பிறந்த நாள்


பிறந்தநாள் அதுவுமா விடிய காத்தால எழும்பி குளிச்சு கோவிலுக்கு போய் அவள் பெயரில் அர்ச்சனை பண்ணிட்டு பிரசாதமும் கையுமா வீடு வந்து, ஆறாவது முறையாக மங்களம்/அர்ச்சனை பாடி துயிலெழுப்பும் அம்மாவின் குரல் இப்போது எட்டாவது கட்டையை தொட்டிருக்கும். எழும்ப சற்றும் மனமேயில்லாமல் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து நடுவானில் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கும்போது தோன்றும் ஏண்டா பிறந்தோம் எண்டு.. சூரியனும் அதுபாட்டுக்கு சிரித்துவிட்டு அவள் பல் துலக்கி குளிச்சு ரெடி ஆகுமுன்னமே அந்திவானில் ஓடிப்போய் ஒழித்துவிடும். பிறகென்ன அப்பிடியே போய் திரும்பவும் அவள் பாட்டுக்கு தனது வேலையப் பார்க்கப் போய் மறுபடியும் அடுத்தநாள் காலை/மதியம் மங்களம் பாடி எழுந்திருக்கும் போது சில சமயம் தோன்றும் அட கடவுள் எவ்ளோ பாவம் என்று..

அதாகப் பட்டது என்னவெனில் வாழ்க்கையில் ஒரு லட்ச்சியமும் இல்லாமல் கடனே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் நிலைமையும் இதுதான். என்ன ஒன்று அவர்களுக்கு வேலை.. அவளுக்கு தூக்கம். 

1995 ஏப்ரல் 10. பிறந்தநாளுக்கு ஒருவாரத்துக்கு முன்னமே என்றுமில்லாத ஒன்றாய் அமர்க்களப் படுத்த தொடங்கியிருந்த அவளைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது அம்மாவுக்கு. ரெண்டு நாளைக்கு முன்னமே கேக் ஆர்டர் கொடுத்துவிட்டிருந்தாள். அன்றைய திகதிக்கு கேக் செய்யும் அந்த அக்காவிடம் அவ்வளவு complicated ஆன pattern போடச்சொன்ன முதல் ஆள் அவளாகத்தான் இருக்கும். சட்டை கூட ரத்தக் கலரில்.. அவள் selection தான். அன்று மதியம் "என்ன இந்தமுறை சொல்லிச் செய்யிரமா?" என்று தயங்கித் தயங்கி கேட்ட அம்மாவை வினோதமாய்ப் பார்த்து இல்லையென்று தலையாட்டி விட்டு ஓடிவிட்டாள். அன்றும் வழமைபோல் அப்பா ஹாப்பி பர்த்டே பாட, அம்மா நெருப்பெட்டி எடுத்துத் தர, போடோக்ராபர் படமெடுக்க, கத்தியை எடுத்து வெட்டும் போது நினைத்துக் கொண்டாள் 'இனி வயலினை வாழ்நாளில் தொடுவதில்லை' என்று. 

2001 ஏப்ரல் 10. அவர்களே நினைத்திருக்கவில்லை, சில தினங்களுக்கு முன்னர் தொலைந்துபோன ஒரே பிள்ளை இவ்வளவு சீக்கிரத்தில் மீளக் கிடைக்குமென்று. புறப்படும் அவசரத்திலும் அவளின் பிறந்தநாளுக்காக வாங்கி வைத்திருந்த உடையை மறக்காமல் எடுத்து வந்திருந்தார் அவளது அம்மா. கன்னங் கரேல் என்று.. அவள் selection தான்.  உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த அவர்களால் பேசவே முடியவில்லை. சுற்றி நின்றவர்கள் / நேற்றுவரை யாரென்றே அறிந்திராதவர்கள் ஹாப்பி பர்த்டே பாடபோடோக்ராபர் படம் எடுக்க, lighter ஆல் மெழுகுதிரியைக் கொளுத்தியபோது நினைத்துக்கொண்டாள் 'எல்லாவற்ரையுமே எரித்து விட வேண்டும்' என்று.

கடந்த முப்பத்துரெண்டு வருடங்களில் எத்தனை சபதங்கள்.. எத்தனை எரிப்புகள்.. மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து, வளர்ந்து வளர்ந்து, சாகும் ஆசைகளை அடைந்து துறந்து, வாழ்ந்து எரித்து.. கேசரியோ கேக்கோ ஒன்றை வெட்டி, படத்திர்க்காய் புன்னகைக்கும் அந்தநாட்களில் இன்றைக்கும் அவளுக்கு தோன்றாமலில்லை 'ஏன் பிறந்தோம்' என்று.

அவள் ஒரு தொடர்கதை நாட் குறிப்பேட்டிலிருந்து, சில பக்கங்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)