சுவாதித்திருநாள் மகாராஜா
உலகத்திலை எத்தினையோ பேர் பாடுறாங்க. ஆனா எல்லாராலும் எல்லாரையுமே ரசிக்க முடிவதில்லை. சிலருக்கு குரலின் கம்பீரம் பிடிக்கும், சிலருக்கு நளினம் பிடிக்கும், இன்னும் சிலருக்கோ அதன் இனிமை பிடிக்கும். பலர் தாளக்கட்டை கவனிப்பார். வேருசிலருக்கோ சுருதி (கமலின்டை மகளில்லையப்பா) இம்மிபிசகாமல் இருக்க வேணும். இதையெல்லாம் தாண்டி எத்தனை பேர் ஆத்மார்த்தமாய் உணர்ந்து ரசித்திருப்பார்கள்? பொதுவாக கர்நாடக இசையை எடுத்துக்கொண்டால் இன்றுள்ளவர்களுக்கு Dr.பாலமுரளிக்ருஷ்ணா தான் எல்லாமே. ஒருமுறை ஊர்லை ராமக்ரிஷ்ணன் மடத்தில் நடந்த கச்சேரிக்கு போயிருந்தேன், அவர் தில்லானா பாடும் விதம் பிடிக்கும். ஆனாலும் ஏனோ முழுமனதாய் இருந்து ரசிக்க முடிந்ததில்லை. (பின்னையென்ன பின்னாலை யாரெல்லாம் வந்திருப்பாங்க எண்டு நோட்டம் விட்டிடிருந்தா பாட்டை எப்படியாம் ரசிக்கிறது?)
இத்தனை வருடங்களின் பின் அவரின் ஒரு தில்லானா ஒளிப்பதிவை தேடிட்டிருந்தப்போ தற்ச்செயலாய் கண்ணில்பட்டவர் தான் நம்ம ராமவர்மா சார். அன்னிவரைக்கும் அவர் யாருன்னே எனக்கு தெரியாது. அதாலை எல்லா தில்லானாவையுமே போட்டிட்டு கடைசியா எதுக்கும் சும்மா போட்டுப் பாப்பம் எண்டு நினைச்சு RVசாரின் வீடியோவை கிளிக் செய்தால் முன்பொருநாள் RMஇனது குரல் எப்படி செவிப் பறையில் மோதி உயிர்கொடுத்ததோ அதே போல மீண்டும் புதிதாய் பிறந்ததுபோல ஒரு உணர்வு. ஆனா இந்தமுறை காட்டுக் கத்தல் எல்லாம் இல்லை. தென்றலைப் போல மெலிதாய் வருடிச் சென்றது.
பிறகென்ன மார்டினுக்கு நடந்ததுதான் வர்மா சாருக்கும் நடந்துது. youtubeல இருந்த அவரது முக்கால்வாசி பாட்டுகளுக்கு மேல கேட்டு முடிச்சாச்சு. என்ன கேட்டென்ன? அவர் ஒரு சிறந்த குருவாக இருக்கலாம். ஆனாலும் நாமெல்லாம் போய் ஏகலைவன் ஆகமுடியாது சரியோ?
சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு முறை தென்இந்தியாவை சுத்திப் பார்க்கப் போயிருந்தப்போ நம்ம டிரைவர் மகாராஜாவின் குதிரமாலிகா மாளிகை பக்கத்திலைதான் இருக்கு போய் பார்க்கச் சொன்னார். நாமதான் பத்மநாதபுரம் மாளிகையே பாக்கிறமே இது எதுக்கு என்று தோன்றியது. ஏற்கனவே பத்மநாதசுவாமி கோவிலுக்குள்ளை போறத்துக்கு மேலை கீழை எண்டு ரெண்டு வேட்டிய சுத்தி அனுப்பியவர்கள் மேலை இன்னும் கடுப்பு போனபாடில்லை. இருந்தும் எதுவோ ஒன்று போகச்சொல்லி உந்த விருப்பமின்றியே உள்ளே செல்வதற்கு காலடி எடுத்து வைக்கையில் இதயம் ஏனோ படபட வென்றது. அதன் பின் உள்ளே என்ன நடந்தது, என்ன பார்த்தேன் என்பதெல்லாம் இன்றுவரை எவ்வளவோ முயன்றும் ஞாபகப்படுத்த முடியவில்லை. எதோ time machineல போட்டு வந்தாப்ல இருந்துது.
கிட்டத்தட்ட நெப்போலியன் பிரமிட்டுக்குள்ளை போய்ட்டு வந்தது போலத்தான். வெளியாலை வந்து பிரம்மை பிடிச்சாப்போல இருந்தப்போ, அவர்கள் மாளிகையை மூடும் நேரம் தாண்டியிருந்ததால் சீக்கிரமே வெளியேறச் சொன்னார்கள். மனமில்லாமல் வந்தது, இப்போ வெளியேற மனமில்லாமல் இருந்தது. இத்தனைக்கும் அதொன்றும் பத்மநாதபுரம் மாளிகை போல் ஆடம்பரமாயிருக்கவில்லை. முதலில் பார்ப்பவர்களை உடனே ஈர்க்கக்கூடிய எந்தவிதமான அம்சமும் அதனிடம் இல்லை. இருந்தும் ஏதோவொரு இசை காற்றில் கலந்து வந்துகொண்டிருந்தது. அதை என்னால் கேட்க முடியவில்லை, ஆனால் உயிர்வரை சென்று தொட்டது. பிறகு, ஒவ்வொரு வருடமும் சுவாதித் திருநாளுக்கு இந்த மாளிகையில் தான் இசை நிகழ்ச்சி நடக்கும் என்று கேள்விப்பட்டபோது எப்படியும் ஒருமுறையாச்சும் போகவேண்டும் என்றொரு ஆசை. இந்தமுறையும் முடியவில்லை. பார்க்கலாம்..
நிற்க, ஏன் உலகத்தில் இத்தனை பேர் இருக்க ஒருசிலரின் குரல்/பார்வை மட்டும் உயிர்வரை தொடுகின்றது என்று நம்ம பாஸ் கிட்டை கேட்டேன். அவர் ஏதும் பேசாமல் குசினிக்குள்ளை போனார். இதென்னடா வம்பாப் போச்சு நம்மை சமைக்கச் சொல்லப் போறாரோ எண்டு பாத்தா ரெண்டு கரண்டியை எடுத்து ஒன்றைத் தட்டி மற்றதின் அருகில் கொண்டு சென்றார். அடடே நம்ம பரிவுத் தத்துவம்.
கருத்துகள்
நிற்க, ஒவ்வொரு பதிவின் பின்னாலும் ஒரு பெரிய கதையே இருக்கும். அது சம்பந்தப் பட்டவங்களுக்கு மட்டும் புரியும். அது போதும்.
குடுத்து வைத்தநீங்கள். (என்ரை மனிசி உங்கள் மேளேயுள்ள post ஐ வாசிக்காதவரை சரி; இல்லாவிட்டால் மற்ற 50 % நாட்களும் என்னைச் சமைக்கச் சொல்லிப் போடுவாள்)
மற்றபடி ஏதாச்சும் நான் கிறுக்குத்தனமா கேட்டா அதுக்கு இப்படிஎதாச்சும் மறைமுகமாத்தான் பதில் சொல்லுவாரா.. அதப் புரிஞ்சு ஒரு பதிவு போடுறதுக்குள்ளை போதும் போதுமேன்றாயிடும்.. ஷப்பா...
// இல்லாவிட்டால் மற்ற 50 % நாட்களும் என்னைச் சமைக்கச் சொல்லிப் போடுவாள்//
பாராளுமன்றத்திலையே 33% தான் கேக்கிறாங்க. உங்கடை மனுசி நிச்சியமாக் குடுத்து வைச்சவதான்.