இறுதிப்போரின் வடுக்கள்

நீண்டநாள் நினைத்திருந்தது   
நேற்றுத்தான் அழைப்பு வந்தது 
நான்கு மணிநேரப் பயணம்..!

வீதியோர வடுக்களில்
கடந்தகாலம் நிழலாட
சாலைமீதான பூச்சுக்களில் 
நிகழ்காலம் ஊசலாடுகிறது

வழியெங்கும் டிவிசன்கள் வரவேற்க
கூரையற்ற வீடுகளை, பொத்தல் கடைகளை
தாண்டிப் போகையில்..
தூசி நடுவே தெரிந்த
வெண்ணிற எழுத்துக்களை சிரமத்துடன்
கூட்டிப் படித்த மனது கனக்கவில்லை

புதிது புதிதாய் பல குடியிருப்பு வந்ததினால் 
புதுக்குடியிருப்பு தற்கொலை செய்து கொண்டதாய்
படித்தவர்கள் சொன்னார்கள்

சனங்களெல்லாம் கடைசியில் கைவிட்டுப் போனதனால்
சாப்பிட வழியின்றி ஆயிரக்கணக்கான சைக்கிள்கள்
சல்லடையாய்ப் போய்விட்டதாய் 
சந்தியில் நின்று நாலுபேர் சத்தம் போட்டனர்

வீதியின் இருமருங்கும் துருவேறிய மரங்களாய்
பேரூந்துகள், மோட்டர் வண்டிகள், வான்கள் என்று
பார்க்குமிடமெல்லாம் இறுதிப்போரின் வடுக்கள்  

ஆங்கங்கே நீலப் பலகையில் மட்டும் தெரிகிறது
வெள்ளையுடை சிவப்புச் சால்வையில்
"வடக்கின் வசந்தம்"

நந்திக்கடலில் வலைபோட்டு இழுத்தவனுக்காவது
சிக்கியிருக்குமா ஓரிரு..
எலும்புக்கூடுகள்...?

                           
                                     
சீக்கிரமாய்க் கண்டு பிடியுங்கள்
இல்லாவிடின் நாளைய தலைமுறை
இலக்கியத்தில் படிக்கும்
இராமர் கொன்றுபோட்டது
இயந்திரங்களைத் தான் என்று..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)