எல்லாமே பொய் என்று சொல்வாயா?


"அப்போ இனிமே பேசிறதில்லை எண்டு முடிவு பண்ணீட்டிங்க அப்படித்தானே?" அவனிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அவள் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று முன்புதான் போன் பண்ணியபோது ஏதோ நண்பனின் திருமணத்தில் இருப்பதாய் சொல்லியிருந்தான். இரவிரவாய் மணிக்கணக்கில் இருந்து சட் பண்ணிய நாட்கள் வெறும் கனவுபோல வந்து போனது. அவன் எதற்காய் அவளிடமிருந்து விலகிட நினைக்கிறான் என்று புரியவில்லை. என்னதான் அவர்கள் "No Emotions.. No Relationship.." என்று சொல்லிக்கொண்டாலுமே அவள் தன்னைக் காதலிப்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அன்பில்லாமல் உடம்பை மட்டும் கொடுப்பதற்கு அவள் தெருவோர விபச்சாரியா என்ன..?
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
ஒருமணி நேரம் கடந்திருக்கும். அவன் ஆன்லைனுக்கு வந்துவிட்டான். மனம் துள்ளியது. ஆனால் அடுத்த கணமே அவன் என்ன சொல்லப்போகிறானோ என்ற பயம் சிறிதே தொற்றிக்கொண்டது. முன்புபோல் இல்லாவிடினும் அப்பப்போ பேசிச்செல்லும் சில வார்த்தைகளைக் கூட நிறுத்திவிடுவானோ என்று பயமாக இருந்தது. 'பேசாவிட்டால் போகட்டும் ஆனால் இன்று ஒரு முடிவு தெரிந்தே ஆகவேண்டும். பதிலே தெரியாமல் தினம் தினம் செத்துப் பிழைப்பதற்கு, பதிலை அறிந்துவிட்டு ஒரேயடியாய் சாவது மேல்... சே இதுக்கெல்லாம் போய் சாவார்களா என்ன..? காதலாவது மண்ணாங்கட்டியாவது.. இந்த உலகத்தில இவன் மட்டும் தான் ஆ..?' மேற்கொண்டு எதையும் நினைக்க முடியவில்லை மூளையே ஸ்தம்பித்து விட்டதுபோல் இருந்தது.
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல்
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய் என்று சொல்வாயா?  
"அப்பிடி இல்லையப்ப்ப்ப்பா...." திரையின் பாதிவரை நீட்டி முழக்கி விரிந்தது அவனது பதில். என்னதான் கோபமாக இருந்தாலுமே அவனது ஒவ்வோர் வார்த்தைகளையும் அவள் ரசித்திருக்கிறாள். இன்றும் அப்படித்தான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமலே..
"அப்போ என்னவாம்..?"
பப்பியொன்று மெல்ல எட்டிப்பார்த்து தலையை சரித்து அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டது.
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா 
"என்ன ரியாக்சன் இது?" இப்படித்தான் அடிக்கடி அவள் ஏதாவது முக்கியமாய் பேசிட்டிருக்கும்போது பதில் வராது. பப்பிதான் ஒவ்வொரு ரியாக்சனில வந்து போகும். எரிச்சலாய் வந்தது. "நீங்க மட்டும் இப்ப எண்ட கையில கிடைச்சீங்க கொன்னுருவன்"
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா?
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா ..!!
"ஹிஹிஹி.. அவ்ளோ கோபமா?"
"கோபம் இல்லை. கொலைவெறி.."
"நோ மா.. அது தப்பு.. காம் டவுன் காம் டவுன்.."

அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. சே.. யார் எப்படிப் போனால் அவளுக்கென்ன? இதற்க்கு மேல் அவன் எதுவும் பிடிகொடுத்துப் பேசுவான் போல் தெரியவில்லை. அவனைப் பொருத்தவரை உடலைத் தொட்டதில் வேண்டுமென்றால் அவள் முதலாய் இருக்கலாம் ஆனால் மனதைத் தொட முடியவில்லையே..? மனதில் அன்பில்லாது உடலை மட்டும் தொட்டின்புற இந்த ஆண்களால் மட்டும் எப்படி முடிகிறது? ஆனால் தன் தோள்மீது சாய்ந்தவளை, இலாவகமாக சுற்றி அணைத்த அவனது கைகளின் இறுக்கம், விரல்களின் நெருக்கம் காதலை சொல்லியதே? அதுகூட பொய்தானா? நினைக்க நினைக்க தலை சுற்றியது. 
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் எந்தன் காதல் வாட ..
உனது ஆளுமையை ரசிக்கிறேன் என்றவன் தான் இன்று குடும்பத்தில் ஆண்களுக்கு பெண் அடங்கியிருத்தல் அழகு என்கிறான். மார்டன் உடையில் வரச் சொல்லியவன் இன்று, குடும்ப குத்துவிளக்குகளே அழகு என்கிறான். எதனால் இந்த திடீர் மாற்றம்? ஒரே நாளில் ஒருவனின் குணம் ரசனை எல்லாமே இப்படி தலை கீழாய் மாறிவிடுமா என்ன? இல்லையெனின் அவள் வெறுக்க வேண்டும் என்பதற்காய் இப்படியெல்லாம் நாடகமாடுகிறானா..? அவனது ஆளுமைக்குள் அவள் என்றோ அடங்கிவிட்டாள் என்பது கூட அவன் அறியாததா..? இல்லாவிட்டால்.. வேறேதும்..? கண்ணாடி முன்னின்று ஒருமுறை கீழிருந்து மேலாய் பார்த்தாள். கண்களைச் சுற்றிய கருவளையம் இப்போ சற்றே ஆழமாகத் தெரிந்தது.
சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா?
மீண்டும் சென்று போனில் அவனுடனான இதுவரை கால உரையாடல்களை மீண்டுமொருதரம் எடுத்துப் பார்க்கிறாள். எவ்வளவு இனிமையான தருணங்கள் அவை. கவலைகளே இல்லாத, ஜாலியான உரையாடல்கள். சின்ன சின்ன குறும்புகள், சிரிப்புகள், நாணல்கள்..
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
இறுதியில் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. சென்றது. அதன் பின் அவன் பேச்சினை வெகுவாகக் குறைத்துக்கொண்டான். திடீரென்று ஒரு நாள் அவனிடமிருந்து எந்த பதிலுமே இல்லை. ஒரு நாள்.. இரண்டு நாள்.. மூன்று நாள்.. ஒருவேளை அந்த 'ஒருநாள்' மட்டும் அவர்கள் வாழ்வில் வந்திருக்காவிட்டால் அவையெல்லாம் அப்படியே இருந்திருக்குமோ? அவனும் கூட முன்பு போல சகஜமாகவே உரையாடியிருப்பானோ? அவளுக்கு கூட அவன் மேல் இத்தனை இணைப்பு/ஈர்ப்பு ஏற்பட்டிருக்காதோ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..?
"அப்போ இனிமே பேசிறதில்லை எண்டு முடிவு பண்ணீட்டிங்க அப்படித்தானே?" அவனிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அவள் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)