காதலின் தற்கொலைகள்


"உங்கடை மகள் என்ன.. யாரோ ஒரு ....யப் பெடியனைக் காதலிக்குதாமே?" கேட்டதிலிருந்து அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரின் அக்காவின் மகளின் காதல் (கலப்புத்) திருமணத்துக்குப் போகாதிருந்த காரணம் இன்று கண்முன்பு பூதாகரமாகி நிற்கிறது. இரவு முழுக்கத் தூக்கம் வரவில்லை.

"என்னப்பா இது சரிவருமே? உன்னட்டை ஏதும் இதப் பற்றி சொல்லியிருக்கிறாளே?"
"எனக்கு ஒண்டும் தெரியாது. ஏதோ அவளின்டை பழைய சிநேகிதியிண்டை ஒன்றுவிட்ட அண்ணனோ மச்சான்காரனோ எண்டு சொன்னவள். வேறையொண்டும் சொல்லேலை. நீங்களே அவளோடை கதையுங்கோ.."
இரவிரவா செல்லடிச்சா கூட எழும்பாதவளுக்கு யாரும் ரகசியம் கதைத்தால் மட்டும் தூக்கம் கலைந்துவிடும். அப்படி எழுந்தவள் கதை தன்னைப் பற்றித் தான் என்றுணர்ந்ததும் தீவிரமாக அவதானிக்கத் தொடங்கினாள்.

"யார் அந்த ...... ஊர்ப் பெட்டை தானே? அவை ...யர் எண்டு நீ தானே சொன்னது.."
"எண்டுதான் நினைக்கிறன். நீங்களே அவளோடை கதையுங்கோ.."
அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இத்தனை வருடங்களில் எத்தனை காதல்களை / காதல் என நம்பப் பட்டவைகளை ஓரிரு வார்த்தைகளிலேயே முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் முன்பு இன்று சாதீயம் வகையாய் மாட்டிக்கொண்டுவிட்டது. இனி அவள் என்ன சொன்னாலும் அது வெறும் செவிடன் காதிலூதிய சங்கு தான். நெஞ்சை எதுவோ பலமாகப் பிடித்து அழுத்துவது போலிருந்தது. மூச்சு விடமுடியவில்லை. கண்களை இருட்டிக் கொண்டு வருகையில், அவளின் தோள்கள் பலமாக உலுப்பப் பட்டன.

"உன்னோடை கொஞ்சம் கதைக்க வேணும்.. எழும்பு.." இரவுமுழுக்க தூக்கமில்லாமலோ அல்லது கோபத்தினாலோ சிவந்து போயிருந்த அவரது விழிகள் அவளைப் பயமுறுத்தின. தொண்டைவழி சிரமப்பட்டு விழுங்கிய நீர் கண்களினோரம் கசிய எத்தனிக்கையில் அதனை மறைக்க மறுபக்கம் திரும்பி படுத்தவாறே எவ்வளவு முடியுமோ அவ்வளவு இயல்பான குரலில்.. "ம்ம்.. சொல்லுங்கோ.."

"ஆஸ்திரேலியா பிஎச்டி மாப்பிளை ஒண்டு வரன் கேட்டு வந்திருக்கு. என்ன சொல்ல.." அவளுக்குப் புரிந்து விட்டது. அவர்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டார்கள். கண்ணீர் தலையணையை நனைத்தது.
"உனக்கு சம்மதம் தானே..? இல்லாட்டி யாரையாச்சும் நினைச்சு வச்சிருக்கிறியே?"
அவளிடமிருந்து பதிலேதுமில்லை. அவள் என்ன சொன்னாலுமே இது காதலேயில்லை என்று நிரூபிக்கும் வகையில் அவர் ஒரு பதில் வைத்திருப்பார்.

அதுவும் அவர் சொல்லும் விதம் இருக்கிறதே.. அவளை என்றைக்குமே குற்றம் சொல்ல மாட்டார். அவள் ஒரு தேவதை போலும் அவளை அடைய அவர்களுக்கு எந்த விதத்திலும் தகுதியில்லை என்பது போலும் தான் பேச்சைத் தொடங்குவார். அவளுக்குக் கோபம் கோபமாக வரும். எந்தப் பெண்ணுக்கும் அவள் காதலிப்பவன் தான் உலகமகா நாயகன். அப்படியிருக்க அவரது முதலாவது அம்பே அதனைத் தகப்பதர்க்கான அத்தனை காரணங்களையும் கொண்டிருக்கும்.

அடுத்து திடீரென்று அவர்களை மிகவும் உயர்த்திப் பேசுவார். பின்பு இருவரையும் சமதளத்தில் வைத்து மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்தவர் போல் "அவனுக்கு நீ தேவையே ஒழிய, நீ தான் அவனது உலகமென்றில்லை." என்பார். அவர் சொல்வதும் ஒருவகையில் உண்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களிடம் அவளைக் கவர்ந்ததே அவர்களது ஆளுமைதானே..? அந்த ஆளுமை நிச்சயமாக ஒருநாளும் எதற்காகவும் தன்னை அழித்துக்கொள்ளாது. அது அவளது காதலால் அழியுமென்றால் அவள் காதலித்ததும் அழிகிறதே.. அப்போது அவள் காதலும் அழிந்து விடுமா??

இப்போது அவள் முழுவதுமாய் குழம்பிப் போயிருப்பாள். அவரது குற்றச் சாட்டுகளுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே "நாங்கள் உயிர்வாழ்வதே உனக்காகத்தானே" என்று பெற்றோரின் பாசம் என்ற கடைசி அம்பை எடுத்து விடுவார். அவள் காதலித்த யாரும் அவ்வாறு சொன்னதில்லை. அப்படி சொன்னவர்கள் யாரையும் அவள் காதலித்ததுமில்லை. அத்தகைய காதலில் அவளுக்கு நம்பிக்கையிருந்ததுமில்லை. ஆனால் ஒவ்வோர் காதல் முடிவிலும் தற்கொலை வரை போயிருக்கிறாள். அது அவளின் மன அழுத்தத்தின் உச்சக்கட்டம்.

"விரும்புறது தப்பெண்டு சொல்லேலை. ஆனா எங்களுக்கு சரிப்பட்டு வருமா எண்டும் பாக்கோணும் பிள்ளை.." அவரது அழுத்தமான குரல் அவளை மீண்டும்  இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. அவர் எதிர்பார்க்கும் தகுதி எதுவெண்டு இதுநாள் வரையில் அவளுக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. முன்பு வயதைக் காரணம் காட்டியிருந்தார்.  இப்போது சாதி? 

"சாதியைப் பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் நான் ஏன் சொல்லிறன் எண்டால்.. ஒவ்வொரு சாதிக்கும் எண்டு சிலசில பண்புகள் இருக்கு. அவை மற்ற சாதிகளிண்டை பண்புகள் பழக்க வழக்கங்களோட ஒத்துப் போகாது. அதால கடைசி வரைக்கும் சந்தோசமில்லாமல் தான் இருக்கவேண்டி வரும்." அவளுக்குத் தலை சுற்றியது. ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "நீங்க இப்ப என்ன சொல்ல வாறீங்கள்..?"

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் "நான் வேணுமெண்டால் அவை எப்பிடி எண்டு அவையிண்ட வீட்டை போய் கதைச்சுப் பாக்கிறன்.. " அவரது மாமூலான பதில் தான். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இப்போது அவள் சம்மதித்துவிட்டிருந்தாள். அது அவளின் மன உளைச்சலின் உச்சமா அல்லது அப்பிடி என்னதான் செய்துவிடப் போகிறார் என்ற ஒரு அசட்டுத் தைரியமா என்று தெரியாது... ஆனால் அதிசயமாக அந்த சம்பந்தம் கூடி வந்தது. 

கல்யாணமாகி சிறிது காலத்திலேயே அந்தக் காதலும் முடிவுக்கு வந்தது.. ஒவ்வொரு காதலின் முடிவிலும் அவள் தற்கொலை வரை போயிருக்கிறாள். அது அவளது மன அழுத்தத்தின் உச்சக்கட்டம். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)