அமாவாசை இரவுகளில்



அரைவட்ட மதில் வெளியே நீர்நிலை
அல்லி துடிக்கின்றது நிலவொளி காண
சிலநூறு மின்மினி வெளிச்சத்தில்
நிலவும்தான் மங்கிற்றோ இன்று

மேக மூட்டமுமில்லை
பூமி நிழலுமில்லை
எங்கே சென்று ஒளிந்தது
இந்த நிலவு ?

அந்திவானச்சிவப்புக் காய்ந்து
நாளிகை பல கழிந்துவிட்டதென்று
அதனிடம் சென்று உரைப்பவர் எவரோ
இன்று மட்டும் ஏன் மறந்தாரோ

மலர்ந்த கடன் நீரினில் அழுகிடவோயிலை
முழுமதிக்குத் தவமிருக்கவோவன்றி
பாரினில் பணிவிடை செய்யவோவிலை
வெறுமனே கனவுகள் காணவோ

நாளை பூஞ்சோலையில் சென்று மலர
இன்று பாலைவனத்தில் நின்று தவம்
அங்கும் வரவிருப்பது இந்த நிலவுதானே
சென்று மலர்வதும் இதே அல்லிதானே

பௌர்ணமியின் வர்ணனைகள்
தேனாயினிக்கின்றன - இருந்தும்
அமாவசை இரவுகள் அங்கு வராதென்று
அடித்துச்சொல்ல முடியாதே

விண்ணில் எறிந்த அபிராமியின் காதணிகூட
மறுநாளே காணாது போயிற்றே
மாதமொரு தோடுதர அவளுக்கும்தான்
எத்தனை செவியிருக்கவேண்டும்

யுகங்கள் கடந்த நினைவுகளில்
யுகமாய்ச் செல்கின்றன நிமிடங்கள்
அறிவை அடைந்தபின்பும்
அவாவுறுவது அழகாகுமோ

கிழக்கில் சூரியன் கதிர்பரப்ப
இன்னும் சில நிமிடங்களே..
வருமா அந்த நிலவு மீண்டும்
அல்லியினுயிர்காக்க?



"Before you my life was like a moonless night. Very dark, but there were stars--points of light and reason...And then you shot across my sky like a meteor. Suddenly everything was on fire; there was brilliancy, there was beauty. When you were gone, when the meteor had fallen over the horizon, everything went black. Nothing had changed, but my eyes were blinded by the light. I couldn't see the stars anymore. And there was no more reason for anything." - Twilight 





கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கவிதையின் context வேறாக இருக்கலாம். ஆனால் எனக்கு எது புரிந்ததோ அது தானே அர்த்தம் .. விடுங்கள் ..

காத்திருப்பது அல்லியா தாமரையா என்பதை பொறுத்து தான் தேடல் நிலவா சூரியனா என்றிருக்கும் .... கடன் வாங்கி ஒளி வீசும் நிலவுக்காக ஏங்கும் பேதை அல்லிக்கு சொல்லுங்கள், இரவில் மட்டும் வரும் நிலவு, ரசனைக்கு விருந்து, வாழ்க்கைக்கு? இன்னும் எட்டு மணிநேரம் தான் .. சூரியன் வந்துவிடும் .. தாமரையாய் காத்திரு என்று! சூரியனை ரசிக்க கற்றுக்கொள்ளு என்று!

அஸ்தமநம் எல்லாம் நிரந்தரம் அல்ல .. மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும் -- வைரமுத்து
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
ஆச்சரியமான உண்மை.. நீங்கள் எதை வைத்து இப்படியொரு தீர்வு கொடுத்தீர்களோ.. நிலவின் ஆசைகூட அல்லி தன்னை விடுத்து சூரியனிடம் நேரடியாகவே தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே.. ஆனாலும் சூரியனைக் காணப்போகு முன்னரான கடைசித்தருனங்களில் நிலவை ஒருமுறையாவது தரிசித்துவிடத் துடிக்கிறது.. அது அமாவாசை இரவு என்று தெரிந்தும் கூட..
ஏ.எ.வாலிபன் இவ்வாறு கூறியுள்ளார்…
நாலாவது பத்தியில் இலை (இல்லை) என்பதை பிரித்து எழுதினால் அதன் வாசிப்புக்கும் அர்த்ததிர்க்கும் புரிதலுக்கும் இலகுவாக இருக்குமோ ?

முதல் நாலு பத்தி வரை ஒரு இரவுப் பாடல் அல்லது பிரிவாற்றாமை மட்டும் என்று நினைத்தேன் - திடீரெண்டு இடைச்செருகல் மாதிரி ஐந்தாம் பத்தி - ஊருக்கு போற நினைப்பில எழுதினீங்களா ? என்னுடைய அக்கரைப்பச்சைகளை ஒருக்கா நினனைவு படுத்தியது.... (ஜேகே நோட் திஸ் பொயின்ட்.... அந்த தொடர்ச்சி ஆறாம் பத்தி;

ஏழாம் பத்தி - அட நம்ம முள்ளிவாய்க்கால். நம்ம பிரச்சனைதான் உங்களுக்குமா.

எட்டாம் பத்தி - இடைச்செருகலா? - கொன்பூசியசே கொன்புயிஸ் பண்ணுமே... இல்லை எங்கட இழவுக்கு தெய்வ நிந்தனையா?

ஜேகே, என்ட நாக்கு தடியாயிட்டுதா எண்டு பாருங்கோ? (அட சே 'ஒரு மாதிரி' குணா ஆகிட்டனே)

கடைசிப் பத்தி - என்னதான் யாழ் ஐடி போல பல கிளம்பி கட்டி எழுப்பினாலும் பழைய மாதிரி வராதில்லை எண்டு வெக்ஸ் ஆகிட்டீன்களா ?

சீ... சீ... இந்த 'சில நிமிடங்கள்' உதைக்குதே.... மறுபடியும் இரவுப்பாடகன் பிரிவாற்றாமை....

கடைசியா ஜெகேன்டையும் உங்கடையும் உரையாடல் பார்த்தபிறகு விளங்கீட்டுது - விளங்கேல்லை எண்டு; எனக்கு கவிதை விளங்கேல்லை எண்டு.

நல்ல கவிதை எண்டு abstract கொமென்ட் போட்டுட்டு எஸ் ஆகியிருக்கலாம்.
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
என்னமா ஒரு விமர்சனம் பண்ணியிருக்கிறீங்க ஏ.எ.வாலிபன்
பதில் எழுதவே ரெண்டு நாளா மண்டையக் குடைய வேண்டியதாப் போச்சு.. பலதை மறைமுகமாகச் சொல்லத்தான் நான் இந்த வகை நடையை தெரிவு செய்வதே.. அதிலை நீங்கல்லாம் இப்படி வந்து கிண்டிக் கிளறிநீங்கன்னா உண்மைய உளறிடுவன்.. அதால விட்டிடுங்க பாவம்..

//எட்டாம் பத்தி - இடைச்செருகலா? - கொன்பூசியசே கொன்புயிஸ் பண்ணுமே... இல்லை எங்கட இழவுக்கு தெய்வ நிந்தனையா? //
அடுத்ததாய் ஒருபந்தி வெட்டிட்டன், அதால தொடர் சரியா complete ஆகேல்லை போல..

//சீ... சீ... இந்த 'சில நிமிடங்கள்' உதைக்குதே.... மறுபடியும் இரவுப்பாடகன் பிரிவாற்றாமை....//
நாமளே தான் உளறிட்டமோ.. அடுத்ததிலை இன்னும் கொஞ்சம் கவனம் எடுக்கோணும்.. பசங்க ரொம்ப உசாராதான் இருக்கிறாங்க..
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//நாலாவது பத்தியில் இலை (இல்லை) என்பதை பிரித்து எழுதினால் அதன் வாசிப்புக்கும் அர்த்ததிர்க்கும் புரிதலுக்கும் இலகுவாக இருக்குமோ ?//

ஒரே பந்தியில் ரெண்டு மூணு தரம் இல்லை இல்லை என்று வர ஒரு மாதிரியாகவிருன்தது அதுதான்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)