ஒளிச் சுவடுகள்


நேரம் அதிகாலை ஏழு மணியிருக்கும். முந்தைய இரவின் அசதி இன்னும் தீரவில்லை. வெறுப்புடன் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தால் முன்னால் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் கறுப்பு வெள்ளை நிறத்தில் தெரிந்தது. பத்தாதற்கு படங்களின் மேல் கோடு கோடாய் என்னமோ கிறுக்கினாப் போலிருந்தது. கண்களை நன்றாகக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தால் தற்போது படத்தின் கீழே சிறிதாய் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. ஆனால் படத்தில் மட்டும் எந்த மாற்றமுமில்லை. குழப்பத்துடன் எழுந்து அடுத்த பக்கத்தை திருப்பினால் வெள்ளை நிறத்தில் சுற்றி சுற்றி கைவிரல் ரேகை போல பல கோடுகள். அருகே பாலைவனத்தின் நடுவில் பாழடைந்த கட்டடமொன்றின் மேல் எரிகற்கள் வந்து விழுவது போல்.. அழகாகவும் அதேசமயம் பயங்கரமாகவும் இருந்தது.

"Are you interested in photography?" திடுக்கிட்டு நிமிர்ந்தவளை கைகளில் சுடச்சுட கோப்பியுடன் எதிர்கொண்டவனை ஒருகணம் தயக்கத்துடன் நோக்கிவிட்டு சிறிதாய் முறுவலித்தாள். 

படமெடுப்பதேன்றால் காமேராவிலுள்ள பட்டனை பிரஸ் பண்ணுவதுவரை தான் அவளது Photography அறிவு. அதை அவனிடம் சொல்லி முதல் நாளே மொக்கை வாங்க விரும்பவில்லை. அதனால் பேசாமல் தலையை ஆட்டிவிட்டு பாத்ரூம் பக்கம் போனவளின் கண்களுக்குள் இன்னும் அந்தப் படங்கள் நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. இளம்சூட்டில் ஷவரிலிருந்து கோடுகோடாய்  விழுந்த நீர்த்துளிகள் அவள் மேல் எரிகற்களாய் விழுந்தன. 

ஒருவழியாய் குளித்து முடித்து அருகே தயாராக மடித்து வைக்கப்பட்டிருந்த துவாயை எடுத்து தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்து பார்த்தால் அவன் தன் பாட்டுக்கு அன்று போடவேண்டிய ஷர்ட்டை அயன் பண்ணிக்கொண்டிருந்தான். 

"Do you want me to help ironing your cloths?" கேட்டவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அயனின் அடிப்பக்கத்தில் தெரிந்த கீறல்கள் மீண்டும் பயமுறுத்த,
"No thanks." விரைந்து உடைமாற்றி அறையை விட்டு வெளியே வந்தாள்.

இப்போ என்ன செய்வது? பேசாமல் மேசைமேல் ஆறிப்போயிருந்த காப்பியை எடுத்து ஒருவாய் குடித்தவளின் கண்கள் மீண்டும் தவிர்க்க முடியாமல் அந்தப் புத்தகத்தின் மேல் விழுந்தது. தயக்கத்துடன் எடுத்து மேலே இரண்டு பக்கம் புரட்டவில்லை.. வறண்டு வெடித்த நிலத்தின் மேல் கள்ளிச் செடிகள் பூதாகரமாய்த் தெரிய அதன் நிழல் விழும் தூரத்தில் இருட்டும் ஒளியும் சேர்ந்து.. வைற்றுக்குள் எதுவோ பிசைவதுபோலிருன்தது.. நேரடியாய் கடைசிப் பக்கத்துக்குப் போனாள். வழக்கத்துக்கு மாறாக அதன் கடைசிப் பக்கங்கள் ஒளிப்பதிவாளரின் நாட்குறிப்பேட்டுப் பக்கங்களால் நிரம்பியிருந்தது. ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கியபோது,

"Shall we go now..? you can read it anytime.." கைகளிலிருந்த புத்தகத்தை வாங்கி கீழே வைத்துவிட்டு குனிந்து முத்தமிட்டான். இம்முறை ரசிக்க முடியவில்லை. இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வெளியே வந்து பாதணிகளை அணிந்து லிப்ட் எடுத்து கீழே வந்து கதவைத் திறந்துவிட்டு வண்டியில் ஏற்றி கைகாட்டியவன் தூரத்தில் ஒளிக்கீற்றாய் மறைகையில் தோன்றியது 'அது ஓட்டோ மோட்டா மனுவல் மோட்டா?'






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)