கரிகணன் ஒளிவீச்சு


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரில் வருடாவருடம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நிகழ்வு மேதின ஊர்வலம். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாய் புதுசாய் பிரமாண்டமாய் பார்க்க பிரமிப்பாய் இருக்கும். ஒளிவீச்சுக்கள் பார்க்கையில் மெய்சிலிர்க்க வைக்கும். நம்மவர்க்குள் இத்தனை திறமைகளா என்று பலதடவை வியந்திருக்கிறேன். வண்ணங்கள், அமைப்புகள், அலங்காரங்கள், இசை என்று ஒவ்வொன்றிலுமே தனி அக்கறை காட்டியிருப்பார்கள். அனைத்திலும் ஒருவித ஒழுங்கு, நேர்த்தி இருக்கும். 
எத்தனை சவால்கள்
பலரின் நிகரற்ற உழைப்பு
தசாப்தகால உழைப்பின் சாதனை
பிரமிக்கவைக்கும் படைப்புகள்
ஓர் சாதனைப் பயணம் 
போராட்டத்தில் நாம் இழந்தது எத்தனையோ. அவை என்றுமே ஆறாத வடுக்களாய் பதிந்திருக்கும். ஆனால் அவை எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் வேறெந்த கல்விக்கூடங்களாலும் கற்றுத் தரமுடியாதவை. மண்ணெண்ணெய்யில் ஓடும் வண்டிகள், சிக்கன அடுப்பு, குப்பி விளக்கு என்பன தொடங்கி நீர்மூழ்கிக் கப்பல், அதிவேக படகுகள், ஆகாய விமானங்கள் வரை பொருளாதாரத் தடை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டிருந்த போராட்ட காலத்தில் கூட நாம் சொந்தமாக உருவாக்காதது என்று என்ன இருக்கிறது? 

இவையனைத்துக்கும் முக்கிய காரணம் என்ன? தேவைகள். அவை தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குகிறது. அவற்றை சரியான சந்தர்ப்பத்தில் இனம்கண்டு தீர்வுகளை உருவாக்கும் / பெறும் போது வெற்றிக்கான பாதை திறக்கப்படுகிறது.

அடுத்து கடின உழைப்பு. வெற்றிக்கான பாதையில் அயராது உழைப்பது. தனியொருவராய் நின்று இன்றைய உலகில் எதனையும் சாதித்துவிட முடியாது. சரியான கூட்டணி தேவை. ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறையில் நிகரற்றவராய் இருக்க வேண்டும். அவற்றை சரியான விகிதத்தில் கலக்கத் தெரிந்த ஒரு இயக்குனர் இருக்க வேண்டும்.  எல்லாவற்றிற்கும் மேலாக தூரநோக்குள்ள, எல்லாவற்றையுமே  / எல்லோரையும் ஒருங்கிணைக்க கூடிய ஒரு திறமையான நிர்வாகி தேவை. 

இன்று ஒரு எழுத்தாளனுக்குக் கூட தனது எழுத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு / அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கு பலரின் உதவி தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் இன்னொருவரில் நிச்சயமாக தங்கியே இருக்கிறார்கள். அதை உணர்ந்து கொண்டு சரியான முறையில் கூட்டணி சேரும் வியாபாரம் / படைப்பு நிச்சயமாக வெற்றி பெறும்.

போர் முடிவுற்று இத்தனை வருடங்களின் பின்னர் கூட வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் நம்மவர் யாருக்குமே திரும்பிவரும் எண்ணம் இன்றுவரை இல்லை. இத்தகைய நிலையில் 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கரிகணன் அச்சகம் கடந்த பத்துவருடகால கடின உழைப்பு மட்டுமல்லாது போராட்ட காலங்களிலும் கூட சவால்களை சந்தர்ப்பங்களாக்கி வடக்கில் அச்சுத்துறையில் இன்று பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராயிருப்பது நிச்சயமாய் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  

இன்று தென்னிந்திய அச்சு/கலைத்துறையின் வசீகரத்திலும் பிரமாண்டத்திலும் ஈர்க்கப்படிருப்பவர்களை  திரும்பிப் பார்க்க வைப்பது அவ்வளவு சுலபமல்ல. அதற்க்கு நிகராய் அதையும் தாண்டி நம்மால் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தருணங்கள் இவை.

முப்பத்தாறு கிழமை முடிஞ்சுது. எல்லாம் சரியா இருக்கு. இன்னும் ஒன்றிரண்டு கிழமையில டெலிவரி.

"நாள் நேரம் எல்லாம் குறிச்சாச்சு. இன்னும் மூண்டு நாளில முடிக்க முடியுமா?"

"அப்பிடின்னா சிசேரியன் தான் பண்ண வேண்டியிருக்கும். கவலைப்படாதீங்க முடிச்சிடலாம்." 

இப்படியாக கரு உருவானதிலிருந்து கடந்த எட்டு மாசங்களாக பிற பல வேலைகளின் நெருக்குதல்களின் மத்தியிலும் இதனை ஒரு பூரணமான படைப்பாக கொண்டு சேர்க்கவேண்டும் என்பதில் நாம் அனைவருமே உறுதியாகவிருந்தோம்.

ஒருவழியாக குறித்த நாளில் குறித்த நேரத்தில் பல சிரமங்களின் மத்தியிலும்  கடைசியாய் எந்த  வெட்டுக் கொத்தல்களுமில்லாமல் ஒரு சுகப் பிரசவம்.

மேதினத்தன்று (பிள்ளைய) தொலைக்காட்ச்சியில் பார்த்த அனைவரும் கன்னாபின்ன என்று புகழ சந்தோசத்தில் ராஜ் அண்ணா நம்ம (டெலிவரி) டீமை கூப்பிட்டு தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.



நிற்க, இது ஒரு சாதாரண டாக்குமெண்டரியாக இல்லாமல் ஒவ்வொரு frameஇலும் புதுமை, பிரமாண்டம் தெரிய வேண்டும் என நினைத்தோம். முதல் கட்டமாக சிவநேசனின் கடின உழைப்பில் உருவான கரிகணன் புதிய கட்டடத்தின் 3D மாடல் சற்று நம்பிக்கையைத் தந்தது. தோளில் காமெரா பாக்கையும் ஒரு கையில் tripodஐயும் பிடித்தபடி தனியாளாக மோட்டார் வண்டியில் சென்றே பெரும்பாலான காட்சிகளை ஒளிப்பதிவு செய்த நிசாகரநின் கடினஉழைப்பு ஒவ்வொரு shotலும் தெரிந்தது. ஹோர்டிங் ஷூட்டிங்கில் crane தூக்கி ரெண்டு நாளா முதுகுவலி வேறு.

அடுத்து, படத்தொகுப்பில் மட்டுமல்லாது ஆரம்பத்தில் வரும் காந்தி தாத்தா வரைவிலிருந்து யாழ் ஏரியல் வியு, யாழிலிருந்து கொழும்பு செல்லும் படகு, வரைபடங்கள் என்று துசிகரன் தன் பங்குக்கு கிராபிக்ஸ்ல்  கலக்கியது. ஸ்கிரிப்ட் தான் கடைசிவரை இழுத்திண்டே இருந்தது. சாம் அண்ணாவின் மொழிபெயர்ப்பு அபாரம். வீரா ஐயாவின் கம்பீரமான குரல் மேலும் மெருகூட்டியது.

இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் சுகன்யனின் இசையமைப்பு, சிறப்பு சப்தங்கள்  ஒளிவீச்சின் பிரமாண்டத்தை அதிகரிகிறது.  அச்சுக்கூட ஒலியமைப்புடன் மட்டும் நின்றுவிடாது பென்சிலால் கிறுக்குவது, தண்ணீர் சத்தம், செருப்பு சத்தம் என்று பல இடங்களில் அதீத கவனமெடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு காந்தி தாத்தாவை பென்சிலால் வரையும் ஒலியமைப்பை துல்லியமாக எடுப்பதற்காக கிட்டத்தட்ட ஏழெட்டு வகையான தாள்களில் பென்சிலால் கிறுக்கிப்பார்த்து   ரெகார்ட் பண்ணி பின் பொருத்தமானதை தேர்ந்தெடுத்திருக்கிறார். 

இந்த சாதனைப் பயணம் கரிகணனுக்கு மட்டுமல்ல, தான் செய்யும் வேலையில் இத்தகைய அர்ப்பணிப்புள்ள எவனொருவனுக்கும் அவனது  ஒவ்வொரு படைப்புமே சாதனைப் பயணம் தான்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)