இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ரெண்டு வரியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று முடித்துவிடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் என்று தோன்றவே கொஞ்சம் நீட்டி முழக்க அதுவே ஒரு பதிவாக வந்துவிட்டது. 

2012, ஓஷோவின் The Art of Dying உடன் தொடங்கியது. பயணம் இலங்கையை நோக்கியது. கொடுக்கப்பட்ட விலை சற்று அதிகம் என்றாலும் தொலைந்துபோன பக்கங்கள் சில மீட்க்கப்பட்டன. பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கப் பெற்றன. அனந்தனுடனான இந்தியாவுக்கான இரண்டாவது ஆன்மீகப் பயணம் பல இனிய அனுபவங்களைப் பெற்றுத் தந்தது. 

சாதனைகள் என்று சொல்லப்போனால், ராமர் பாலம்கட்ட அணில்குஞ்சும் உதவியதுபோல யாழின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பெரும் ஆரம்பங்களில் துணை நின்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னதான் ஆயிரம் கனவு கண்டாலும் அதை திறமையாக செயல் படுத்துவதற்கு தகுந்த அணியும் தேவை. அந்தவிதத்தில் Yarl IT Hub மற்றும் Himalaya Creations Pvt Ltd இரண்டிலும் ஏதோவொருவகையில் ஊக்குவிக்கும் காரணியாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவையிரண்டுமே இந்த குறுகிய காலத்தில் யாழில் இன்றைய சூழலில் என்னவெல்லாம் நடத்தமுடியும்/சாதிக்க முடியும் என மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத உயரங்களை தொட்டு நிற்கின்றன. 


பல தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் என்னால் நேரிடையாக பங்களிக்க முடியாது போனமைக்கு மன்னிப்பு கோரிக்கொண்டு இந்நிறுவனங்கள் மேலும் மேலும் வளர எனது மனதார்ந்த வாழ்த்துக்களை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

இறுதியாக.. கடந்த பன்னிரண்டு மாதங்களாக எம்முடன் கூடநின்று உழைத்தோர், தள்ளிநின்று எள்ளி நகைத்தோர், பாராட்டினோர், குறை/நிறை விளம்பினோர், புகழ்ந்தோர் இகழ்ந்தோர், அறிவுரை தந்தோர், வேலை தந்தோர், வேலை வாங்கினோர், வெட்டியாய் வம்புக்கிழுக்க அலைந்தோர், மனதார வாழ்த்தினோர் என அனைத்து நெஞ்சங்களுக்கும் இவ்வருடமும் இனிய ஆண்டாக அமைய எனது நல்வாழ்த்துக்கள். 




பிற்குறிப்பு: சென்ற நான்கு வருடகாலமாக திட்டமிடப்பட்ட பயணம் இவ்வருடம் கைகூடப்போகிறது. இம்முறை எதிர்த் திசையில்.. அதுபற்றிய மேலதிக விவரங்களை வெகுவிரைவில் அறியத் தருகிறேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)