கணக்கு வாத்தியார்
"இப்ப எதுக்கு சிரிச்சனீர்?"
"ஒன்றுமில்லை சார்"
"காரணமில்லாமல் சிரிக்க உமக்கு என்ன விசரே?"
"ஒன்றுமில்லை சார்"
"காரணமில்லாமல் சிரிக்க உமக்கு என்ன விசரே?"
...........
"எனக்கிப்ப காரணம் தெரியோணும். அதுவரைக்கும் கிளாஸ் நடக்காது."
...........
"நான் இத்தினை தரம் கேக்கிறன். ஒரு மாஸ்டர் எண்டு மரியாதையில்லாமல்.. எழும்பும் எழும்பும்.. எழும்பி வெளிய போய் நில்லும்." அவர் இப்போது கோபத்தின் உச்சியிலிருந்தார்.
...........
"இந்தப் பிள்ளை வெளிய போகாமல் நான் கிளாஸ் எடுக்க மாட்டன்."
அதுவரை பேசாதிருந்தவள், கொப்பியை அடித்து மூடிவிட்டு எழுந்தாள். முன்னிருந்த நண்பியை மீண்டுமொருமுறை பார்த்தாள். அவள் உட்பட அனைவருமே தலையைக் குனிந்தபடி கொப்பியில் இல்லாத ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்தனர்.
கோபத்தில் இரத்தம் கொதித்தது. கொப்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், நிற்காமல் வேகமாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
வகுப்பின் முதல் நாள் ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவுக்கு வந்தன.
உயர் தரத்தில் என்ன படிப்பது என்று வீட்டில் அம்மாவும் அப்பாவும் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க அவள் மட்டும் கணிதம் தான் படிப்பது என்று எப்பவோ முடிவெடுத்திருந்தாள். இரத்தம் என்றாலே மயக்கம் போட்டு விழும் அவளுக்கும் விஞ்ஞானத்துக்கும் வெகு தூரம். தவிர, புரியாத பெயர்களை வெறுமனே சப்பித் துப்ப முடியாது, அது மட்டுமன்றி விஞ்ஞானம் என்று சொன்னாலே ஹோச்பிடல் மணம் வந்து மனதுக்குள் என்னமோ செய்வதை தடுக்க முடிவதில்லை.
ஒருவாறாக அவர்களின் மருத்துவக் கனவுகளை சிரமப்பட்டுக் கலைத்துவிட்டு கணிதம் படிப்பதற்கென்று சென்ற முதலாவது நாளே நண்பியின் கொப்பியில் வண்ண வண்ண எழுத்துக்களால் நிரம்பியிருந்த முதல் நாளைய திரிகோண கணித பாடம் பிடித்துப் போய்விட்டிருந்தது. சமன்பாடுகளுடன் அவள் வெகு லாவகமாய் விளையாடும் வேகத்தை பலமுறை பாராட்டியவர் தான் இன்று 'எழுந்து வெளியே போ' என்று கர்ச்சித்திருந்தார். நினைக்கையில் அழுகையாய் வந்தது.
வாகனச் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் வீட்டை அண்மித்துவிட்டது தெரிந்தது. ஒருகணம் தயங்கினாள். ஏன் இண்டைக்கு கெதியா வந்திட்டாய் என்று அம்மா கேட்டால் என்ன சொல்வது? இனி கிளாஸ் போகவே போவதில்லை என்று சொன்னால் என்ன செய்வார்? எதற்காய் இந்தப் படிப்பு மண்ணாங்கட்டி எல்லாம்? வெறுப்பாய் வந்தது.
சில மாதங்களின் பின் ஒருநாள்.
"வடிவாப் பாத்திட்டனப்பா.. டூ பி சி தான். வேணுமெண்டால் நீங்களே போய்ப் பாருங்க." நம்ப முடியாமல் மூன்றாவது தரமும் கேட்டவர் மேல் கோபம் கோபமாய் வந்தது. தயக்கத்துடன் சென்று பார்த்துவிட்டு திரும்பிய அவரின் கண்கள் கலங்கியிருந்தனவா என்ன? அவள் கவனியாததுபோல் இறங்கி தெருவில் நடந்தாள்.
'3A எடுக்கக் கூடிய பிள்ளை என்று சொன்னாராமே.. இந்த ரிசல்ட்ஐ கேள்விப்பட்டால் எங்க கொண்டுபோய் மூஞ்சிய வைப்பார்?' மனதுக்குள் கறுவிக் கொண்டாள். 'அவருக்கென்ன கஜன், அபிராமி எண்டு எத்தினை கெட்டிக்காரர் இருக்கினம். தோல்வியின் அடையாளமாய் எதுக்கு என்னைப் பற்றியெல்லாம் கணக்கில் வைத்திருக்கப் போகிறார்?' தேவையில்லாமல் கோபம் யார் யார்மீதோ வந்தது.
'3A எடுக்கக் கூடிய பிள்ளை என்று சொன்னாராமே.. இந்த ரிசல்ட்ஐ கேள்விப்பட்டால் எங்க கொண்டுபோய் மூஞ்சிய வைப்பார்?' மனதுக்குள் கறுவிக் கொண்டாள். 'அவருக்கென்ன கஜன், அபிராமி எண்டு எத்தினை கெட்டிக்காரர் இருக்கினம். தோல்வியின் அடையாளமாய் எதுக்கு என்னைப் பற்றியெல்லாம் கணக்கில் வைத்திருக்கப் போகிறார்?' தேவையில்லாமல் கோபம் யார் யார்மீதோ வந்தது.
"இந்த resultsக்கு இன்ஜினியரிங் கிடைக்குமா?" அந்த இறுக்கமான சூழலைக் கலைத்துக்கொண்டு தந்தை அப்பாவித்தனமாய் கேட்டது அவளின் கோபத்தை இன்னும் அதிகப் படுத்தியது. முறைத்தாள்.
"சரி பிள்ளை. நீ எதுக்கும் கவலைப் படாதை என்ன? இது முதல் தரம் தானே? இடையிலை வேறை படிப்பை குழப்பிட்டாய். அடுத்த முறை வடிவாப் படிச்சு பாஸ் பண்ணிடலாம்." வலுக்கட்டாயமாய் வரவழைத்த புன்னகையுடன் அவர் கேட்டபோது கோபத்தின் உச்சிகே போய்விட்டாள்.
"எதுக்கு? இதுவே எடுக்க மாட்டன் எண்டு தானே சொன்னனான். நீங்க இவ்வளவு கஷ்டப்படுத்தினதால தான் எடுத்தது. இது தான் முதலும் கடைசியும். இனிமே நீங்க என்னதான் தலை கீழா நிண்டாலும் படிக்கவும் மாட்டன். எக்ஸாம் எடுக்கவும் மாட்டன். சரியே?" பொரிந்து தள்ளிவிட்டு அவரின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் முன்னால் வந்து நின்ற பஸ்சில் நம்பர் பார்க்காமலேயே ஏறிவிட்டாள்.
பன்னிரு வருடங்களின் பின்னர் ஒரு நாள்.
"அப்பா.. அப்பா ஒருக்கா நில்லுங்கோ.. இதிலை போறது எங்கடை சார் மாதிரியே இருக்கு." அந்த எழுபது வயதிலும் சற்றும் தளராது மோட்டார் வண்டியை அனாயசியமாய் திருப்பி "எந்த சார்? எங்கை?" என்றார்.
"எனக்கு சரியாத் தெரியேல்லை. ஆனா அவராத்தான் இருக்கோணும்." என்றபடி முன்னே உடைந்துபோன ஓர் சைக்கிளில் ஒருகையில் கொப்பியுடனும் மறு கையால் காற்றில் குறுக்கும் நெடுக்குமாக எதுவோ கோடு கீறியபடியும் சென்று கொண்டிருந்தவரைக் காட்டினாள்.
அரை மனதுடன் மெதுவாய் வண்டியை ஓட்டியபடி, "இப்ப கட்டாயம் கதைக்க வேணுமே?"
"ம்ம்.."
"சார் என்னைத் தெரியுதா?"
"இல்லை. சரியா தெரியேல்லை." என்றபடி சைக்கிளை சிரமப்பட்டு நிறுத்தினார்.
"நித்தியா சார். 2000 பட்ச்.. எப்ப Jaffna வந்தனீங்க? இப்ப இங்கயே படிப்பிக்கிறீங்க?"
"இல்லை. மூண்டு மாதம் இங்கை சென் ஜோன்ஸ்ல படிப்பிக்க வந்தனான். நீர் என்ன செய்ரீர்? "
"இங்கை ஒரு கம்பெனி தொடங்கியிருக்கிறன் சார். உங்கடை ஸ்கூல்க்கு கூட ஒரு ப்ராஜெக்ட் செய்ராதா..." மேலே தொடர முடியவில்லை. மனது கனத்தது.
சிறிது நேரத்தின் பின்..
"சரி நான் வாறன்." அவர் சிரித்தவாறே கிளம்பினார்..
அவள் வெறுமனே தலையாட்டிவிட்டு வண்டியில் ஏறியவள், எதேற்ச்சையாய் திரும்பிப் பார்த்த போது அவர் வெகுதூரத்தில் தன்பாட்டிற்கு கைகளால் மறுபடியும் கோடுகள் வரைந்த வண்ணம் போய்க்கொண்டிருந்தார். சிரித்துக்கொண்டே..
கருத்துகள்