யோ. அனந்தன் : பாகம் மூன்று : அம்பி குரூப்


"டேய்.. இங்க எழும்பி வாடா.."
"என்ன சார்..?"
சடார் படார் எண்டு கை, கால், தோள், தலை எண்டு கண்மண் தெரியாமல் அடிவிழுகிறது.
"இவருக்கு.. இப்ப.. ஏன்.. அடிவிழுது.. எண்டால்..." பூசையை நிப்பாட்டாது.. "நீ என்ன பெரிய ரௌடியாடா..? "
"இல்லை சார்.. நீங்க தான் அப்பிடி சொல்லுறியள்."
"என்னையே எதிர்த்து கதைக்கிறியா..?" குருவானவரின் பூசை இப்போது அதி தீவிரமடைகிறது..
"நீ இப்ப என்ன செய்யிறாய் எண்டால் உண்ட அப்பாவையும் அம்மாவையும் சைக்கிள் ரிக்சாவில பின்னால ஏத்திக்கொண்டு 'சுன்னாகத்திலையே நான் தான் பெரிய ரவுடி' எண்டு கத்திக்கொண்டு போ.. " அடி இன்னும் நிற்கவில்லை இருந்தும், அந்த இக்கட்டான சூழலிலும் மிகவும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு
"நீங்க பெரிய ரவுடி எண்டு சொல்றத்துக்கு ஏன் சார் என்ர அம்மா அப்பாவை ஏத்திக்கொண்டு போகணும்?"
ஒரு கணம் திகைத்த குருவானவர், உடனே சுதாகரித்துக்கொண்டு நாலாவது சாம பூசையை தொடங்குமுன் நம்மாள் எஸ்கேப்.

இது நடந்தது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு யாழ் இந்துக் கல்லூரி, ஆண்டு ஆறு வகுப்பறையில்..

ஆண்டு ஐந்து புலமைப் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்துவிட்டோம் / யாழ் இந்துக்கல்லூரியில் இடம் பிடித்துவிட்டோம் என்ற மமதையில் செல்பவர்களுக்கு / இந்தப் பிறவியிலேயே திருத்தமுடியாத தறுதலைகள் என்று பெரெடுத்தவர்களுக்கு அன்று சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான், அம்பி என்கிற அம்பிகைபாகன் சார். அவரது அடிகளும் பேச்சுக்களும் மிகவும் பிரசித்தமானவை. உதாரணத்துக்கு "செப்பமான அடியும் 0 மார்க்சும்", "ரிப்போர்ட் மற்றும் அந்த நீலப் படிவம்" என்று எதுகை மேனையுடன் பேசுவது மட்டுமல்லாது அதற்க்கேற்றவாறு தாளம் போடுவதுபோல் அவரது கையசைந்து முன்னால் நின்றிருப்பவரின் கை, கால், தோள், தலை எண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பட படவென்று நல்ல அடி விழும்.

இவ்வாறாக அன்று அவரிடம் படித்தவர்கள் / அடிவாங்கியவர்கள் ஒருசிலர் தொடங்கிய குழுதான் இந்த 'அம்பி குரூப்'. பார்க்கத்தான் இவர்கள் அம்பி மாதிரி ஆனா பண்ணிய அழிச்சாட்டியங்கள் எல்லாமே அந்நியன் தான். இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த குரூப் வளர்ந்தது போலவே அவர்களது குழப்படிகளும் கட்டுக்கடங்காமல் போனது. (தலை முடி தான் சரியா வளரலை)

'Ambi' Group

உதாரணத்துக்கு சில..

"டேய் அனந்தன். நான் இண்டைக்கு சொல்லுறன் நல்லா கேட்டுக் கொள். இந்த வகுப்பில இண்டைக்கு இருக்கிற எல்லாரும் கம்பஸ் என்ட்டர் பண்ணி போனாலும் நீ மட்டும் கடைசி வரைக்கும் என்ட்டர் பண்ணாமல் கட்டுறத்துக்கு பொம்பிளையும் கிடைக்காமல் தெருத்தெருவா அலைய போறாய். வேணுமெண்டா இருந்து பார்." அப்பிடின்னு சபித்த ஒரு ஆசிரியரை வழியில் மடக்கி "சார்.. இப்ப நான் கொழும்பு கம்பஸ்ல செகண்ட் இயர் படிக்கிறன்." என்று சொன்னதை கேட்டாரோ இல்லையோ பக்கத்தில் முகம் வெளிறியபடி நின்றிருந்த என்னை திரும்பி ஒருதரம் மேலும் கீழும் பார்த்தார்.

இன்னொரு ஆசிரியர் தினமும் வகுப்புக்கு வந்ததும் முதல் வேலையாய் "அனந்தன். எழும்பும். கொப்பியை எடும். இங்கை வாரும். வெளிய போம்." என்று சொல்லிவிட்டு தான் பாடத்தையே ஆரம்பிப்பார். நம்மாளும் லேசுப்பட்டவரில்லையே.. சில நாட்களிலேயே ஆசிரியர் வந்ததும் அவருக்கு வேலை வைக்காமல், தனக்குத் தானே "அனந்தன். எழும்பும். கொப்பியை எடும்.  வெளிய போம்." என்று சொல்லிவிட்டு மரியாதையாய் கொப்பியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுவார்.

இன்னொரு ஆசிரியர் சொன்னது, "அனந்தன் நீர் ஒருத்தன் பண்ணுற தலையிடியால நான் ஒவ்வொருநாளும் நாலு பனடோல் சாப்பிட வேண்டி இருக்கு".

இப்படியாக, இவர் ஒருவர் மேல் அத்தனை ஆசிரியரும் சொல்லிவைத்தால் போல் கோபப்பட அப்படி என்ன காரணம் இருக்க முடியும். 'ஒன்றா இரண்டா இவன் பண்ணியது..? சிவனின் திருவிளையாடல் போல சொல்ல தொடங்கினால் விடிய விடிய நாள் கணக்கில் சொல்லிக்கொண்டே இருக்கலாம்' என இவரது நெருங்கிய நண்பர்கள் / அம்பி குரூப் அங்கத்தவர்கள் சொல்லுவார்கள். ஏதோ எனக்குத் தெரிந்த ஒரு சிலவற்றில் இரண்டை மட்டும் இங்கே தருகிறேன்.

1. புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள ஒரு ஆசிரியரின் வகுப்பில் ஒருநாள் அவர் குடித்து முடித்த மிகுதிக் கட்டைகளை கண்டுபிடித்து அவருக்குத் தெரியாமல் பொறுக்கியெடுத்துக்கொண்டுவந்து அவரது மேசையிலேயே அடுக்கிவைத்துவிட்டு, அவர் வந்ததும் "பாருங்க சார் பாருங்க.. யாரோ ஒரு பொறுக்கிப்பயல்.. எங்கட ஸ்கூல் வளாகத்துக்குள்ள சிகரட் பிடிக்கிறான். இவங்களையெல்லாம் ஸ்கூல் உள்ளயே விடக்கூடாது." அப்பிட்டின்னு ரொம்ப அப்பாவியாய் ஒரு கம்ப்ளைன்ட் பண்ணியது.

2. பிரபல பெண்கள் கல்லூரியின் கண்காட்சிக்கு திருவாளர் அனந்தன் வகுப்புத் தலைவனாக இருந்த உயர்தர வகுப்பை மட்டும் அனுமதிக்காததால் எல்லோரையும் கூட்டிக்கொண்டு கள்ளமாய் சாதாரண உடையில் அந்த மகளிர் கல்லூரியினுள் மதிலேறிக் குதித்து நுழைந்தது மட்டுமல்லாது   கூடப்படிக்கும் மாணவியின் தலை முடி என நினைத்து அந்தப் பாடசாலை அதிபரின் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுத்தது. தவறுணர்ந்து கோபத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்த அவரிடம் ஒருவாறு மன்னிப்புக் கேட்டுவிட்டு திரும்பிப் பார்த்தால் கனல் கக்கும் விழிகளுடன் அருகில் நின்றிருந்தது இவர்களது கல்லூரி அதிபர்.

நிற்க, இந்த 'அம்பி குரூப்' அங்கத்தவர்கள் அனைவரும் இன்று தத்தமது துறையில் பேர் சொல்லும் வகையில் தான் இருக்கிறார்கள். இலங்கையில் பிரபல சங்கீத வித்துவான் ஆரூரன், MIT இல் ஒரு பிரபல புள்ளியாக வளர்ந்திருக்கும் பிரசன்னா, வைத்திய நிபுணர் பிரம்மா, சிங்கப்பூரில் நெட்வொர்க் specialist அனந்தன், கட்டடத் துறையில் நைனா எனப்படும் ஜெயந்தன், வடிவமைப்பு துறையில் ஐங்கரன், கணணி துறையில் மயூரன் மற்றும் உலகளவில் இன்னும் பலர்..

எட்டு வருடங்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் தம்பதி சமேதரராக திருவாளர் அனந்தன் அமர்ந்திருக்கிறார். அட்சதை போட ஒவ்வொருவராக வருகின்றனர். எனக்குத் தெரியாதவர்களை அனந்தனும், அனந்தனுக்குத் தெரியாதவர்களை நானுமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  முகத்தில் சிறு புன்முறுவலுடன் அடுத்து வருபவர் எனது நெருங்கிய நண்பியின் தந்தை. நான் வாய் திறக்குமுன், சடாரென்று "சார் என்னை தெரியுதா..?" என்ற அனந்தனை நான் கிலியுடன் பார்க்க, வந்தவரோ அதே புன்முறுவல் மாறாத முகத்துடன் தெரியும் என்பதுபோல் தலையை ஆட்டி பின் எம்மை ஆசீர்வதித்துச் சென்றார். அவர் வேறுயாருமல்ல.. இவர்களது குரூப் உருவாக காரணகர்த்தாவான சட்சாத் அதே அம்பிகைபாகன் சார் தான்.
 
அவர்களுக்குத் தெரிந்திருக்கும் இவர்கள் இப்படித்தான் என்று. ஏனெனில் அவர்களும் ஒரு காலத்தில் இவர்களைப் போல் (?) மாணவர்களாக இருந்தவர்கள் தானே..

முன்னைய பதிவுகள்..
யோ. அனந்தன்: பாகம் ஒன்று
யோ. அனந்தன்: பாகம் இரண்டு

பி.கு: இவை அனைத்தும் கல்லூரி குறும்புகள் மட்டுமே. பிரத்தியேக வகுப்புக்களில் நடைபெற்றவை தனி. அவற்றில் பல (பெண்கள் சம்பந்தப் பட்டிருப்பதால்) என்னிடமிருந்து மறைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)