிக்ஸ் வந்தாப்பல எல்லாம் வாசிக்கப்படாதுங்கோ. வீணை! அது பெண்ணு மாதிரி. புரியுதுங்களா?!) இல்லாததொன்றில்லை என்று T.R.மகாலிங்கம் தம்புராவை ஓரளவு நல்லாவே வாசித்திருப்பார். எனக்குத்தெரிந்து வெள்ளித்திரையில் வீணையை வீணையாய் (பெண்ணாய் நினைத்து?) ஆசையுடன், ஒருவித நளினத்துடன் அழகுற தழுவியது(வாசித்தது?) என்றால் அது சிவகுமார் மட்டும் தான்.
சின்னத்திரையிலை நாடகமேண்டு நான் பெரிசா பாக்கிரதில்லையென்டாலும் "உருதிர வீணை" ஒழுங்கா பாத்திருக்கிறன். அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் முதல்ல ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ருட்ரவீனையிலை ஒவ்வொரு ராகம் வாசிப்பார்கள். அப்பிடியே செத்திடலாம் போல கிடக்கும். என்னவொரு அதிர்வு, உருக்கம். அமிர்தவாஹினி பாடி மழை வந்தது என்று சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனாய் இந்த தொடரில் இந்த ராகத்தை வீணையில் வாசிப்பதைக் கேட்டதும்.. சந்தேகமேயில்லை.. மழையென்ன.. அமிர்தமே வானிலிருந்து பொழியுமே..
சின்னத்திரை, பெரியதிரை எல்லாத்துக்கும் வெளியால போய்ப்பாத்தா சரஸ்வதி, ராமவர்மா என்று பலர் இருந்தாலும் நாம ரசித்தது ராஜேஷ் வைத்தியாவை மட்டும் தான்.. 'அழகே.. அழகே' என்று என்ன அழகா வாசிப்பார் பாருங்க. சான்சே இல்லை.. He is really Great!
அவரின் நிகழ்ச்சிகள் எல்லாமே அற்புதமான நடையில் கொண்டுசெல்வார். அது அவரது பாடல் தெரிவுகளா, அல்லது அவற்றை நளினமாய் கையாளும் அவரது அசாத்திய திறமையா என்று தெரியவில்லை. ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவும் விதமே ஒரு தனியழகாயிருக்கும்.
பெண்கள் பெரும்பாலும் ஆண்களிடம் எதிர்பார்ப்பதுகூட இவ்வகையான அன்பை, காதலை/காமத்தைத்தான் போலும்!
பெண்கள் பெரும்பாலும் ஆண்களிடம் எதிர்பார்ப்பதுகூட இவ்வகையான அன்பை, காதலை/காமத்தைத்தான் போலும்!
கருத்துகள்