மரக் கொட்டகை

பச்சைப் பசேலென்ற நீர்வெளி. அதன் நடுவே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய கொட்டகை. அதனை கரையுடன் இணைக்கும் பாலத்தின் முடிவில் தேவநம்பியதீசன் காலத்து புத்தர்கள் அல்லது அவர்கள் உருவை ஒத்தவர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர்.

இப்போதெல்லாம் புத்தரை எங்கே வைப்பது என்றொரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அதனால் விகாரைகளை விட அநேக பார்களில் தான் காணக்கிடைக்கிறார். அங்கெல்லாம் முன்பு பெரிய தொப்பையுடனும் மொட்டந் தலையுடனும் குலுங்கி குலுங்கிச் சிரித்தபடி ஓர் உருவம் இருக்கும். சுற்றிவர நிறைய தங்க நாணயங்கள் இறைந்து கிடக்கும். சிலர் குபேரன் என்பர்.  ஆனால் பொதுவாக அழைக்கப்படுவது 'சிரிக்கும் புத்தர்'  என்று தான். அப்படி அழைக்கும்போதெல்லாம் புத்தரே நேரில் வந்து 'என்னை வைச்சு ஒன்னும் காமடி கீமடி பண்ணலியே' என்று வடிவேலு பாணியில் கேட்ப்பதுபோலிருக்கும். அதனால் தானோ என்னமோ இப்ப சாந்தமான முகத்துடன் கண்களை பாதி மூடியபடி புன்முறுவலுடன் அமர்ந்திருக்கும் புத்தரையே வைத்துவிட்டார்கள். இல்லாவிட்டால் ஒருவேளை வருபவர்கள் எல்லோருமே குபேரனைப் போலிருப்பதால் ஒரு மாறுதலுக்கு கம்பீரமாக கட்டுமஸ்தான உடலோடும் தலையில் சற்றே முடியோடும் இவராவது இருக்கட்டுமே என்று நினைத்தார்களோ தெரியாது.

அந்தப் படத்தை மீண்டுமொருமுறை பார்த்தாள். பசேலென்ற நீர்வெளியின் முன்பு வெளிர்நீல உடையில் தலையை விரித்துப் போட்டபடி ஓர் அழகிய பெண். அழகி என்று சொல்லமுடியாது; ஆனாலும் கறுப்புக் கண்ணாடி அணிந்து, கைகளில் போடவேண்டிய சில்வர் வளையல்களை காதில் மாட்டியபடி வலதுபக்க தெத்திப்பல் தெரிய சிரிக்கையில் சற்றக்குறைய அழகாயிருப்பது போலதான் தெரிந்தது. தவிர உதட்டின் நிறத்திலேயே பூசப்பட்ட உதட்டுச் சாயமும், முகத்தில் போடப்பட்டதே தெரியாதபடி பரவியிருந்த முகப்பூச்சும் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தன. எல்லாவற்றையும் விட மலர்ந்த முகம் பெண்களுக்கு அழகு என்று சொல்லுவார்கள். அது தீபாவுக்கு இருந்தது. அதுதான் அந்த வெளிர்நீல அழகியின் பெயர்.

படத்தை சற்றே zoomout செய்து பார்த்தால் அவள் யார்மீதோ சாய்ந்து நிற்பது தெரியும். பின்னால் சில அழகிய புத்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னால் அவளுக்கு மிக அருகில் முட்டுக் கொடுத்தவாறு, சிவப்பு நிற ரீ-ஷர்ட்ல் இருந்த இரண்டு பொத்தான்களையுமே கழட்டி விட்டு, கருப்புநிற பிரேம் போட்ட கண்ணாடியில்.. அது அவனே தான்.

கண்ணாடி முழுவதும் பரந்திருந்த அந்தக் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். அவை ஒளியிழந்து களைத்துப் போயிருந்தன. முன்பொருகாலத்தில் பார்த்த கணத்திலேயே இன்னுமோர் சமாந்தர உலகுக்கு பயணிக்க வைத்த கருந்துளைகளல்ல அவை. தேதி குறிக்கப்பட்டபின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளியின் கண்களைப் போல இருந்தது; திருமணத் தேதி குறிக்கப்பட்ட அந்த மணமகனின் கண்கள்.

தலையில் மீதமிருந்த ஓரிரு முடிகளைத்தன்னும் தக்கவைக்க எந்த முயற்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. தலைப்பாகை இருக்கும் தைரியத்தினாலிருக்கலாம். அகல விரிந்த கரிய உதடுகளின் நடுவே தெரிந்த எட்டுப் பல்லுகள் அவன் சிரிக்க முயற்ச்சிக்கிறான் என்பதை உறுதிப்படுத்தின. உதடுகளைச் சுற்றி முளைவிட்டிருந்த சற்றேறக்குறைய அடர்ந்த முடிகள் பிரெஞ்சுத் தாடிக்கான முயற்சியாய் இருக்கலாம். இருவரினதும் நெருக்கம் இருவீட்டாரின் சம்மதமாயிருக்கலாம். ஒருவேளை திருமணம் முடிந்து விட்டதோ என்னமோ. கீழே போடப்பட்ட பின்னூட்டங்களை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. பலர் அவர்களது ஜோடிப்பொருத்தத்தை வியந்தும், பாராட்டியும், வாழ்த்தியும் இருந்தார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டோர் அவளினதும் நண்பிகள் தான். அவளது மிக நெருங்கிய நண்பியும் கூட. முன்பென்றால் அவளால் நம்ப முடியாமலிருந்திருக்கும். ஒரு பாட்டமாவது அழுது தீர்த்திருப்பாள். இப்போது மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

'எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. இப்ப இதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை.' என்றவனின் கழுத்தில் புதிதாய் இரண்டு பவுணில் மின்னிய சங்கிலி முகத்தின் களையை மழுங்கடித்து விட்டிருந்தது. சென்று கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தாள். அன்று அவள் கழுத்தை அலங்கரித்திருந்த முக்கால் பவுன் சங்கிலி இப்போதில்லை. அதுவும் பின்னொருநாள் இரண்டு பவுணில் மின்னிய பின்னரே இன்று இல்லாது போயிருக்கிறது. ஆனால் அது இருக்கும் வரை இருந்த எதையோ பறிகொடுக்கப் போவது போன்ற பதட்டம் இன்றில்லை. எதிலும் பற்றிருக்கும் வரைதான் அது பற்றிய பயமும் கவலையும். அதிலும் பெறுமதி கூடக் கூட இழப்பு பற்றிய பயமும் அதிகரிக்கும். அதனால் ஏற்படும் மன அழுத்தம் மற்றவர் மீது பிரயோகிக்கப்பட இறுதியில் அதீத வெறுப்பையே சம்பாதித்துக் கொடுக்கிறது.

சரியாக வைட் பாலன்ஸ் செய்யப்படாத வானம் சற்றே வெண்ணிறமாக பரவி நிற்க நீர்நிலை மட்டும் பச்சை நிறத்தில் தெரிவது அதிகப்படியான கியூ / சச்சுரேசன் காரணமாக இருக்குமோ என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் அப்படியாயிருக்க முடியாது என்று அவர்கள் முகம் சொல்லியது. 100ல் போகையில் நவலோகா மருத்துவமனைக்கு முன்னிருக்கும் இந்த இடத்தை பலதடவை பார்த்திருக்கிறாள். ஒவ்வோர் முறையும் கடந்து செல்கையில், ஆமர்வீதியில் அரைமணி நேரம் தரித்து நிற்கும் 155 பஸ், இந்தவழியால் வரக்கூடாதா என்று நினைத்திருக்கிறாள். ஆனால் ஒருமுறைதன்னும் இறங்கிச்சென்று பார்க்கவோ படமெடுக்கவோ நினைத்ததில்லை. அப்போதெல்லாம் அதற்க்கு முன்பிருந்த காவலரண் காரணமாயிருக்கலாம்.

அப்படி அவள் என்ன செய்துவிட்டாள். அவனை காதலிப்பதாக சொன்னாள். எதற்க்காக அப்படிச் சொன்னாள் என்று இதுவரையுமே அவளுக்குத் தெரியாது. ஏனெனில் காதல் / திருமணம் என்பவற்றின் மீது நம்பிக்கை அவளுக்கு என்றுமே இருந்ததில்லை.  அது அவள் மனதார வெறுக்கும் ஒரு நிகழ்வு. அப்படியிருக்க எதற்காய் காதலித்தாள்.. அல்லது தானும் காதலிப்பதாய் நம்பினாள்? தனக்காய் யாருமில்லை என்று அவள் நம்பியிருந்த வேளையில் அவளுக்காய் பேசினான், அவளுடன் பேசினான், அவளுடன் மட்டுமே பேசினான். 

அவன் கூறிய காரணங்கள் எதுவுமே ஏற்கும் படியாகவில்லை. அவள் எதையுமே நம்ப மறுத்தாள். அவன் எவ்வளவு தூரம் தன்னை விரும்புகிறான் என்பதை நம்பினாளோ அதையளவு அவன் விரும்பவில்லை என்பதையும் நம்பினாள். இது மனப்பிரழ்ச்சியா அல்லது பலவிதமான தத்துவங்களைப் படித்ததால் வந்த தெளிவான குழப்பங்களா என்று தெரியாது. ஆனால் அவன் இதனைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தான். அதனால் தான் பிறகொருசமயம் சாவகாசமாக உரையாடிய சந்தர்ப்பமொன்றில் 'என் மீதான உனது உணர்வுகள் குழப்பமானவை.' என்று மிகவும் தெளிவாக முகத்திலடித்தற்போல் சொல்லியிருந்தான். அதைக் கேட்டு அவளுக்குக் கோபம் வரவில்லை. இத்தனை தூரம் தன்னைப் புரிந்து வைத்திருக்கிறானே என்று சந்தோசப்பட்டாள்.

அன்று தோன்றியது, பேசாமல் நண்பர்களாகவே இருந்திருக்கலாமோ என்று. ஆனால் அவளைப் பொருத்தவரை நட்பு என்பது உடலைத் தாண்டி இருக்கவேண்டும். எந்த ஒரு ஆண்மகனும் தன்னை ரசிக்கிறான் என்று தெரிந்த பிறகு ஒருபெண்ணால் அவனுடன் மீண்டும் சகஜமாகப் பழக முடியாது. அவளுக்கு பிடித்திருந்தால் வெட்கப்படுவாள் அல்லது அதை மறைக்க ஜோதிகா போல 'ஏன் என்ர இடுப்பைப் பார்த்தாய்?' என்று சண்டைபிடிப்பாள். அதுவே பிடிக்காதவிடத்து அருவருப்பாய் உணர்வாள். இரண்டு சந்தர்ப்பத்திலும் வெறும் நட்பு மட்டும் தான் என்பவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

அவளுக்குப் பிடித்த இடத்தில் அவளுக்குப் பிடித்திருந்த நபர்கள். படம் அழகாக இருந்தது. லைக் போடலாமென்றால் அவன் பிளாக் பண்ணியிருப்பது தெரிந்தது. புத்தர்களை வெளியே காவலிருத்தி அந்த மரக்கொட்டகைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று இன்றுவரை அவளுக்குத் தெரியாது.  தெரிந்துகொள்ளவும் விரும்பியதில்லை. 


கருத்துகள்

மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மரக்கொட்டகை
நட்பின் உன்னதம் பேசுகிறது..
அருமை...
மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
என் தளத்திற்கு வருகை தரும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன்...
http://www.ilavenirkaalam.blogspot.com/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)