கனவுகளைத் தேடி அலையும் பெயரிலிகளும் அவர்கள்தம் கனவுகளும்
கனவுகளைத் தேடி அலையும் பெயரிலிகளும் அவர்கள்தம் கனவுகளும்
கனவுகளைத் தேடி - 2015, பெயரிலி - 2016
நாவலாசிரியர்: கௌரி அனந்தன்
விமர்சனம் : முனைவர் தோழா் பெருமா. செல்வ. இராசேசு
கனவுகளைத் தேடி - 2015, பெயரிலி - 2016
நாவலாசிரியர்: கௌரி அனந்தன்
விமர்சனம் : முனைவர் தோழா் பெருமா. செல்வ. இராசேசு
கௌரி அனந்தன் அவர்களின் இரண்டு நாவல்களை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு நாவலும் இரண்டு விதமானவை. இரண்டையும் தனித்தனியே பேசலாம். அந்தளவுக்கு மொழி வளமும், கதையாடல் திறனும்; மிக்கவை. “கனவுகளைத் தேடி” நாவல் சாதாரண கதையுக்தியைக் கொண்டீருக்க, “பெயரிலியோ” மாய எதார்த்தவாத தன்மையைக் கொண்டு படிப்பவரின் மனதை விடாமல் நாவலுக்குள்ளேயே பயணிக்கச் செய்கிறது. இரண்டும் வௌ;வேறு மையங்களில்; இயங்கிக்; கொண்டிருந்தாலும், அவை பயணிக்கும் பாதையும் அந்தப் பாதைகள் நெடுகிலும் ஆசிரியர் கொண்டு நிறுத்தும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் மிகவும் செறிவானவை. சுவாரசியமானவை.
“கனவுகளைத் தேடி” நாவல் பெண்ணியம், சுதந்திரம், அடக்குமுறைக்கு எதிரான போராட்டம், சுதந்திரத்தாகம் எனப் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. இது இந்நாவலாசிரியரின் முதல் நாவல் என்பதை நம்மால் நம்பமுடியவில்லை. காரணம், மொழிநடை. கதையுக்தி, கதையாடல் தன்மை போன்றவை இவரை ஒரு சிறந்த எழுத்தாளராக அடையாளப்படுத்துகிறது. இலக்கிய வாசிப்பில் வேண்டுமென்றே தொய்வைக் கொடுத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மீண்டும் இலக்கிய பரப்பிற்குள் பயணிக்க வேண்டும் என்கிற ஆவலையும் விருப்பத்தையும் இதுபோன்ற நாவல்களே ஏற்படுத்துகின்றன. தற்போதைய எனது இலக்கிய வாசிப்பு என்பது தமிழை விட்டு மலையாள இலக்கிய பரப்பில் பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற படைப்புகள் தமிழின்மீதும் இதுபோன்ற படைப்புகள்மீதும் விருப்பத்தைக் கூட்டியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் இந்த நாவலாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
மைதிலியிடம் மூதாட்டி ஒருவர் கூறுவதாக இடம்பெறும்,
“இவளோட காலத்திலை நிலமை எப்படியெல்லாம் மாறுமோ தெரியாது. ஆனா நாங்கள் உயிரோடை இருக்கும் வரைக்கும் எங்கடை ஒற்றுமையை விட்டுக் கொடுக்க மாட்டம். வீடு, காணி எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். முப்பது வருஷமா ஏதாவது தீர்வு வரும் எண்டு காத்திருந்தம். இப்பவும் காத்திருக்கிறம். இப்படி காத்திருக்கிறதொண்டும் எங்களுக்குப் புதுசில்லையே” (பக்.93,94) எனும். வரிகள், எவ்வளவு உண்மையானவை. கனவு என எளிதில் பலவற்றையும் தூக்கிப்போடும் நம் மனங்கள் கனவுகளின் மீதூன் ஊன்றப்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு அழகாகக் கூறிச் செல்கிறது.
“கனவுகளைக் காதலிப்பீர்
கனவுகள்தான் உலகம்
கனவுகளே வாழ்க்கை
கனவுகளே சாசுவதம்” என்னும் கவிதை வரிகள் நமக்குக் கனவின் முக்கியத்துவத்தை உணர்த்திப் போவதோடு, நாவலாசிரியரின் கவிதை மனதையும் புலப்படுத்துகிறது. கனவுகளே மனிதர்களை நாளைய நிஜங்கள் நோக்கி நகர்த்திப் போகிறது என்பதை இந்த நாவல் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த நாவலின் மொழிநடையும்; மொழியைப் பயன்படுத்தியிருக்கும் நுட்பமும் தற்கால தமிழ் நாவலாசிரியர்களிடம் காண முடியாதது. தான்தான் பெரிய எழுத்தாளர்கள் என்று மெச்சித் திரியும் படைப்பாளிகளிடம்கூட இல்லாதது. இது இவரின்மீது இன்னும் அதிக எதிர்பார்ப்புகளை வைக்கிறது. அதனை அவரது இரண்டாவது நாவல் முழுமையாக தீர்த்து வைக்கிறபோது, நம் நம்பிக்கை வீணாகவில்லை என்னும் உணர்வு மேலிடுகிறது. இவரது இன்னொரு தனித்துவம், கதை நகரும் போக்கில் வாழ்வின் அனைத்து விஷயங்களையும் தொட்டுச் செல்லும் போக்கு. அதைப் பற்றிய விமர்சனங்களை வாசகர் மனதில் விட்டுவிட்டு ஒரு துறவியாகப் பயணிக்கும் எழுத்துகள்.
தத்துவம் பேசுகிறேன் என்னும் போர்வையில் வாசக மனதைத் துன்பபப்படுத்தவில்லை. தான் கண்டுணர்ந்த, அனுபவித்தவற்றைப் பாத்திரப்படைப்பின் பார்வையில் பேசிவிடுவது இந்த நாவலில் மற்றுமொரு சிறப்பு. சிறந்த படைப்பு என்பதும், படைப்பாளனின் திறமை என்பதும் படைப்பில் வெளிப்படும் கதாப்பாத்திரங்களாகக் கதாசிரியர் மாறிவிடும்போதுமட்டும்தான் சாத்தியமாகும். அது இவருக்கு கைவந்துள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாம்சங்கள். அதிலும் குறிப்பாக மீனாட்சியின் பாத்திரப்படைப்பு நம்மையும் மீனாட்சியின் பாத்திரமாகக் கூடுவிட்டு கூடுமாற்றிப் போகிறது. அவளோடு சேர்ந்து பாடச் செய்கிறது. அவளோடு சேர்ந்து கொள்ளச் சொல்கிறது.
பெண் என்பவள் இங்கு எப்படிப் பார்க்கப்படுகிறாள் என்பதையும், அவளுக்கான உலகம் இதுதான் என மதங்களாலும், கடவுள் பெயர்களாலும் ஒரு உலகத்தைக் கட்டியெழுப்பிய இந்த ஆணிய சமூகம் பற்றிய தனது பார்வையை ஆசிரியர்
“உலகம் பூராவும் பரந்து வாழும் ஒழுக்க சீலர்களான எமது மறத்தமிழர்களிடையே பரவி, வாழ்நாளில் பிற பெண்களை ஏறெடுத்துமே பார்த்திருக்காத, அந்த அதியுத்தமர்கள் வெகு இலகுவில் நீலாவினை விபச்சாரி ஆக்கி விடுவார்களே” என கொதிக்கும்போதும் (ப.32),
“உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத மிருகங்கள் என்றால் போய் மிருகங்களை புணர்வதுதானே” (ப.46) எனக் கேட்கும்போது நாவலாசிரியரின் கோபம் நமக்குள்ளும் அக்கினிக்குஞ்சை அள்ளித் தெளித்து விடுகிறது. இந்தச் சமூகம் எந்தளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்றும் எண்ண வைத்து விடுவதோடு, இதற்காய் நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வியையும் நமக்குள் கேட்டுவிடுகிறது.
“தப்பு செய்தவங்க வெளியே சந்தோசமா சுதந்திரமா சுத்திக் கொண்டிருக்க பாதிக்கப்பட்ட நாங்க மட்டும் எதுக்கு கூனிக்குறுகிக் கொண்டு இருக்க வேணும்? அதிலையும் தேடிச் சோறு நிதந் தின்னாமல்” (ப.51) என மைதிலி கூறும் கூற்று சத்தியாவுக்கு மட்டுமல்ல நமக்குள்ளும் இந்த வாழ்க்கையைப் பாரதி சொன்னபடி வாழ்ந்துவிட வேண்டுமென்று நம்பிக்கையை விதைத்து விடுகிறது. அனைத்தையும் இழந்த வடிவம்மை, மூதாட்டி, மூதாட்டியின் பேத்தி, மைதிலி, நந்தா என ஓர் இழப்பின் உலகத்தை நாவலினூடே எந்தவிவத ஒப்பாரியும் இல்லாமல் சொல்லிச் செல்கிறது நாவல். ஆனால், வாசக மனம் என்னவோ ஒப்பாரி வைப்பதை நிறுத்த நாவலைப் படித்து முடித்த பின்னரும் மறுக்கிறது.
பெருமுதலாளிகளும் அவர்களது உலகைச் சீரழிக்கும் தொழில்களும் எப்படிப்பட்டவை என்பதை “கிணத்துத் தண்ணிதான். ஆனா நீங்க பயப்பிடாம குடிக்கலாம். இங்காலைப்பக்கம் இன்னும் கிணத்துல எண்ணெய் கலக்கேலை” (ப.81) என்னும் வரிகள் செவிட்டில் அடி;த்தாற்போல் உரக்கச் சொல்கிறது. தற்போதைய சூழலில் இதுபோன்ற அக்கிரமங்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு இது போன்ற படைப்பாளிகளும் போராட்டக்காரர்களும்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.
சமகால அரசியலை, சமகால அரசியல் நிலையையும், ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையையும் “சரியான தலைமைத்துவம் இல்லாது எமது அடுத்த தலைமுறை பிளவுபட்டுப் போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது” (ப.78) எனும் கூற்று இலங்கை மண்ணுக்கு மட்டுமல்ல தமிழ் மண்ணுக்கும் பொருந்தும். இதுதான் சிறந்த ஒரு படைப்பாளியின் காலம் பற்றிய அவதானிப்பு. அந்த அவதானிப்பு இந்த நாவலாசிரியரிடமும் உள்ளது என்பது அவரது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் வாசிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது எனலாம்.
இடம்பெயர்வு வாழ்வு என்பது எப்படிப்பட்டது, அதன் துயரம் எப்படி தொடர்;கிறது என்பதை “என்ன சமாதானம் வந்து என்ன? எங்கடை சொந்த இடத்திலை போயிருக்கேலாமக் கிடக்குது. பிறகெதுக்கு இந்த எலக்சனும் மண்ணாங்கட்டியும்” (ப.92)எவ்வளவு வலிமையான வார்த்தைகள். அதுவும் ஒன்றுமறியாத வயதான மூதாட்டியிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தை வரும் என்று நாம் எதிர்பார்க்க மாட்டோம். வாழ்க்கை கொடுத்த அனுபவப் பாடம் மூதாட்டியின் குரல் வழியாக ஆசிரியர் வெளியிடுவது ஆசிரியரது சமூகக் கோபத்தையும் இலங்கை மண்ணில் தமிழர்கள் நிலையையும் தெளிவாகக் காட்டிவிடுகிறது.
“எங்கடை மானம் மரியாதையை அடகு வைச்சு பெறப்போற தீர்வைவிட, எங்கட சுயமரியாதையோட இருந்துகொண்டு தீர்வைப் பெற்றுக் கொள்ளுறதுக்குக் காத்திருக்கிறது ஒண்டும் பிழையில்லைதானே” (ப.95) என்னும் வரிகள் அரசியல் அதிகாரத்திற்காக முதுகொடிந்து கிடக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் தமிழக மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கச் செய்கிறது.
“கனவுகளைத் தேடி” நாவல் அற்புதமான படைப்பு எனச் சொல்லி விடலாம். இந்நாவல் இன்றைய அனைத்துப் பிரச்சினைகளையும் பேசுகிறது. அரசியல், பெண்ணியம், சுதந்திரம், அடிமைத்துவம், காதல், மறுமணம், பெண்விடுதலை, இடம்பெயர்வு வாழ்வு என அனைத்தையும் பேசுகிறது. என்றாலும் அதை ஒரு பிரச்சாரமாகப் பேசவில்லை. அதையே ஒரு முக்கிய பாடு பொருளாகக் கொண்டு பேசவில்லை என்பதுதான் இந்நாவலின் தனித்தன்மையும் சிறப்பும் கூட. இந்நாவலின் வெற்றியும்கூட. அந்தவகையில் நாவலாசிரியர் நம் பாராட்டுக்குரியவராகிறார் என்பதோடு கொண்டாடப்பட வேண்டியவருமாகிறார்
“பெயரிலி” கௌரி அனந்தன் அவர்களின் இரண்டாவது நாவல். பூவரசி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது (2016 ஆகஸ்டு). முந்தைய கனவுகளைத் தேடி நாவலிலிருந்து முழுவதும் மாறுபட்ட தன்மையில் அமைந்த நாவல். அழகிய ஒரு காதல் கதையை மாய எதார்த்தத் தன்மையோடு பேசியிருக்கிறது. சிறந்த கதையாளர் கௌரி அனந்தன் என்பதை இந்நாவலும் வெளிப்படுத்துகிறது. வருண், ஜானு வழியாக நகரும் கதை நாடுவிட்டு நாடு பயணித்து இலங்கையில் மையம் கொண்டு அங்கேயே நிறைவடைகிறது. தாய்நாட்டின் மீதான விருப்பம், விவசாயத்தின் மீதான நாட்டம் எனக் கதை தமிழ்ப் பாரம்பரியத்தைத் தேடிப் பயணிக்கிறது. அதற்கு மாயாவாதமும் விறுவிறுப்பும் சிறப்பாகவே கைகொடுத்துள்ளது. ஒரு துப்பறியம் நாவலை வாசித்த அனுபவம். அடுத்த என்ன? என்னும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு அத்தியாயத்திற்குள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு அடியிலும் ஏற்படுத்தி நகரும் நாவல் அங்கங்கே ஆசிரியரின் மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் விதைத்துச் செல்கிறது.
ஆண், பெண் பற்றிய விமர்சனமாக வருணுக்கும் சின்னய்யாவுக்கும் இடையே நடைபெறும் விவாதம் சாதாரண மனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதோடு, வருணைப் போலவே திகைப்படையவும் வைக்கிறது.
“அங்க போய் வெறும் கல்லுக்கு முன்னால சாஸ்டாங்கமாய் விழுந்து கும்பிட ஏலும். ஆனால, காலம் முழுக்க உனக்காகவேயிருந்து உன்னோட சுகதுக்கங்களைப் பகிர்ந்துக்கிற ஒருத்தியோட கால்ல விழுறத மட்டும் கசக்குதோ”
“அது கடவுள்… கடவுளும் மனுசனும் ஒண்டா”
“அது உனக்குத்தான் கடவுள். வேற மதத்துக்காரன கேட்டுப்பார். வெறும் கல்லுண்ணதான் சொல்லுவான். எல்லாம் அவரவற்றை நம்பிக்கைகளைப் பொறுத்தது. அதுபோலத்தான் மற்றவைக்கு வித்தியா வெறுமனே ஒரு பெண்ணாக இருக்கலாம். ஆனா ஸீ இஸ் மைலைப். ஷீ இஸ் எவ்ரிதிங் ட மி” (ப.33).
எவ்வளவு அற்புதமான விவாதம். என்னைப் போன்றவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம். அதை எவ்வளவு நாசுக்காக நாவலாசிரியர் வெளிப்படுத்தி விடுகிறார். தண்ணீர்தேசம் நாவலில் வரும் ஆண், பெண் பற்றி வைரமுத்து கூறும் விளக்கம் அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்றதொரு மதிப்பும் மரியாதையும் நாவலாசிரியரின் மீதும் ; ஏற்பட்டுள்ளது என்பதை மறைக்காமல் கூறத்தான் வேண்டும்.
இருக்கிறதா? இல்லையா, என்றே தெரியாத ஒன்றின்மீது பற்றும் மதிப்பும் வைக்கும் நீ, உனக்காக வாழ்ந்து, உனக்காக இறக்கும், உயிரோடு நடமாடும் பெண் மீது வைத்தாலென்ன? என்று கேட்பது நாவலாசிரியரின் ஏக்கமாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. இந்த பெண்ணினத்தின் வரலாற்று ஏக்கமாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.
இரண்டு நாவல்களும் நாவலாசிரியரின் எழுத்தாற்றலையும் உலக அறிவையும் கதை சொல்லும் திறனுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவரிடமிருந்து இலங்கையின் சமகால வரலாற்றை, இந்நாவல்கள் போன்று உவத்தல் காய்தலற்ற நாவலாக எதிர்பார்க்கிறேன். அதற்கான திறமை அவரிடத்திலுள்ளது. காரணம், வருங்கால தமிழர் வரலாறு என்பது இலங்கை எழுத்துகளில்தான் காணமுடியும் என்பதில் உறுதியாக இருப்பவன். தமிழனை தமிழனாக அடையாளப்படுத்தக்கூடிய இலக்கியங்களாக அயலகத் தமிழ் இலக்கியங்களே திகழ முடியும். அதிலும் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் படைப்புகளில்தான் தமிழர்களைக் காண முடியும். நாவலில் குறைகள் ஒன்றுமே இல்லையா என்று நீங்கள் கேட்பது கெட்கிறது எனக்கு. குறைகள் இருக்கிறது. அது சுட்டிக் காட்டும் வண்ணம் பெரும் குறைகள் அல்ல. சின்னச் சின்ன ஒற்றுப் பிழைகள். அதுவும் பெரிய பிழையல்ல. அறியாமல் இடம்பெற்றுவிட் குறைகளாகவே காணமுடிகிறது. அடுத்த பதிப்பில் அது நிவிர்த்தி செய்யப்படும். அத்தோடு பெயரிலி நாவலில் பக்கம் அத்தியாயம் பத்தில், 58 - ஆவது பக்கத்தில் வரும் விவரணையில், வருண் சின்னய்யாவின் வண்டியில் தனியாகச் சுடுகாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, அடுத்த அத்தியாயத்தில் வழக்குரைஞரும் வருணுடன் வருவதாகக் கூறியுள்ளது சிறிது குழப்பமாகவும் அமைந்துள்ளது. மற்றபடி சிறந்த இரு நாவல்களை வாசித்த மனத் திருப்தியை இந்த நாவல்கள் அளித்தன. நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
கருத்துகள்