வில்லாடிய களமெங்கே?


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒருநாள்.

St. Johns' கல்லூரி மைதானத்தின் நடுவே உச்சி வெயில் மண்டையப் பிளக்க ஆண்கள், பெண்கள் என்று பல நூற்றுக்கணக்கான இளையோர் வேர்க்க விறுவிறுக்க ஆள் மாறி ஆள் அணி மாறி அணிகள் என்று பல்வேறு வீர சகாசச் செயல்களை அரங்கில் நடாத்திக் காட்டிக் கொண்டிருந்தனர். தீமூட்டிய வளையங்களுக்குகூடாகப் பாய்தல், ஹிட்லர் மார்ச்சிங் (நாம் வைத்த பெயர்) என்று ஆண்கள் ஒருபக்கத்தில் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பெண்கள் அணிகளும் (தீமூட்டாத) வளையங்களுக்கூடாகப் பாய்தல், tiger மார்ச்சிங் என்று தாமும் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருந்தனர். ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட ஆறு ஏழு அணிகளின் சாகாச நிகழ்வுகளை நடத்தக் கூடியளவுக்கு அந்த மைதானம் சற்று விஸ்தீரணமாகவே இருந்தது.  

நம்மளை கண்டுபிடியுங்க பாக்கலாம்?
அங்கு தான் அனன்சியா அக்காவின் தலைமையில் களமிறங்கிய எமது அணி மிகச்சிறப்பாகவே களமாடி மாவட்ட அளவில் இரண்டாமிடத்தை தட்டிச் சென்றது. முதலாமிடத்தை வழமை போலவே வேம்படி மகளிர் கல்லூரி பெற்றுக்கொண்டது. அதற்க்கு அடுத்த வருடம் எமது கல்லூரி முதலாமிடத்தைப் பெற்றது வேறு விடயம். அவற்றையெல்லாம் பிறகு ஒருநாள் சாவகாசமாக விபரமாக சொல்கிறேன். இங்கே நான் சொல்ல வந்தது என்னவென்றால் கல்லூரி என்பது அங்கு பயின்ற ஒவ்வொருவரின் மனதிலும் எந்த விதமான விம்பத்தை / தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது / அவர்களின் வளர்ச்சியில் ஆளுமை விருத்தியில் எத்தகைய பங்கினை ஆற்றியிருக்கிறது என்பதைத் தான்.

என்னைப் பொறுத்தவரை ஆண்டு ஒன்று முதல் ஆண்டு பதின்மூன்று வரையிலுமே மொத்தமாக ஐந்து பாடசாலைகளில் கல்வி பயின்றிருக்கிறேன். அவை ஒவ்வொன்றுமே என்னுள் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. அவற்றுள் முக்கியமானது தான் நான் உடுவில் மகளிர் கல்லூரியில் படிக்கும் போது நடந்த மேலே சொல்லப்பட்ட ஓர் *அழகான ஓவியம் போன்றதொரு நிகழ்வு.

ஒவ்வோர் முறையும் வெற்றி பெற்று கோப்பையுடன் வானில் வரும்போது வழியெல்லாம் கல்லூரியின் பெயரை கத்தி கூச்சல் போட்டுக்கொண்டு வருவது வழக்கம். கூட வரும் டீசெர்ஸ் முதலில் கண்டிப்பினம். பிறகு ஒருநாள் தானே கொண்டாடிட்டு போகட்டும் என்றோ என்னமோ பேசாமல் விட்டு விடுவினம். 

"இதுகள் பொண்ணுங்களா இல்லாட்டி பேய்ங்களா" என்று பையன்கள் கமெண்ட் அடிப்பார்கள். "தோத்தவங்க கண்ணுக்கு பாக்கிறதெல்லாம் பேய்" என்று திரும்ப ராகத்தோடு கமெண்ட் அடித்துவிட்டு எல்லோரும் சேர்ந்து பெரிதாய் சத்தம்போட்டு சிரிப்போம். அதுவரைக்கும் கல்லூரி போய் வரும்போதெல்லாம் ரொம்பவே சாதுவா அப்பிராணியா போய் வரும் பொண்ணுங்களா இதுகள் என்று எல்லோரும் ஆச்சரியப் பட்டுப்போகும் அளவுக்கு திரும்பி சைக்கிளில் வீடு வரும் வழியிலும் கலாட்டா பண்ணுவோம். எல்லாம் அந்த ஒரு நாள் தான். மறுபடியும் அடுத்தநாள் மீண்டும் நாம அக்கிரகாரத்துப் பெண்ணுங்க தான்.

நிற்க, சிலருக்கு கல்லூரி என்றாலே கற்ற கல்வி, வாங்கிய பரிசுகள் தான் ஞாபகத்துக்கு வரும்; வெகு சிலருக்கு பங்குபற்றிய நிகழ்வுகள். இன்னும் சிலருக்கு கூடப் படித்தவர்கள் / படிப்பித்தவர்கள் ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால் பலருக்கோ கல்லூரியை விட்டு வெளியேறியதுமே எதோ அம்னீசியா வந்ததுபோல் (என்னையும் சேர்த்துத் தான்) அனைவரது முகங்களுமே மறைந்துவிடும். அப்படிப்பட்டவர்களுக்கு, கூடப் படித்தவர்களையும் கல்லூரி நாட்களையும் நினைவுபடுத்துவது மட்டுமல்லாது தாம் கற்ற / தம்மை உருவாக்கிய பாடசாலைக்கு தம்மாலியன்றதை திருப்பிச் செய்யவேண்டிய கடமையை உணர்த்துவதிலும் பாடசாலையின் "பழைய மாணவர் சங்கங்கள்" முதன்நிலை வகிக்கின்றன. ஒரு கல்லூரியின் வளர்ச்சியில் இத்தகைய சங்கங்களின் பணி அளப்பரியது. 

இந்த வரிசையில் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் "பழைய மாணவர் சங்கத்தினால்" வரும் ஜூலை பதின்னான்காம் திகதி சங்கத்தின் நூறாவது அகவைபூர்த்தியை முன்னிட்டு  தமது கல்லூரியின் வரலாற்றை அழகிய காணொளி வடிவில் செய்து வெளியிட இருக்கிறார்கள். பதின்மூன்றாம் திகதி பரிசளிப்பு விழாவுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வு இரவுவிருந்து, நடைபயணம் என்று பதினைந்தாம் திகதிவரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்தும் பல பழைய மாணவிகள் வருகை தர இருப்பதால் அவர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் வான்வழிப் போக்குவரத்து என்பவற்றில் மிகவும் சிரத்தையெடுத்து ஒழுங்கு செய்திருக்கிறார்கள். மேலதிக விபரங்களை இங்கே காணலாம்.

இவர்களின் இந்த அளப்பரிய முயற்சியில் / நிகழ்ச்சியில் எம்மாலியன்ற சிறிய பங்களிப்பை செய்ய முடிந்ததையிட்டு ஹிமலாயா கிரியேசன்ஸ் நிறுவனமும் பெருமை கொள்கிறது. கல்லூரி மேம்பாட்டிற்கான இவர்களது பணி மென்மேலும் தொடர / வளர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*பிற்குறிப்பு: அது ஏன் ஓர் அழகான ஓவியம் போன்றதொரு நிகழ்வு என்று முன்னம் சொன்னெனெற்றால் அப்போது அங்கே ஸ்கூல் யூனிபோர்ம்ல் நின்றிருந்த அழகான ஒரு சின்னப்பையன்.. (யாருக்காச்சும் ஞாபகம் வந்தா சொல்லிடுங்க..) ஆண்டு இரண்டு அல்லது மூன்று தான் இருக்கும், என்கிட்ட வந்து "அக்கா, இந்த டிரஸ்ல நீங்க ரொம்ப அழகாயிருக்கிறீங்க" / எங்க தமிழ்ல சொன்னால் "அக்கா, இந்த உடுப்பிலை நீங்க நல்ல வடிவா இருக்கிறியள்." என்றான்.

சரி நம்பாட்டி விடுங்க. அது சரி.. இப்பதான் கவனிச்சன்.. சொல்லாமல் கொள்ளாமல் நாமளும் நூறாவது பதிவு தாண்டிட்டோம். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)