12.12.12
"புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்" -'நியூயார்க் டைம்ஸ்'
Photo Credit: Diraj |
சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பிறந்த நாளாக மலருகிறது வரும் 12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அபூர்வ தேதி இது. உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், இந்தப் பிறந்த நாளை தங்களால் முடிந்த அளவு சிறப்பாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழ் சினிமா உலகமும், ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நேரத்தில் இன்னொரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு இந்த ஆண்டு வருவது 63 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் அமையும் தேதி 12.12.12. இந்த மூன்றையும் கூட்டினால் 36 வருகிறது (12+12+12). ரஜினி சினிமாத் துறைக்குள் காலடி வைத்து 36 ஆண்டுகள் ஆகின்றன! இந்த 36-ஐ திருப்பிப் போட்டால், அவரது வயது 63 வந்துவிடுகிறது.
இது ஒரு தன்னிச்சையான ஒற்றுமையாக இருந்தாலும், வேறு எந்த நடிகருக்கும் அல்லது தலைவருக்கும் அமையாத ஒரு அபூர்வ விஷயம் என்பதால், இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸும், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும் இணைந்து இசை ஆல்பம் தயாரித்து வெளியிடுகின்றனர். இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி. எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன். இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும்,” என்றார்.
கறுப்பு வெள்ளையில்...
சமீபத்தில் கலைப்புலி தாணுவை நாம் சந்தித்தபோது, ரஜினி கறுப்பு வெள்ளை காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆனதை இப்படி வர்ணிக்கிறார்:
பைரவிக்கு நான்தான் விநியோகஸ்தர். ரஜினியுடன் அப்போதே தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கம். அண்ணாசாலையின் பிரதான பகுதியில் பைரவி படத்துக்கு பிரமாண்ட கட் அவுட் வைத்தேன். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தேன். பத்திரிகையிலும் அப்படித்தான் பெரிய சைஸில் விளம்பரம் கொடுத்தேன்.
அடுத்த நாளே பதறியடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு வந்தனர் இயக்குநர் எம் பாஸ்கரும் தயாரிப்பாளர் கலைஞானமும்.
“என்ன தாணு.. புரட்சித் தலைவர், நடிகர் திலகமெல்லாம் இருக்கும்போது இப்படி ஒரு பட்டப்பெயர் வச்சிட்டீங்க. தயவு செய்து அதை எடுத்துடுங்க..அவங்க ஏதும் தப்பா நினைச்சிடப் போறாங்க..,” என்றனர்.
“சரிண்ணே, எடுத்திடறேன்,” என்று கூறிவிட்டு, அடுத்த நாள் தந்தியில் ‘இந்தியாவின் மெகா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்’ என்று விளம்பரம் கொடுத்தேன். அதற்குப் பிறகு யாரும் என்னிடம் ஆலோசனை கூறவில்லை. மூன்றாவது நாளிலிருந்து சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுதான் விளம்பரம் கொடுத்தேன். இன்று வரை அந்தப் பட்டப் பெயர் அவர் ஒருவருக்கு மட்டும்தான். இனியும் யாருக்கும் பொருந்தாது,” என்றார்.
வண்ணத்தில்…
ரஜினி நடித்த முதல் வண்ணப்படம் 16 வயதினிலே. ஆனால் அவர் முழுமையான கதாநாயகனாக நடித்த முதல் வண்ணப்படம் முள்ளும் மலரும். ஸ்டைலில், வசூலில் மட்டுமல்ல… நடிப்பில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க ஆரம்பித்தார். அதுவும் பைரவி வெளிவந்த ஆண்டுதான்.1978-ல் மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ரஜினி மொத்தம் 21 படங்கள் நடித்திருந்தார். அது ஒரு பெரிய சாதனை!
“ரஜினிக்கு மிக முக்கியமான காலகட்டம் அது. அசுரத்தனமான உழைப்பை கொட்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் அந்த ஆண்டு. அதற்கு அடுத்த ஆண்டு, ரஜினி மிகப் பெரிய ஆக்ஷன் சூப்பர் ஸ்டாராக தன்னை உயர்த்திக் கொண்டார். அப்போதுதான் பில்லா, ஜானி, முரட்டுக்காளை என மெகா ஹிட் படங்கள் அவருக்கு அமைந்தன… தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அவர்தான் என்ற நிலை உருவானது,” என்கிறார் ரஜினிக்கு அந்தஸ்து நிலைக்கக் காரணமான இயக்குநர் எஸ்பி முத்துராமன்.
3 டியில்…
ரஜினி படத்தை 3 டியில் எடுக்க வேண்டும் என முதலில் திட்டமிட்டவர்கள் தேவர் பிலிம்ஸ். அப்போது மைடியர் குட்டிச்சாத்தான் வந்து, எங்கும் 3 டி என்ற பேச்சுதான். ஆனால் அந்த சமயத்தில் தமிழ், இந்தி என பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார் ரஜினி. உடனே விஜயகாந்தை வைத்து அன்னை பூமி என்ற 3 டி படத்தை வெளியிட்டனர் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.
அந்தப் படத்தின் தோல்வியோடு 3 டி பற்றிய பேச்சு அடங்கிவிட்டது. மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன் அவதார் வந்தபோதுதான் 3 டியில் படமெடுக்கும் ஆசை எல்லோரையும் தொற்றிக் கொண்டது. தமிழில் முழுக்க முழுக்க 3 டியில் தயாரான படம் என்றால், எதுவும் இல்லை எனலாம். சில மாதங்களுக்கு முன்பு வந்த அம்புலியில் கூட சில காட்சிகள்தான் 3 டியில் இருந்தன. மற்றவை 2டிதான்.
இந்த நிலையில் 2007-ல் வெளியாகி சக்கைபோடு போட்ட ரஜினியின் சிவாஜி – தி பாஸ் படத்தை, முழுமையாக 3 டிக்கு மாற்றியுள்ளனர். இதற்காக 400 கலைஞர்கள், ரூ 16 கோடி முதலீடு என மெகா முயற்சியில் இறங்கியுள்ள ஏவிஎம் நிறுவனம், அதில் வெற்றியும் கண்டுவிட்டது.
சிவாஜி 3 டியுடன் மோதுவதா என இப்போதே பல ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் ஒதுங்கி நிற்க, ரஜினியே பெருந்தன்மையுடன், யார் படத்தோடும் மோத வேண்டாம்… முன்கூட்டி வெளியிடுங்கள். வளரும் நடிகர்கள் படத்துக்கு வழிவிடுங்கள் என்று கூறும் அளவுக்கு இந்தப் படம் கலக்கலாக வந்திருக்கிறது.
சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்கள்தான் என்று ரஜினியே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனிமேஷன்..
ரஜினியின் அடுத்த படம் கோச்சடையான். இதுவும் 3 டி படம்தான். அனிமேஷனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக வெளிநாட்டு ஊடகங்களால் வர்ணிக்கப்படும் அளவுக்கு உயர்ந்த தொழில் நுட்பத்தில் தயாராகிறது. அனிமேஷன் என்று தெரியாத அளவு நிஜமாகக் காட்சிதர வைக்கும் தொழில்நுட்பம் இது.
இந்திய திரையுலகில் பெரும் மாறுதல்களுக்கு இந்தப் படம் வித்திடும் என்ற எதிர்ப்பார்ப்புடன் கோச்சடையானை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகினர்.
“தமிழ் சினிமா என்றல்ல.. உலக சினிமா என்று பார்த்தால் கூட, சினிமாவின் அத்தனை வடிவங்களிலும் உச்ச நட்சத்திரமாகவே வெற்றிக் கொடி நாட்டிய பெருமை ரஜினி சாருக்குதான் உண்டு. அந்த வகையில், அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைச் சூட்ட ஆண்டவன் என்னை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவே கருதுகிறேன். சினிமாவின் அடுத்தடுத்த வடிவங்களிலும் அவர் உச்ச நட்சத்திரமாகவே தொடர வேண்டும் என்பது என்னைப் போன்ற அவரது நலம் விரும்பிகளின் ஆசை.. வாழ்த்து!” என்றார் கலைப்புலி தாணு.
தொகுப்பு : ரெ. துவாரகன்
நன்றி : யாழ் ஓசை
சென்னை மாவட்ட ரசிகர்கள் சார்பில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் 13.12.12-ல் கொண்டாடப்படவிருக்கிறது. அதுபற்றி விகடன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை…
‘பல்லேலக்கா பல்லேலக்கா… சூப்பர் ஸ்டார் ரஜினி வந்தா, தமிழ்நாடு அமெரிக்கா…’ _ என்பது போன்ற பேனர்கள், ரஜினி பிறந்த நாள் விழாவை சென்னையில் அமர்க்களப்படுத்த இருக்கின்றன.
12.12.12 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 63-வது பிறந்த நாள். இந்தமுறை நாள், மாதம், வருடம் அனைத்தும் 12 என்று வருவதால், அவருடைய ரசிகர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டம்!
அன்றைய தினம் பெசன்ட் நகர் மாதா கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், மவுன்ட் ரோடு தர்கா, சைதை இளங்காளி அம்மன், தாம்பரம் செல்வ விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும் ரஜினி ரசிகர்கள், அடுத்த நாள் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 63 கிலோ கேக் வெட்டி விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.
அன்று மாலை நடக்கும் விழா வில், ம.தி.மு.க-வில் சர்ச்சையைக் கிளப்பிவரும் நாஞ்சில் சம்பத், முதன் முதலாக ரஜினி ரசிகர் மன்றத்தின் மேடையில் ஏறுகிறார். அவர் தலைமையில், ‘கோடி நிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிற எங்கள் சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்குக் காரணம் நடிப்பா… பண்பா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
ரஜினி பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக் கச்சேரியோடு, திண்டுக்கல் ரஜினி சோமுவின் வித்தியாசமான ரஜினி ஷோவும் நடக்கிறது. ஏராளமான திரை நட்சத்திரங்களும் வாழ்த்திப் பேச வருகிறார்கள். 12 ஏழை மாணவர்கள், 12 முதியோர் இல்லங்கள், 12 ஏழைக் குடும்பங்கள்… என்று 15 லட்ச ரூபாய்க்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ரஜினி ரசிகர்கள் 5,000 பேர் கண்தானம் செய்கின்றனர். விழாக்குழுவினர் 20 பேர் உடல்தானம் செய்கிறார்கள். விழாவுக்கு 30 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச மரக்கன்று கொடுக்கிறார்கள்.இயற்கையைப் பாதுகாக்க மரம வளர்க்கவேண்டும் என்று ரஜினி விரும்புவதால், இந்த ஸ்பெஷல் ஏற்பாடாம். ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக, ரஜினி படத்தில் உள்ள பஞ்ச் டயலாக்குகள், தத்துவப் பாடல்களை அகன்ற திரையில் போட்டுக் காட்டுகிறார்கள். ‘ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் செய்றான்’, ‘ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி…’, ‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது… ஆனா, வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்…’ என்று, பல அதிரடி வசனக் காட்சிகளைத் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.
”13-ம் தேதி விழா எளிமையாகவும், அதேநேரத்தில் ரஜினியின் பண்புகளை எடுத்துச் சொல்லும் வகையிலும் இருக்கும்” என்கிறார்கள் சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் விழாக் குழுவினர் ராம்தாஸ், சூர்யா, ரவி, சினோரா அசோக் மற்றும் சைதை ரவி ஆகியோர்.
கடந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியின் 62-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. விழா, கட்-அவுட்டுகள், பேனர்கள், அதில் இடம்பெற்று இருந்த வாசகங்கள் குறித்து ரஜினிக்குத் தகவல் சென்றதை அடுத்து, அதில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னாராம். அதனால், இந்த ஆண்டு அவருடைய முழுமையான ஒப்புதலோடுதான் விழாவை நடத்துகிறார்களாம்.
இந்தத் தடவை ரஜினி நிச்சயம் விழாவுக்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
லேட் என்றாலும் லேட்டஸ்ட்டாக வருவாரா ரஜினி?
நன்றி: விகடன்
கருத்துகள்