தபாலகங்கள்
அன்புள்ள நண்பி நிஷாவுக்கு,
நலம். நலமறிய ஆவல். உனது கடிதம் நேற்றுத்தான் கிடைத்தது. வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி. நீ எமது பாடசாலையில் கேம்ஸ் கேப்டன் ஆக தெரிவாகியிருப்பதாக சொல்லியிருந்தாய். சந்தோசம். எமது பாடசாலை நாட்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக வகுப்பறைக்கு போகாமல் இருப்பதற்காகவே சேர்ந்துகொள்ளும் விளையாட்டுப் பயிற்ச்சிகள்..
ஒருமுறை நீ, நான், தாமரா மூவரும் விளையாட்டுப் பயிற்சி இருக்கெண்டு நினைத்து நிற உடுப்பில் போய், இல்லையென்று அறிந்ததும் களவாக சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடும் சமயம் அதிபரிடம் மாட்டினோம். அவர் தீர விசாரித்த பின்னர் மன்னித்து வகுப்புக்குப் போகச்சொன்னர். ஆனால் அதன் பின்னர் புதிதாய் வந்திருந்த வகுப்பாசிரியை அனைவரின் முன்னாலும் வைத்து திட்டித் தீர்த்தார். தவிர அன்று தான் நாம் அவவின் வகுப்பு என்றே தெரியும் என்று கூறினார். (எமக்கு மட்டும் என்னவாம்?) தாமரா வழமைபோல சிரித்துக்கொண்டிருந்தாள். தொட்டாச்சிணுங்கி நானோ கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டிருக்க, நீ எல்லோருக்குமாய்ச் சேர்த்து அழுது தீர்த்தாய். ஞாபகமிருக்கிறதா?
...............
இவ்வாறாக மலரும் நினைவுகளை மீட்டும், தற்போதைய நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் ஒரு அத்தியாவசிய ஊடகமாக கடிதங்களும் அவற்றைக் கொண்டு சேர்க்கும் தபால்துறையும் அன்று இருந்தது.
பெரும்பாலான தபாலகங்கள் முதலில் தொலைதூர தந்தி சேவையை மையமாக வைத்தே இயங்கின. இத்தகைய தபாலகங்களில் இருக்கும் தபாலதிபர் இருபத்திநாலு மணி நேரமும் கடமையிலிருக்க வேண்டும். கிடைக்கும் தகவலை உடனே உரியவரிடம் சேர்க்கவேண்டும். இவை அனேகமாக மரணச் செய்திகளாகவே இருக்கும். அதனாலேயே பெரும்பாலும் எந்த வீட்டிற்காவது தந்தி வந்திருக்கிறது என்று அறிந்தால் அந்த வீட்டின் முன்பு ஊரே கூடிவிடும், துக்கம் விசாரிப்பதற்கு.
ஈமெயில், இன்டர்நெட் என்று தூரங்கள் குறுகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இத்தகைய தபாலகங்களின் தேவை மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. என்னதான் இவை தம்மை நிலைநிறுத்திக் கொள்ள பல புதிய சேவைகளை இணைத்துக் கொண்டாலுமே நம்மில் எத்தனைபேர் இவற்றைப் பாவிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். சென்ற மாதம் ஒரு பதினைந்து ரூபா முத்திரை வாங்கவேண்டிய தேவை. அந்த அரசாங்க அலுவலகத்தில் இருந்த எவருக்கும் அண்மித்த தபாலகம் இருக்கும் இடம் தெரியவில்லை. சரி வெளியே வந்து ஓட்டோ ஓட்டுனரிடம் கேட்டால் அவருக்கும் கூடத் தெரிந்திருக்கவில்லை. வேறுவழியில்லாமல் பஸ் பிடித்துப் போய் வெள்ளவத்தை தபாலகத்தில் வாங்கிவந்தது.
கருத்துகள்