மரியா (Mariah)



வாழ்க்கையின் வெறுமைக்குள் 
வலிகளைமட்டுமே இருப்பாக்கி
விலகிடும் நேரத்தில் ஒருநிமிட விழிப்புணர்வு


மெதுமெதுவாக உயிர் பறித்த வலியின்று
முழுவதுமாய் வேரோடு பிடுங்கியெறிந்த உணர்வுகள் 
மீண்டும் உயிர்பெறாதிருக்கட்டும்



ஆயிரம் கேள்விகள் அவளை நோக்கி
பதில்தானில்லை எதற்குமே அவளிடம்
வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத முட்டாளா
வசந்தத்தைக் கருக்கிய கல்நெஞ்சக்காரியா



அவரவர் தம் வலியுரைத்து
அழகானதுன் வாழ்க்கை 
அழித்துவிடாதேயென்று உபதேசிக்கையில்  
அனுதாபம்தான் வருகிறது அவர்களின் மேல் 
நீவிர் குறை சொல்வது அடுத்தவர் மேலேன்றிருக்க 
எங்கனம் அழகாகும் உம் வாழ்க்கை?
யாரும் யாருக்காக்கவுமில்லை 


கால்கள் போவதே வழியாக
நாளை பற்றிய நினைவுகளேதுவுமின்றி 
இந்த நிமிடம் இங்கேயே 
இருப்பையுணரும் வாழ்க்கைகூட 
ஒரு வகை போதையே 


ரோஜா மலர்வதும் உலகதிசயமாகும்
முட்கள் குத்திக்கிழிக்கும் வலிக்காது
கதிரவன் ஒளியுண்ணும் பச்சையமாய் தோல் மாறும்
பூமியின் மீடிறனில் மூளை இயங்க
குளிரில் வெடவெடக்கும் தேகம் மெதுவாய்
வெப்பமேற்றிய கரங்களை மறக்கும் தருணங்களில்
மீண்டுமோர் விழிப்புணர்வு



நேற்றுவரை உயிர்தின்ற வலியின்று
வேரோடு பிடுங்கியெறிந்த உணர்வுகள்
மீண்டும் நாளை உயிர்த்தெழாதிருக்கட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)