சுவர்க்கமும் நரகமும்
சுவர்க்கம், நரகம் என்பதில் எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலான மதக் கோட்பாடுகளில் இவையிரண்டும் நிச்சயமாகவே இடம்பெற்றிருக்கும். சொர்க்கத்தில் சிங்கமும் ஆடும் ஓடையில் ஒன்றாய்ச் சேர்ந்து நீரருந்தும் என்றும் நரகத்தில் எண்ணைக் கொப்பரைக்குள் போட்டு எடுப்பார்கள் என்றும் சொல்வார்கள்.
இப்படிப் பல்வேறு கதைகளைப் பலகாலமாகவே அறிந்திருந்தாலும் இவ்விரண்டிற்கும் நமக்கும் எதுவித சம்பந்தமுமே இருப்பதாய் இதுவரை உணர்ந்ததில்லை. சுவர்க்கமோ எதுவோ அதுபாட்டுக்கு இருந்திட்டுப் போகட்டுமே எண்டு தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலுமே நரகம் மட்டும் இந்த பூமியை விட கொடூரமாய் இருக்காது என்பது உறுதியாய் தெரிந்தது. ஏனெனில் அங்கெல்லாம் செய்த தவறுக்குத்தானாம் தண்டனை கொடுப்பார்கள். ஆனால் இங்கோ யார்யாரோ செய்ததெல்லாம் யார்யாரோ தலையில் போய்விழுகிறது. சத்தியத்தைப் போலவே மௌனம் என்பதும் ஓர் வலுவான ஆயுதம் தான், ஆனால் அது இங்கே கோர்ட்டில் கூட குற்றவாளி என்றே தீர்வாக்குகிறது. வாயுள்ளவன் பிழைத்துக் கொள்வான். அது வெள்ளைச் சட்டை மஞ்சள் சால்வை எண்டால் என்ன, சிவப்பு சால்வை எண்டால் தானென்ன.
வெள்ளைச் சட்டை எனும்போது தான் ஞாபகம் வருது.. அதென்னெண்டால் நாம தினம் தியான வகுப்புக்கு போகையில் வெள்ளைச் சட்டை போட்டிடு போவமா, எல்லாருமே நாம எதுவோ சாமியாராய்ப் போட்டம் (பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பதற்கு சாமியாராகவேணும் எண்டதில்லை) எண்டு நினைச்சு.. அதிலை கொழும்பிலை இருந்து ஒரு மாமி வேறை வேலையே இல்லாம பஸ்(/வான்/பிளேன்) பிடிச்சு போய் அனந்தண்ட ஊர்முழுக்க ஏதேதோ கதை பரப்பி, கடைசியா நாம அனந்தன் வீட்டை பைக்ல போய் இறங்க எல்லோரும் செமையா குழம்பிட்டாங்க. இருந்தாலும் பாருங்க நம்ம மாமி (அனந்தண்ட அம்மா) மட்டும் அசரவே இல்லை..
நிற்க, இந்த சுவர்க்கத்துக்கும் வெள்ளைச் சட்டைக்கும் என்ன சம்பந்தம் எண்டு கேட்டிங்கன்னா, பொதுவாகவே எல்லா இடத்திலையுமே தூய்மையைக் குறிப்பதற்கு வெண் நிறத்தையே பயன்படுத்துவார்கள். அதுபோலவே நாமும் பற்று, காமம், குரோதம், கோபம், அகங்காரம் போன்ற எல்லாவிதமான விகாரங்களும் களைந்து தூய்மையாகவேண்டும். சரி இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு தூய்மையாகி என்ன பண்ணுவீங்க?
என்னைக் கேட்டால் மன அமைதிக்கும் தூய்மைக்கும் நிறையவே தொடர்பிருக்கு. நாங்க எவ்வளுவுக்கெவ்வளவு தூய்மையாகின்றோமோ அவ்வளுவுக்கவளவு நமக்குள் இருக்கும் தெய்வீக குணங்கள் வெளிப்படும். எதற்காய் இந்தப் பிறவி என்று சலித்துக்கொள்ள மாட்டோம். எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் ஏற்கும் பக்குவம் வரும்.
என்ன ரொம்பவே அறுக்கிறமோ..? இண்டைக்கு வேறை நாம FBல தூய்மையைப் பத்தி எதுவோ கிறுக்கப் போய் கூகுளே குழம்பிட்டுது. "Purity does not mean just celibacy but also to be free from attachment." (தூய்மை என்பது பிரமச்சரியம் மட்டுமல்ல, பற்றுகளிலிருந்தும் விடுதலை அடைதல் வேண்டும்.) இதுக்கு google translate எப்பிடிப்பண்ணுது பாருங்க. "தூய்மை தான் பிரம்மச்சரியத்தை அல்ல ஆனால் இணைப்பு இருக்க வேண்டும்." என்ன கொடுமை சார்..
சரி அதை விடுங்க.. நாம சுவர்க்கத்தைப் பத்தி எல்லே கதைச்சிட்டிருந்தனானகள்.. அது வந்து, புண்ணிய ஆத்மாக்கள் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும் என்று சொல்லுறாங்க. சரி, அவர்கள் சென்றுவிட்டுப் போகட்டுமே என்று பார்த்தால் இங்கைதான் ஒரு சின்ன ட்விஸ்ட். அது என்னவெனில் மற்றவர்கள் மீண்டும் நரகம் உருவாகும் போது திரும்ப வந்து தான் ஆகவேண்டுமாம். பிறப்பு இறப்பு சக்கரத்திலை இருந்து எந்தப் பெரிய மகானாலுமே தப்பவே முடியாதாமே. அட சொல்ல மறந்திட்டன் நம்ம சுவர்க்கம் என்பதும் நரகம் என்பதும் வானத்திலையோ பாதளத்திலையோ இல்லிங்கோ. எல்லாம் சட்சாத்த் இந்த பூமிதான். ஓஷோ கூட அடிக்கடி சொல்லுவார் சுவர்க்கம் என்பதும் நரகம் என்பதும் நீ வாழும் விதத்திலேயே இருக்குதெண்டு. அப்பெல்லாம் புரியலை. ஆனா இப்ப எதோ கொஞ்சம் புரியுற மாதிரி இருக்கு..
என்னத்தைப் புரிந்து என்ன? நாம வரைந்ததை நாம தானே வாழ்ந்து ஆகணும்? என்ன ஒன்று இனி வரைவதையாச்சும் பாத்து வரைங்க..
கருத்துகள்